ஓரளவு இதழ்களின் செயல்பாடு புரிந்தபோது கவிதை எழுதுவதில் மிகுந்த தீவிரமடையத் தொடங்கினேன். ஏறக்குறைய எல்லா பத்திரிகைகளில் படைப்புகள் வந்துவிட்டாலும் ‘நயனம்’ இதழில் எனது கவிதைகள் வர வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தபடியே இருந்தது.
எல்லா பத்திரிகைகள் படைப்புகளைப் பிரசுரித்தாலும் ‘நயனம்’ மட்டுமே கவிதையை மிகச் சிறப்பாகப் பிரசுரித்து வந்தது. கவிதைக்கு மிகப் பொருத்தமான படங்களோடு முழுப்பக்கத்தில் வெளிவரும் நயனம் இளம் வாசகர்களிடையே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தது. அக்காலக் கட்டத்தில் ஜாசின் தேவராஜன், பெ.ச.சூரியமூர்த்தி, பா.ராமு போன்றோரின் கவிதைகள் அதிகம் இடம்பெற்று வந்தன. பல முறை அனுப்பியும் கவிதை வெளிவராமல் இருந்த நான் கோ.புண்ணியவானின் உதவியை நாடினேன்.
நயனம் இதழுக்கு நான் எழுதியக் கவிதையை ஒருதரம் வாசித்த அவர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகிதத்தில் ‘இவர் புதிதாக எழுதும் இளைஞர். இவர் கவிதையைப் பிரசுத்து வளரவிடவேண்டும்.’ என தன் நண்பர் வித்யாசாகருக்கு (அப்போதைய நயனம் துணை ஆசிரியர்)ஒரு சிறு குறிப்பு எழுதி கடிதத்தை அனுப்பக் கூறினார்.அன்று முழுதும் கடிதத்தை தபால் பெட்டியில் போட்ட நினைவிலேயே இருந்தேன்.கடிதம் ஒழுங்காகப் பெட்டியில் விழுந்திருக்குமா என்ற சந்தேகம் கூட எழுந்தது.
மறுவாரம் எப்போது வரும் எனக்காத்திருந்தேன். முதல் ஆளாக கடையில் நின்று, கட்டுப் பிரித்தவுடன் நயனம் இதழைப் பெற்றுக்கொண்டு கடை வளாகத்திலேயே திறந்து பார்த்தபோது ஏமாற்றம். அதன் எந்தப் பக்கத்திலும் என் கவிதை இல்லை. இதே நிலைதான் மறுவாரமும்.இனி ‘நயனம்’ இதழுக்கு எழுதுவதில்லை என முடிவெடுத்துக் கொண்டேன்.நயனம் இதழை வாங்கவும் கூடாது என நினைத்தேன்.
அழகானப் படங்களோடு என் கவிதைகள் இடம்பெறப்போகும் கனவு மெல்ல அழிந்தபடி வந்தது.
தொடரும்.
ungalai pinthodargiren……………………….
3 vaaramaaga kaatirukiren, innum aduta dairyai kaanom…