பாடாங் செராயில் உள்ள விக்டோரியா தோட்டத்தில் தலைமையாசிரியராக இருந்தார் கோ.புண்ணியவான். சிறுகதைகளைவிட அவரிடம் கவிதைகள் குறித்து அதிகம் உரையாடியதுண்டு. அவர் அப்போது அப்துல் ரகுமானின் கவிதைகளை அதிகம் நேசிப்பவராக இருந்தார். வைரமுத்துவின் மேல் எனக்கு இருந்த பிடிப்பை மெல்ல முதலில் அசைத்தவர் புண்ணியவான். வைரமுத்துவின் போலியான உணர்ச்சிகளையும் கவிதைகளையும் அவர் கூறும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். என் ஆதர்ச கவிஞரைத் தர்காக்கத் தெரியாமல் விழிப்பேன். அவரின் ‘நிஜம்’ தொகுதியில் இருந்த சிறுகதைகள் ஆரம்ப வாசகனான எனக்கு சுவாரசியமாக இருந்தது.
தமிழில் நான் டைப் செய்ய முதல் தூண்டுதல் அவரிடமிருந்தே கிடைத்தது. ஒருமுறை பள்ளி விடும் நேரம் ‘தமிழில் டைப் செய்யத் தெரியுமா?’ என்று கேட்டார்.எனது கணினியில் தமிழ் எழுத்துருக்கள் உள்ளது என அறிவேன்.ஓரிரு முறை முயன்று பார்த்து அலுத்தவுடன் அம்முயற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவர் கேட்டதும் ‘தெரியாது’ என சொல்லத் தோன்றாமல் மௌனமாகப் பார்த்தேன். என்னிடம் ஒரு பெயர்ப்பட்டியலை நீட்டியவர், அதில் உள்ளப் பெயர்களை தமிழில் டைப் செய்து தரவேண்டும் எனப் பணித்தார்.நானும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொண்டேன்.அது கெடா மாநில எழுத்தாளர் சங்க உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்.கோ.புண்ணியவான் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தலைவர் என்பதை அப்போதுதான் அறிந்தேன்
அன்றைய இரவு எனக்கு சவாலாக இருந்தது. விசைப்பலகையில் தமிழ் எழுத்துகளை அடையாளம் காண்பது தொடங்கி ஒவ்வொரு பெயரையும் டைப் செய்து முடிக்க பலமணி நேரங்கள் ஆனது. அவரிடம் சேவை அடிப்படையில் வேலை செய்ய போன ஒரு வாரத்தில் எனக்கு இடப்பட்ட முதல் பணி அது என்பதால் முழுமூச்சாக காரியத்தில் இறங்கினேன்.
எஸ்.பி.எம் முடித்து தேர்வு முடிவுக்குக் காத்திருந்த நான் விக்டோரியா தமிழ்ப்பள்ளிக்குப் போனது வேலை செய்யவோ சம்பாதிக்கவோ அல்ல. கோ.புண்ணியவானைக் காண மட்டுமே.ஓர் எழுத்தாளரோடு இருப்பது மனதிற்குப் பெரும் தெம்பினைக்கொடுத்தது. வேலைக்குச் சேர்ந்தேனே தவிர செய்வதற்கு வேலையென்று பெரிதாக ஒன்றும் இல்லை.அவ்வப்போது சில கடிதங்கள் தட்டச்சு செய்ய பணிக்கப்படும்.சில சமயம் கணினியில் ‘ஸ்கேன்’ செய்ய பணிக்கப்படும் அவ்வளவே.மற்ற நேரங்களில் அவருடன் இலக்கியம் பேசுவதுதான் எனக்கு வேலை.எங்கள் உரையாடல் சில சமயங்களில் இலக்கியத்திலிருந்து சமயம் தொடர்பாகவும் தாவிச் சென்றதுண்டு. எனது சமயம் மற்றும் இந்துமதம் தொடர்பான கேள்விகளுக்கு அவரிடம் பதில்கள் இருந்தன.
ஆனால் அப்பள்ளியில் வேலை செய்ததன் பலனாக கணினியை ஓரளவு இயக்கக் கற்றுக் கொண்டேன்.புண்ணியவான் நான் எழுத்தில் மட்டுமல்லாமல் வாழ்விலும் சிறந்து விழங்கவேண்டுமென அடிக்கடிக்கூறுவார். எனது எஸ்.பி.எம் தேர்வு முடிவு வந்தவுடன் நான் எனது கல்வியைத் தொடரவேண்டும் என்பதில் அவர் அக்கறையாக இருந்தார்.
நான் எப்படி பெரிய எழுத்தாளனாவது எனும் கனவில் மட்டுமே இருந்தேன்.
தொடரும்.
தங்கள் வலைப்பகுதியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் திரு.கோ.புண்ணியவான் அவர்கள்தான். மிகச் சிறப்பான இலக்கியச் சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள்.தொடருட்டும் தங்கள் பணி.
Naveen avargale,vanakkam. ungal kavithagalai naan nesiththu vaasikkiren. Ko.Punniavan kuriththe ungal anubavam ennai kavargirathu. adikkadi thalai mudiyai than seeppu viralgalal vaarippodum ivar en manathaiyum than pakkam maatripottar.vairamuthu ,naan nesikkum kaviyarasan. avarathu innoru mugaththai enaku kaattiyavar Ko.Punniavan.Bakthanin kangalai thiranhavar. Ungal pani vaalge,naveen.