மீண்டும் நான் எம்.ஏ.இளஞ்செல்வனைச் சந்திப்பேன் என நினைக்கவில்லை. உறவினர் ஒருவர் வெல்லஸிலி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் இருந்த மாரியம்மன் ஆலயத்தில் ஒரு மதியம் கஞ்சி ஊற்றினார். கோயில் கஞ்சி என்பது அப்போது மிகப் பிரயசித்தம்.நான் அதே தமிழ்ப்பள்ளியில் படிக்கும் போது கூட மாதத்திற்கு ஒருவர் கோயிலில் கஞ்சிக்காய்ச்சி ஊற்றுவார்கள். அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்.அது போன்ற நாட்களில் கஞ்சி குடிப்பதற்கென்றே பள்ளியைச் சீக்கிரம் முடித்துவிடுவார்கள். அதுபோன்ற ஒரு பள்ளி நாளில்தான் எனது உறவினரும் கஞ்சி ஊற்றிக்கொண்டிருந்தார். எதேசையாய் அப்பக்கம் போன என்னைப் பார்த்த இளஞ்செல்வன் கையசைத்து அழைத்தார்.
‘ஏன் இப்பவெல்லாம் வருவதில்லை…’ எனச் சாதாரணமாகக் கேட்டார். அவரது முந்தையப் பேச்சு என்னை மட்டுமே பாதித்ததையும் அவருக்கு அது அறுதியாக ஞாபகத்தில் இல்லாததையும் அவரது பார்வையிலேயே உணர்ந்துகொள்ள முடிந்தது. பின்னர் அவரே தொடர்ந்தார் ‘உன்னை தேடி கண்டுபிடிக்கிறதே கஷ்டமா போச்சி…கொஞ்சம் இரு…’ என அவர் அறைக்குச் சென்று ஓர் அழைப்பிதழோடு வெளிவந்தார். அது அவரது புத்தக வெளியீட்டின் அழைப்பிதழ்.மௌனமாகப் பெற்றுக்கொண்டேன். நான் எதிராளியாய் நினைக்கும் ஒருவர் திடீரென என்முன் தோன்றி அன்பு செலுத்தும்போது அடங்கிப்போகும் ஆணவத்தின் அலரல் ஒருவகையான அவஸ்தையைக் கொடுத்தது. அதுவும் நான் அவரை எதிராளியாய் நினைப்பது கூட அவருக்குத் தெரியாதது என்னை அவரிடம் பேச விடாமல் மௌனத்தில் ஆழ்த்தியது. எல்லாவற்றுக்கும் ‘சரி’ சொல்லிவிட்டு விடைப்பெற்றேன்.
குறிப்பிட்ட தினத்தில் எம்.ஏ.இளஞ்செல்வனின் புத்தகவெளியீட்டு விழாவிற்குச் சென்றேன். ‘எம்.ஏ.இளஞ்செல்வன் சிறுகதைகள், வானம் காணாத விமானங்கள் (குறுநாவல் தொகுதி)’ என்ற இரு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு அது. அப்போது மிகத் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த அக்கினி, சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் போன்றோரை முதன்முதலாக அந்த நிகழ்வில்தான் பார்த்தேன். நான் பார்த்த முதல் புத்தக வெளியீடும் அதுதான். பாயா பெசாரில் இருக்கும் சரஸ்வதி பூஜா தியான ஆசிரமத்தில் நடந்த அந்நிகழ்வில் இறுதி இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
நிகழ்வு தொடங்கியதும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் பேசினார்கள். எஸ்.பொ வின் எழுத்து பற்றி சை.பீர் பேசியது மட்டும் இப்போது நினைவில் தட்டுப்படுகிறது. பலர் பேசியது எதுவும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் எம்.ஏ.இளஞ்செல்வனின் எழுத்து சார்ந்த செயல்பாடுகளையும் புத்திலக்கிய நகர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கையும் செவிமடுத்தப் போது அதிர்ச்சியடைந்தேன். ஒரு இலக்கிய ஆளுமையின் முழு வடிவம் தெரியாமல் பத்திரிகையில் அவர் பெயரைத் தேடிய சிறுபிள்ளைத் தனத்தை நொந்து கொண்டேன். அவருடன் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியதும் அவரிடம் குருட்டுத்தனமான கேள்விகள் கேட்டதையும் ஒருதரம் நினைத்துப் பார்த்தேன்.வெட்கமாக இருந்தது.
புத்தக வெளியீட்டிற்குப் பிறகு இளஞ்செல்வனிடம் புத்தகம் பெற்றுக்கொள்ளச் சென்றேன். என்னிடம் இருபது வெள்ளிதான் இருந்தது. இரண்டு புத்தகத்தின் விலை முப்பது ரிங்கிட். நான் ஒரு புத்தகம் மட்டும் வாங்கி கொள்ளலாம் என நினைத்து இளஞ்செல்வனை அனுகினேன். இரண்டு புத்தகத்தையும் என் கையில் திணித்தவர் ‘எங்கும் போயிடாத இங்கயே நில்லு’ என மேடைக்கருகில் நிறுத்தினார்.
-தொடரும்
ovvoru varamum vidamal ungkal pakkatai vaasikiren. ivvaaram ezutai kaanome? velai palu atigamaa? ezuthungkl aiyaa. sila velaigalil tangkal ezutai ivarkal padikiraargalaa, endra ennam tondruvathu meithaan. nangkal padikirom.kaatirukirom, endru unARTHHAVEE IKKADITHAM. NANDRI.