இளஞ்செல்வனின் மரணம் குறித்து பேசுவது பெரும் தடையாகவே இன்னும் மனதில் இருக்கிறது.ஒவ்வொரு முறை அவர் பற்றி பேசும் பொழுதும் அவரது மரணத்தில் வந்து முடியும் உரையாடல்கள் அமைதியிழக்க வைக்கிறது. அவரது இலக்கியம் குறித்து விமர்சிக்கவோ இன்றைய வாசிப்பில் தரம் பார்க்கவோ வாசகர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.ஆனால் நான் வெறும் இலக்கியவாதியாக மட்டும் இளஞ்செல்வனைப் பார்க்கவில்லை.கையில் ஒரு வெள்ளிக்காப்போடும் , கழுத்தில் அரை இஞ்ச் தடிப்புக்கு ஒரு வெள்ளிச்சங்கிலியும் எந்நேரமும் கறுப்பு பனியனோடும் கண்ணில் திமிர் பிடித்து சுற்றிக்கொண்டிருந்த என்னை இளஞ்செல்வனைப் போல் அணுகியவர் அப்போது யாரும் இல்லை.எனக்குள் இலக்கியம் உள்ளது என காட்டியவர் இளஞ்செல்வன்.அதையும் மீறி நவீன இலக்கியத்தின் நகர்ச்சிக்கு அவர் பங்களிப்பு கணிசமானது என்பதை யாராளும் மறுக்க இயலாது.
இந்தச் சூழலில் மீண்டும் இளஞ்செல்வனின் மரணம் குறித்து நான் துள்ளியமாக நினைவுகூற விரும்பவில்லை. ஆனால் அக்காலக்கட்டத்தில் என் மனம் இலகியத்தின் மீது எப்படி வெறி கொண்டு அழைந்தது என்பது மட்டும் தெளிவாக நினைவில் உள்ளது.வெறிதான்!வெறி வரும்போது அறிவு வேலை செய்வதில்லை.ஒருவகையான பதற்ற நிலையிலேயே இருப்போம்.நானும் அப்படித்தான். பத்திரிகையில் பெயர் பார்த்த கிளர்ச்சி எந்த நேரமும் என்னைச் சுற்றி வந்த படியே இருந்தது.அப்போது என்னுடைய நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.எப்படியும் ‘மலேசிய நண்பன்’ பத்திரிகையில் எனது சிறுகதை இடம் பிடித்துவிடவேண்டும். அப்போதெல்லாம் ‘நண்பன்’ பத்திரிக்கை மட்டும்தான் அதிக விற்பனையில் இருந்தது.இப்போது போல அப்போதும் ‘தமிழ் நேசனை’ சாமியும் அவர் சகாக்களுமே ஆக்கிரமித்து வந்தனர்.
மலேசிய நண்பனில் சிறுகதை வந்தால் பலருக்கும் என் பெயர் அறிமுகமாகிவிடும் என்று எண்ணியிருந்தேன்.அதிஷ்டவசமாக மலேசிய நண்பன் ஆசிரியர் ஆதி.குமணனே இளஞ்செல்வன் மரணத்திற்கு வந்திருந்தார்.இளஞ்செல்வன் தனது மரணத்திலும் எனக்கு நன்மைசெய்துவிட்டதாக கருதினேன். ஆதிகுமணன் கருப்பு நிறத்திலான ‘பாத்தேக்’ரக துணி அணிந்திருந்தார் என ஞாபகம்.அவர் பக்கத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.நாடு முழுவதும் பல லட்ச வாசகர்களைக் கொண்டவராக ஆதி.குமணன் அப்போது இருந்தார்.அவர் சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் திரளை தனது எழுத்தின் மூலம் சம்பாதித்து வைத்திருந்தார்.மலேசியாவில் இத்தகைய ஆளுமை மிக்கவர்கள் குறைவு.தனது நெருங்கிய நண்பனின் மரணம் அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும்.கைகளைக் கட்டியப் படி வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.மக்கள் கூட்டம் இன்னும் வந்து சேராத நேரமது.
நான் ஆதி.குமணனை நோக்கி ஓடினேன்.அவர் என்னை ஏற இறங்க ஒருதரம் பார்த்தார். நான் சற்றும் தாமதிக்காமல்.”நான் நவீன்.உங்கள் பத்திரிகைக்கு சிறுகதை அனுப்பியிருக்கிறேன் நினைவுண்டா?” என்றேன். என்னைப்போல் பல கோமாளிகளைப் பார்த்திருப்பார் போல. தாமதிக்காமல் ‘ஆம்’ என்பதுபோல தலையை ஆட்டினார்.அவர் பக்கத்தில் இருந்தவர்கள் என்னை அந்நியமாய் பார்த்தனர்.என் தோற்றம் அவர்களைக் குழப்பம் அடையச் செய்திருக்க வேண்டும். நான் விடாமல் “நான் பல சிறுகதைகள் அனுப்பியும் உங்கள் பத்திரிகையில் இடம்பெறவே இல்லை.அடுத்த வாரம் போட்டுவிடுங்கள் சார்” என்றே.’கண்டிப்பாக’என்பது போல தலையை மட்டும் ஆட்டினார்.
மலேசிய நண்பன் என்பது எவ்வளவு பெரிய நிர்வாகம்;அதில் ஞாயிறு பதிப்பிற்கென்று யார் பொறுப்பாளர்களாக உள்ளனர் என்று எதுவுமே தெரியாமல் நான் ஆதி.குமணனிடம் சொன்னபடி சிறுகதை பத்திரிகையில் வந்துவிடும் என்ற பெரிய நம்பிக்கையில் அடுத்த ஞாயிறு நண்பனுக்குக் காத்திருந்தேன்.
தொடரும்