காதலின் ஏக்கத்தையும் காதல் தோல்வியின் துக்கத்தையும் சுமந்திருக்கும் வரிகள் கொண்ட இசை என்னேரமும் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. காதல் தோல்வியைச் சொல்லும் பாடல்வரிகளை முணுமுணுத்தப்படி இருந்தேன். பள்ளியின் மூன்றாவது மாடியின் மூலையிலும் திடலின் ஓரத்தின் மர நாற்காலியிலும் தனிமையில் அமர்ந்திருப்பதைக் கடமையாக்கிக் கொண்டேன். இதெல்லாம் காதல் தோல்வி அடைந்தவனின் அடையாளமாக நான் கண்டடைந்திருந்த செயல்கள். சில நண்பர்களுக்கு இதனால் அவள் மீது கோபம் வந்தது போலவே சில பேருக்குக் காதலும் வந்திருந்தது. கரிய உருவமும் திக்குவாயும் கொண்ட என்னை அவள் காதலிக்கும் போது தன்னை ஏன் காதலிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை பல இளைஞர்களுக்கு வந்திருந்தது.
மாணவிகளுடனான நெருக்கம் எனக்கு படிப்பின் வாசனையையும் கொஞ்சம் இணைத்தே கொடுத்தது. பொதுவாகவே மாணவிகளுக்குக் கல்வியின் மேல் ஒரு வகையான பயம் இருந்தது. வீட்டுப்பாடம் செய்து வராத ஒருவனை பார்வையாலேயே திகிலும் பரிதாபமும் இணைந்தார்போல் பயமுறுத்துமளவுக்கு பள்ளியும் அதன் கட்டமைப்பும் அவர்கள் மனதில் பதிந்திருந்தது. சரவணனும் என்னுடன் இணைந்து படிப்பதில் தீவிரமானான். இயல்பாகவே சரவணனுக்கு கணிதப் பாடத்தின் மேல் ஈடுபாடு இருந்தது. எவ்வளவு சிரமமான கணிதத்திற்கும் அவனிடம் ஒரு தீர்வு இருந்தது. தமிழ்ப்பாடத்திற்கு நானும் கணிதத்திற்கு அவனும் என ஒருவருக்கொருவர் ஆசிரியரானோம். தோழிகளின் உதவிகளும் எங்களுக்குக் கிட்டியது. பாடப் புத்தகத்தை ஒவ்வொரு முறை திருப்பும் போதும் மிகவும் பின்தங்கி விட்டதாக எனக்குத் தோன்றும். சரவணன் ‘டே…இதெல்லாம் கச்சாங். முட்டாளுங்கதான் விழுந்து விழுந்து படிச்சி பரீட்ச எழுதுவானுங்க’ என படிக்க ஆரம்பித்துவிடுவான்.
சரவணனின் ஞாபக சக்தி அபாரமானது. ஒரு முறை பயணித்தப் பாதை அடுத்த முறை அவனுக்கு மிகத்துள்ளியமாக நினைவில் இருக்கும். அது போலவே ஒருதரம் வகுப்பில் படிக்கும் பாடத்தை மறுமுறை மீள்பார்வையெல்லாம் செய்யாமலேயே நினைவில் வைத்திருப்பான். எனக்கு பத்து முறை போனாலும் பாதை மறந்துவிடுவது போலவே பாட புத்தகங்களை வாசிப்பதும் நினைவில் அவ்வளவு சீக்கிரம் அடங்காமல் இருந்தது. வகுப்பறையிலும் பாடப்புத்தகத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் என்னால் கவனம் வைக்க முடிவதில்லை. சரவணனிடம் அபாரமான ஒரு சக்தி இருப்பதாகவே நான் உணர்ந்தேன். அதற்கு மிக முக்கியக் காரணம் அவன் சண்டையிடும் உத்தி.
நானறிந்து ஒரே சமயத்தில் ஆறு பேரை சமாளிக்கும் ஆற்றல் அவனிடம் இருந்தது. அப்படிச் சண்டை முடிந்தபின் சட்டை நனைந்து, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி நானிருக்கும் போது அவன் எந்த அலுப்பும் இல்லாமல் அமர்ந்திருப்பான். சரவணனுக்கு நான் சண்டையிடும் உக்தியின் மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்காது. அதை கீரை வெட்ட வெட்டுக்கத்தியைப் பயன்படுத்துவது போல என்பான். அவன் தனக்கே உரிய ஒரு தோரணையை வைத்திருந்தான். கூட்டமாக நிற்கும் எதிராளியில் யாரை முதலில் தேர்வு செய்து தாக்குவது என்பது அதில் முக்கியமானது. கூட்டத்தில் உள்ள எதிராளியில் யார் முதலில் தாக்கப்பட வேண்டும் என கண்டடைவதில் சரவணனுக்கு நுண்ணிய ஒரு வாசனை இருந்தது. அந்த ஒருவனை நம்பிதான் அந்தக்கூட்டமே இருக்கும் என சரவணன் அறிந்து வைத்திருந்தான்.
இந்த நுட்பான உணர்வு நிலை சரவணனுக்குப் பாடத்திலும் எளிதில் உதவியது. எனக்கு கவிதைகளும் கதைகளும் வாசிப்பதில் உள்ள ஈடுபாடு பாடம் படிப்பதில் இல்லாமல் இருந்தது. எனது காதல் தோல்வி நமத்துப்போனதாக இருந்தாலும், மேத்தா, வைரமுத்துவின் கவிதைகளை மீள்வாசிப்பு செய்யும் போது அது மேலும் புதிய அர்த்தங்களை எனக்குக் கற்பித்தது. எனக்குள் எந்த நேரமும் உறங்காமல் ஒரு கவிஞன் உலகை கவனித்தப்படியே இருந்தான்.
-தொடரும்
மா.நவின் பக்கங்கள் கடந்த சில வாரங்களாகவே எழுதப்படவில்லையே… ஏன்? சுவாரஸ்யமான பதிவுகளை காண மனம் ஏங்குகிறது… விரைவில் எதிர்பார்க்கிறேன்….