ஒரு பள்ளி விடுமுறையில் கோலாலம்பூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்வில் முதல் நீண்ட பயணம் அது. கோலாலம்பூரின் மேல் பெரும்பலோர் போல் எனக்கும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கு கட்டடங்கள் பரபரப்பான வாழ்வு என எல்லாமே லுனாஸில் ஒரு கம்பத்தில் இருந்த எனக்கு ஒரு அந்நிய நாட்டின் கவர்ச்சியைக் கொடுத்தப்படி இருக்கும். இவற்றையெல்லாம் மீறி நான் கோலாலம்பூருக்குச் செல்ல வேறொரு விஷயமும் காரணமாக இருந்தது. அது பத்திரிக்கை அலுவலகம்.
அப்பா கோலாலம்பூரில் வேலை செய்து கொண்டிருந்த தருணம் அது. மகிழுந்து வசதியெல்லாம் இல்லை. பேருந்திலும் வாடகை வண்டியிலுமே பாதி கோலாலம்பூரைச் சுற்றிக்காட்டியப் படி இருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓர் உறவினரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் ஓவியர் ராஜா. சட்டென பார்ப்பதற்கு ரஜினி போல் காட்சியளித்தார். நாங்கள் குடும்பத்தோடு சென்றிருந்தாலும் என்னையே கூர்ந்து பார்த்தபடி இருந்தார். அவர் வரைந்து வெளியிட்ட கேலிச்சித்திர புத்தகத்தை நான் ஏற்கனவே வாசித்ததுண்டு. அது குறித்து கொஞ்ச நேரம் பேசினேன். அதன் பிறகு அவ்வப்போது நெடிய மௌனம் பற்றியபடி இருந்தது.
ஓவியர் ராஜா அப்பாவின் தாய்மாமன். தமிழ் நேசம் நாளிதழில் ஒவியராகப் பணியாற்றி வந்தார். ஆரம்பக் காலங்களில் ‘மயில்’, பின்னர் மலபார் குமரனால் உருவான ‘கோமாளி’ எனும் கேலிச் சித்திர இதழில் பக்க வடிவமைப்பாளராகவும் பணியாற்றியவர். அக்கால அனுபவங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அவை எனக்கு மட்டும் சொல்வது போல ஒவ்வொரு முற்றுப்புள்ளியிலும் என்னையே அவர் பார்வை இருக்கும். பின்னாலின் என் குடும்பத்தில் அவர் என்னுடன் மட்டும் அதிக நெருக்கம் கொண்டிருந்ததற்கு இவையெல்லாம் அறிகுறிபோல் இருந்தது.
ஓவியர் ராஜாவிடம் ஒரு சிவப்பு நிற கஞ்சில் கார் இருந்தது. அந்தக் காரில்தான் எங்கள் கோலாலம்பூர் சுற்றுப்பயணம் தொடர்ந்தது. ஓவியர் ராஜாவுக்கு எல்லா பத்திரிகை அலுவலகங்களிலும் நல்ல மரியாதை இருந்ததால் அவருடனே பத்திரிகைகளுக்குச் சென்று அதன் ஆசிரியர்களைச் சந்திப்பதென முடிவாகியது.
முதலில் நாங்கள் சென்ற அலுவலகம் ‘செம்பருத்தி’. அப்போது செம்பருத்தியின் ஆசிரியராக கணபதி கணேசன் இருந்தார். இலங்கை தமிழர். அவருடன் ஓவியர் ரஜினியும் இருந்தார். கணபதி கணேசனைக் கண்டது பெரும் திருப்தியாக இருந்தது. அப்போது நான் மிகவும் விரும்பி வாசித்த இதழ் செம்பருத்தி. கணபதி கணேசனுக்குள் இதழாசிரியன் மட்டும் அல்லாது நல்ல வாசகனும் எழுத்தாளனும் இருந்தான். செம்பருத்தியின் நோக்கம் குறித்து பேசினார். விடைப்பெறும் போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். “செம்பருத்தியில் வேலைக்கு வருவதென்றால், என்ன தகுதி வேண்டும்?” அவர் மெல்ல சிரித்தப்படி “ஆர்வம் மட்டும் போது ” என்றார்.
மகிழ்ச்சியோடு எனது பயணம் அடுத்த பத்திரிகைக்குத் தொடர்ந்தது…
தொடரும்