பெண்களுடன் இருப்பதும், அவர்களின் உலகத்திற்குள் சஞ்சரிப்பதும் இன்பம் தரும் ஒன்றாக இருந்தது. பெண்கள் சிந்திப்பது… முடிவுகள் செய்வது… கோபம் கொள்வது என அனைத்துமே ஆண்களின் உலகத்தோடு சற்றும் சம்பந்தம் இல்லாததாகப் பட்டது. ஆயினும் அது பாதுகாப்பானது. அவர்கள் பேசுவதற்கு நிறைய செய்திகள் இருந்தன. நான் கவனிக்காத, கவனிக்கத் தவறிய பல விடயங்கள் அவர்களுக்கு முக்கியச் செய்திகளாக இருந்தன. உண்மையில் பெண்கள் பேசுவார்கள் என நான் நம்பிய எதையுமே அவர்கள் பேசாதவர்களாகவும் அவர்களுக்கான பேச்சு சிறு சிறு கிளைகள் விட்டு பிரிந்து கூர்மை கொள்வதாகவும் இருந்தன. அந்தப் பேச்சுகள் தரும் இன்பத்தை விட்டு நகர முடியாமல் அவர்களுடனேயே சில காலம் திரிந்தேன். அவளின் தோழிகள் எல்லாம் எனக்கும் தோழிகளாக மாறினர்.
கவிதைக்குத் தேவையான துல்லிய உணர்வலைகளை எந்த நூலும் மனிதனுக்குத் தருவதில்லை. மாறாக அவை நினைவின் மறைவிடத்தில் பதிந்துள்ள ஏதோ ஒரு நுண்ணிய உணர்வின் அதிர்வை அவ்வப்போது மீட்டுக்கொண்டுவர உதவுகிறது. இது போன்ற நுண்ணிய உணர்வுகள் பெண்களுடன் பழகும் போதுதான் எனக்குள் உசுப்பிவிடப்பட்டது. மிகக் குறைந்த பழக்கமுள்ள ஒரு தோழியால் கூட, காலத்திற்கும் அழிக்க இயலாத சில பதியன்களை மனதில் ஏற்ற முடிந்திருந்தது. பழகாதவரை பெண்கள் என்னுடன் பேச விரும்புவார்கள் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
பெண்களுடன் பேசத் தொடங்கிய போது எனக்குத் திக்குவாய் குறைந்தது. நான் தூய்மையாக உடுத்த ஆரம்பித்தேன். கூடுதலாக எனக்கு ஏதேனும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருந்தது. அதிகம் ஜோக் புத்தகமெல்லாம் படித்து அவர்களை அடிக்கடி சிரிக்க வைத்தபடி இருப்பேன். அந்த நகைச்சுவை துணுக்குகளை பேச்சின் இடையில் எப்படி நுழைக்கலாம் என காத்திருந்து, சரியான தருணத்தில் ‘இப்படிதான் ஒரு நாள்…’ ஆரம்பித்துவிடுவேன். சில நாட்களிலேயே ஏராளமான பெண்கள் எனக்குத் தோழிகளாயினர். அத்தனை நாள் நான் எழுதிய கவிதை அடங்கிய நோட்டு புத்தகம் மாணவிகளின் மத்தியில் பிரபலமானது. ‘ஒரு கவிதை சொல்லேன்…’ என ஒரு நாளைக்கு ஒரு தோழியாவது கேட்கும் நிலை வந்ததும் மீண்டும் கவிதை எனக்குள் சுரக்கத்தொடங்கியது.
அவளுக்கு இதெல்லாம் அதிகம் பிடிக்காமல் இருந்தது. என் கவனம் அவள் மீது இல்லை எனும் குற்றச்சாட்டுகள் வெவ்வேறு தொனியில் அவளிடமிருந்து வரத்தொடங்கின. நான் எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத ஒரு பரந்த வெளியில் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தேன். யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாமல் இருப்பதின் சுதந்திரம் என்னை முழுதுமாகப் பற்றிக் கொண்டிருந்தது. ஒரு சுபயோக சுப தினத்தில் என் காதல் தோல்வியில் முடிந்தது.
இனி… ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சாப்பிட்டுவிட்டாயா எனக் கேட்கத் தேவையில்லை, அவள் விருப்பப்படுவதை வாங்கித்தரத் தேவையில்லை, ‘தெம்மே’ என உட்கார்ந்துகொண்டு அவள் பேசுவதைக் செவிமடுக்கத் தேவையில்லை, பள்ளி முடிந்த பின் அவள் சைக்கிள் வேகத்துக்கு என் மோட்டார்வண்டியையும் உருட்டிச்சொல்லத் தேவையில்லை, எந்தக் குற்றத்துக்கும் அவளிடம் பாவமன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. தேவையே இல்லை.
ஆனாலும் நான் ஒரு நாடகத்திற்குத் தயாரானேன். சோர்ந்த முகத்தோடு உடல் பொருள் ஆவி இழந்தவனாகத் சுற்றிவரத் தயாரானேன். சுற்றியிருப்போரின் கழிவிரக்கம் எனக்கு அப்போது தேவைப்பட்டது. அது ஆணவத்தின் வேறொரு பரிணாமம்.
-தொடரும்