பள்ளி எரிந்ததால் கிடைத்த இரண்டு நாட்கள் பள்ளிவிடுமுறையில் அனைவரும் சிதறி கிடந்தோம். நேரில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் பேசிக்கொள்வதைத் தவிர்த்தோம். அனைவர் மனதிலும் (சுமார் 4 பேர்) ஒரு வகையான இறுக்கம் குடிக்கொண்டிருந்தது. எங்களுடன் நெருங்கி இருந்த பல நண்பர்களுக்குக் கூட எங்களின் தனிமைக்குக் காரணம் தெரியாமல் இருந்தது. நண்பர்களுக்கும் அவரவர் வீட்டின் அறை ஒருவகை பாதுகாப்புணர்வை கொடுத்திருக்க வேண்டும்.
விடுமுறைக்குப் பிறகு போலிஸ்காரர்கள் பள்ளிக்கு வந்தனர். எங்களைவிட வயதில் குறைந்த ஓர் நண்பனை கைது செய்தனர். அந்த மாணவன் அடிக்கடி சில்லரை திருட்டின் காரணமாகச் சிறைக்குச் செல்பவனாக இருந்ததாலும் பள்ளிக்கூடம் தீப்பிடித்த அன்று அவனை பள்ளி வளாகத்தில் பார்த்ததாகக் கிடைத்த சாட்சியத்தாலும் அவன் குற்றவாளியாக்கப்பட்டான். நாங்கள் செய்வதறியாது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். பய உணர்ச்சியின் காரணமாக மௌனித்திருந்த வேறு இரு கிருஸ்தவ நண்பர்கள் முற்றிலுமாக என்னுடனும் சரவணனுடனும் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். (இன்றுவரையும் பேசுவதில்லை)
அடுத்தடுத்து வந்த நாட்களில் பள்ளியில் ஒரு வகையான அமைதி நிலவுவதைக் காண முடிந்தது. மாணவர்களிடையே எந்த வகையான சச்சரவுகளும் இல்லை. பள்ளி எரிப்புச் சம்பவம் எல்லோர் மனதிலும் வெவ்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தியே இருந்தது. இரண்டு மோட்டாரில் வராமல் நானும் சரவணனும் ஒரே மோட்டரில் வரத் தொடங்கியிருந்தோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது என்பதால் மோட்டாரில் வரும்போது பேசிக்கொள்வதோடு சரி… வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் அமைதியைக் கடைப்பிடித்தோம். முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்வது உண்மையைப் பார்த்துக்கொள்வதற்கு நிகரானது. உண்மையைச் சந்திப்பதை நாங்கள் விரும்பவில்லை.
அப்போது எனக்கு அவள் தேவைப்பட்டாள். அவளிடம் நிச்சயம் ஒரு பாதுகாப்பான கூடு இருக்கும். அதில் பத்திரமாக இருக்கலாம் எனத் தோன்றியது. பெண்களின் உலகம் வெம்மையானது. அதற்குள் முழுதுமாகச் சரணாகதியாகும்போது புதிய உடைகளைத் தரித்துக்கொள்வதாகவும் புதிய காற்றைச் சுவாசிப்பதாகவும் தோன்றும். அங்கு வெளியில் நாம் காணும் பிரச்சனைகள் இல்லை… மாறாக அவர்களுக்கே உண்டான சில பிரச்சனைகளை கண்களுக்குத் தெரியாமல் சுமந்திருப்பார்கள். நான் மீண்டும் அவளை நாடிச் சென்ற போதுதான் நான் எத்தனை பெரிய கோழை என்பதை உணர்ந்தேன். அத்தனை நாள் நான் நம்பிய எனது கால்களும் கைகளும் உடலும் ஒன்றும் செய்ய வலுவற்றவையாக என்னைக் கேலி செய்தன.
போலிஸில் பிடிப்பட்ட நண்பன் காலுடைந்து ஜாமினில் வந்திருந்தான். காலின் மூட்டுப் பகுதி உடைந்து விட்டதாகக் கூறினான். அவன் குடும்பத்தார் வழக்கறிஞர் (கர்பால் சிங் என நினைவு) மூலமாக காலை உடைத்த போலிஸார் மீது வழக்குத் தொடுத்தனர். குற்றத்தை ஊர்ஜிதப்படுத்தாமல் பள்ளி உடையில் அவன் சிறையில் அடைத்த அராஜகம் பரபரப்பாகப் பத்திரிகைகளில் பேசப்பட்டன. அவன் காலுடைந்து கைதாங்கலாக வரும் படம் பலரையும் சினம் கொள்ளச்செய்தது. உறக்கம் வராமல் நான் கண்ணீர் விட்ட தினங்கள் அவை.
முக்கிய அறிவிப்பு:
(இந்த வார டைரி இன்னும் நீண்டிருக்க வேண்டும். எஸ்.பி.எம்.மில் (SPM) தமிழ்ப் பாடத்தின் நிலை ஒரு வகை மன உளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ‘எஸ்.பி.எம்மில் பத்துப்பாடங்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற அமைச்சரவையின் முடிவில் மாற்றம்… இனி 12 பாடங்கள் எடுக்கலாம்’ என ஆய்வு மனப்போக்கும் இல்லாதப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் நாம் கொண்டாட எந்த மகிழ்ச்சியும் இல்லை என்பதை பிறமொழி பத்திரிக்கைகளைப் படித்தப் பின்பே உணர வேண்டியுள்ளது.
“Pokoknya 10 subjek utama itu kekal tetapi memberi kelonggaran bahawa pelajar boleh membuat pilihan untuk mengambil mata pelajaran bahasa Cina atau Tamil dan sastera Cina atau sastera Tamil,” katanya kepada pemberita selepas mempengerusikan mesyuarat Majlis Tanah Negara Ke-65 di sini hari ini.
Beliau berkata keputusan mata pelajaran tambahan itu tidak akan diambil kira dalam pemberian biasiswa dan sebagainya.
“Mereka boleh mengambil 12 atau 11 subjek tetapi itu tidak mengambil kira dalam perkara 10 subjek asas dan elektif.
“Sebelum ini, mereka tidak boleh mengambil, jadi kita tidak mahu sekat dan memberi mereka kelonggaran,” katanya.
நன்றி : Malaysiakini
அதாவது:
1. தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.
3. தமிழாசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ், இலக்கியம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டிய கூற்று இது. வெறும் இடைநிலை பள்ளி மட்டுமல்லாது நாளை தமிழ்ப்பள்ளிகளின் வேரைக் கூட அசைத்துப்பார்க்கும் படியான முடிவாக இது உள்ளது. இதன் தொடர்பான விளக்கக் கூட்டம் தோட்ட மாளிகையில் வருகின்ற 12.12.2009 நடப்பதாக அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். காலை 10 மணிக்குத் தொடங்கும் இதில் அனைவரும் வந்து கலந்துகொள்வதன் வழி சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும் என நம்பலாம்.