இளஞ்செல்வன் இல்லாத வெறுமையை போக போகத்தான் என்னால் உணர முடிந்தது. சிறுகதை பற்றியோ கவிதை பற்றியோ இலக்கியம் பற்றியோ பேச ஆளில்லாமல் தவித்தேன். சுற்றியிருந்த அனைவருமே இலக்கிய வாசம் இல்லாமல்தான் இருந்தனர். அம்மா தொடர்கதைகள் பற்றி பேச மட்டுமே ஆர்வமாக இருந்தார்.அதுவரையில் என்னுடன் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த குமரன் அண்ணன் கல்லூரி படிப்பில் தீவிரமாக இருந்தார்.நான் உரையாட மனிதர்களைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும் போது கோ.புண்ணியவானின் நினைவு வந்தது.
கோ.புண்ணியவான் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளராக இருந்தார். அம்மா அவரின் சில கதைகளை வாசித்திருந்தார்.அவரின் தொலைபேசி எண்கள் எப்படி கிடைத்தது என நினைவில் இல்லை. ஓர் இரவில்தான் அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். அப்போதெல்லாம் வீட்டுத்தொலைப்பேசிதான்.கட்டணம் அதிகம் வந்தால் அம்மாவிடம் திட்டுக் கிடைக்கும்.எனவே அதிகம் ஒன்றும் பேசக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வில்தான் அவரை அழைத்தேன்.
எதிர்முனையில் சற்று அதட்டல் போன்ற தொனியில் ‘ஹலோ’ எனும் குரல் கேட்டது. நெற்றிச்சுருங்கி கண்களைக் கூர்மையாக்கிச் சொல்லக்கூடிய ஹ்லோ அது.நானும் தடுமாறி ஹலோ என்றேன்.மீண்டும் உயர்ந்த குரலில் விசாரிப்பு நடந்தது.பெயரைச் சொன்ன சிறிது நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டவராக கோ.புண்ணியவான் பேசத்தொடங்கினார்.நடக்கவிருக்கும் புதுக்கவிதை திறனாய்வில் என்னுடைய ஒரு கவிதை குறித்தும் எழுதியிருப்பதாகக் கூறினார்.எனக்கு பெருமை பிடிப்படவில்லை.கோ.புண்ணியவான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய அங்கீகாரம் போல உணர்ந்தேன்.
அதற்கு பின்பு அவரின் தொலைபேசிக்கு அழைக்கும் போதெல்லாம் அதே போன்ற ‘ஹலோ’வே வெளிப்படும். அந்தக் கனமான ஹலோவைத் தாங்கிக்கொண்டு பேசினால் நாம் நினைக்காத தருணம் குபீரென்ற சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்படும்.அந்தச் சிரிப்பு வித்தியாசமானது.அந்தச் சிரிப்பு உருவாகும் முன், அதன் முதல் வினாடி வரை அப்படி ஒரு சிரிப்பு அவரிடம் இருந்து வரப்போவதை யாருமே அனுமானிக்க முடியாது.முடிந்த பின்பு சிரிப்பு கண்களில் இருக்கும்.
கோ.புண்ணியவான் எனக்குக் காட்டிய கவிதை உலகு இன்னும் தீவிரமானது. பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த என்னைப் பேச வைத்து கேட்டவர் கோ.புண்ணியவான். அவருடன் இருந்த பணிபுரிந்த காலங்கள் இன்றும் நினைவில் பதிந்துள்ளன.
தொடரும்