புத்தக வெளியீடு முடிந்ததும் இளஞ்செல்வனிடம் எனது புத்தகத்தையும் கையெழுத்து வாங்க நீட்டினேன். புன்னகைத்தவர் கையெழுத்திட்டு என் கரங்களைப் பற்றினார். ‘உன்ன நான் சிலருக்கு அறிமுகம் செஞ்சி வைக்கிறேன்’ என்றார். பற்றிய கையை விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கினார். எனக்குப் பதற்றமாகவே இருந்தது. நேராக என்னை அக்கினியிடம் அழைத்துச் சென்றார்.
‘இவர்… நான் அடுத்தத் தலைமுறையாக நம்பும் இளைஞன். நீங்கள் உங்கள் பத்திரிகையில் இவர் எழுத்துக்கு நன்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என பேச்சினூடே என்னை அறிமுகம் செய்துவைத்தார். ‘மக்கள் ஓசையில்’ ஏற்கனவே எனது சில கவிதைகள் வந்திருந்ததால் அக்கினி என்னை அடையாளம் கண்டுக்கொண்டார். ‘ம.நவீன் கவிதைகள்னு தனியாவே போட்டுடுவோம் என்றார்’. அதன் பின் பத்மினி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். (பத்மினி அக்கினியின் மனைவி என்பதும், அவர்தான் அப்போதைய ஞாயிறு நண்பன் பொறுப்பாசிரியர் போன்ற விவரமெல்லாம் எனக்கு அப்போது தெரியாது) எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இனி வண்ணப்படங்களுடன் எனது கவிதைகள் பத்திரிகையில் விடாமல் அரங்கேரப்போகும் தினங்களுக்காகக் காத்திருந்தேன்.
அறிமுகங்கள் முடியும்வரை இளஞ்செல்வன் என் கையைப் பற்றியே இருந்தார். வழக்கத்தைவிட அன்று மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்பட்டார். சற்று நேரத்திற்குப்பின் அவரது நண்பர்கள் வட்டம் சூழ்ந்துகொள்ள அவர் கரம் என்னை மெதுவாக விடுவித்தது. நான் இருப்பதா செல்வதா எனத் தெரியவில்லை. அங்கேயே விழித்தப்படி சிறிது நேரம் நின்று கொண்டிருந்தேன். நண்பர்களுக்கு மத்தியில் இளஞ்செல்வனின் உருவம் திட்டுத் திட்டகத் தெரிந்தது. நான் இறுதியாய் இளஞ்செல்வனைப் பார்த்தது அன்றுதான்.
மேடையில் இளஞ்செல்வனின் ஆளுமையை அறிந்தபின் அவரிடம் மீண்டும் சகஜமாகச் சென்று பேசுவது மனத்தடையாக இருந்தது. ஒரு நல்ல சிறுகதையாவது எழுதியப்பின் அவரைச் சந்திக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். அதற்கும் வழிவிடாமல் அப்புத்தக வெளியீட்டிற்குப் பின் இரண்டு மாத இடைவெளியில் எம்.ஏ.இளஞ்செல்வன் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.
என்னை வரவேண்டாம் என்ற அவர் வீட்டிற்கு அவர் அனுமதியின்றியே சென்றேன்.
-தொடரும்
நவீன் இதனை ஒரு புத்தகமாக்கு நல்லாயிருக்கும்.