வணக்கம் நண்பரே. மிகவும் வருத்தத்துடன்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இம்மாத வல்லினத்தில் தயாஜியின் சிறுகதையைப் பார்த்து பயந்தேன். அதில் தாய்மையை அசிங்கப்படுத்தியுள்ளார். அது போல வரிகள் இருந்தன. வல்லினம் மீது எனக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை உண்டு. நீங்கள் சரியானதைச் செய்வீர்கள் என. இது போன்ற கதைக்கு உங்கள் விளக்கம் என்ன? முக நூலில் இது குறித்த சர்ச்சையிலும் உங்கள் தரப்பை சொல்லவில்லை. அவர்கள் கருத்துக்கு கருத்து ரீதியில் பதில் சொல்லலாமே. என்னைப் போன்ற வாசகர்களுக்கு இது குழப்பத்தை உண்டு செய்கிறது. எனக்கு போதிய விளக்கம் கொடுப்பீர்களா? எனக்கு தெரியாததைத் தெரிய படுத்துங்கள். உங்களுக்கு இந்தக் கதையைப் பிரசுரித்ததில் சம்மதமா?
durga6776@gmail.com
தோழர், முதலில் உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன். தெரியாததை தெரியாது எனச் சொல்வதே அறிவு / தைரியம். சந்தேகங்களை மனதில் ரொப்பிக்கொண்டு , முன் முடிவுகளுடன் மொண்ணையான கருத்துகளைக் கூறுபவர்களுக்கு மத்தியில் நீங்களும் மற்றுமொரு தோழரும் மட்டுமே உங்கள் சந்தேகத்தை முன் வைத்துள்ளீர்கள். வல்லினம் இணையத் தளத்தில் இது குறித்து விரிவாக எழுத இருந்தேன். உங்கள் கேள்வியில் உள்ள நியாயமான கோபத்தாலும் குழப்பத்தாலும் எனது வலைப்பூவில் விளக்கம் தரலாம் என நினைக்கிறேன்.
முதலில் கருத்து ரீதியாக வாதிடுதல் என்பது என்ன? உங்களிடம் ஒரு கருத்து உண்டு. அதை முன்வைக்கிறீர்கள். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அந்தக் கருத்து நீங்கள் வாதிடும் சூழலில் இதற்கு முன் அக்கருத்து எவ்வாறான விவாதங்களுக்கு உட்பட்டுள்ளது எனும் முன்னறிவு நமக்கு அவசியமாகிறது. அந்த நகர்வின் சாதக பாதகத்தில் நின்றே நாம் அறிவு ரீதியான விவாதத்தைத் தொடர வேண்டியுள்ளது. அடுத்து, உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க எவ்வாறான ஆராய்ச்சி, உளவியல், அறிவியல் , வரலாறு சார்ந்த ஆதாரங்களை இணைக்கப்போகிறீர்கள் என்பது முக்கியமாகிறது. அவ்வாறு எதுவும் இல்லாமல் அது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்கும் போது அதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் அறிவு தளத்தில் அதற்கான இடம் இல்லை. அதை பொருட்படுத்தி விவாதிக்கவும் வேண்டியதில்லை.
தயாஜியின் சிறுகதையில் நடந்ததும் இதுதான். ஆளாளுக்கு கருத்து கூறுகிறேன் என தத்தம் முக நூலில் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தனர். கொஞ்சம் கூட இலக்கியப் புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்கிறேன் என மொண்ணையான கருத்துகளை வெளியிட்டனர். இதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதிகபட்சம் ஒருவாரத்துக்குப் பிறகு அவையெல்லாம் வெறும் குப்பைகளாக மட்டுமே குவிந்திருக்கும். வருங்கால குப்பைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். அதனால் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட வேண்டியதுதான். இதில் பெரிய நகைச்சுவை, நேருக்கு நேர் நின்று வாதாட முடியாதவர்கள், வாதாடினால் அவர்களின் கல்வி / இலக்கியப் பின்புலம் அனைத்தும் நார் நாராகக் கிழித்து வீசி அறிவையே சந்தேகிக்கும் நிலைக்கு வர நேரிடும் என பயந்து ‘லைக்’ போடுவதும் கோழைத்தனமாக குத்தல் பேசுவதும் என தங்கள் போலி பிம்பத்தைத் தக்க வைத்துக்கொள்கின்றனர். பயந்தவர்களை நோகடிப்பது நமக்கு பழக்கம் இல்லை என்ற படியால் அவர்களை மன்னித்துவிடுவோம்.
தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதையில் என்னதான் சிக்கல் என முதலில் பார்ப்போம். கதையின் முதல் பகுதியும் இறுதி பகுதியும்தான் அதிக விமர்சனத்துக்கு!? உள்ளாகியுள்ளது. முதல் பகுதியில் ஒரு சிறுவன் (வயது குறிப்பிடப்படாததால் அவன் மொழி மூலம் சிறுவன் என எடுத்துக்கொள்ளலாம்) தன் தாயார் குளிப்பதைப் பார்க்க நினைக்கிறான். குளியலறையில் இருக்கும் தாயை கழிவறையில் இருந்தபடி நாற்காலி போட்டு எக்கிப்பார்க்க நினைக்கையில் அவன் கண்ணில் தூசு விழுந்துவிடுகிறான். கண்களைத் தேய்தபடி போய்விடுகிறான். வெளியே வந்த அம்மா, கண் சிவந்திருக்கும் மகனைக் கண்டு “என்னடா கண்ணு” எனக் கலங்குகிறாள். கண்களை அவ்வாறு தேய்க்கக்கூடாது என செல்லமாகத் திட்டி செல்கிறாள்.
ஒருவேளை இந்த இடத்தில் அந்தச் சிறுவன் தன் தாயின் காலில் விழுந்து “அம்மா… என்னை மன்னித்துவிடு” எனக் கதறியிருந்தால் அனைவருக்கும் கதைப் பிடித்திருக்கும். ஆனால் தயாஜின் கதையில் வரும் சிறுவன் அதைச் செய்யவில்லை. ஒரே நேரத்தில் தன்னை நிர்வாணமாகப் பார்க்க முயன்ற மகனின் காமத்தை அறியாத தாயின் அன்பையும், தப்பித்தப் பின் ஏற்படும் மகனின் பயத்தையும் தயாஜி காட்டியுள்ளார். கதையின் வடிவமைதியில் பல இடங்களில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் இந்த இடத்தில் தயாஜி சரியாகவே எழுதியுள்ளதாகத் தோன்றுகிறது.
இப்பகுதியைப் படித்தப் பலரும் இது சமுதாயத்தைக் கெடுக்கும் கதை என புலம்பினர். இதுவரை இல்லாத ஓர் விடயத்தை தயாஜி சொல்லிவிட்டது போல கோபப்பட்டனர். ஹீரோவாக ஒரு சந்தர்ப்பம் என ரஜினி வசனமெல்லாம் பேசினர். ஆனால் அறிவு தளத்தில் நின்று ஆராய யாருக்கும் பொறுமையோ தேடலோ இல்லாமல் இருபதுதான் வருத்தம்.
ஒடிபெல் சிக்கல் (Oedipal Complex)
பல்கலைக்கழகத்தில் ஓவியத்தை ஒரு பாடமாக பயிலுகையில் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) குறித்து அறிய நேர்ந்தது. படைப்பாளர்களுக்குச் சிக்மண்ட் பிராய்டின் ‘உளவியல்’ அணுகுமுறைகளின் தேவையை அறிந்தபோது ஓரளவு அவரைத் தேடி வாசித்தேன். தமிழில் ஒரு பேராசிரியரின் முதுகலைப் பட்டத்துக்காக எழுதிய ‘சிக்மண்ட் பிராய்ட் ‘ குறித்த ஆய்வு நூல் மட்டுமே கிடைத்தது. அதுவும் கல்வித்துறை ரீதியானது. ஆங்கிலத்தில் நிறைய கிடைக்கின்றன.
wikipediaவில் ‘ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்மண்ட் பிராய்ட் முன்னிறுத்தும் கோட்பாடுகளில் ஒன்று Oedipal Complex. பிராட்டின் கோட்பாட்டின்படி, தனது தந்தையின் இடத்தில் தன்னை வைக்க விரும்பும் சிறுவன் தாயை உடல் மூலமாகவும் உடைமையாக்க விரும்புகிறான். தாயின் அன்புக்குப் போட்டியாக தந்தையைக் கருதுகிறான். உளவியல் – பாலினம் சார்ந்த வளர்ச்சி பிள்ளையின் மூன்று முதல் ஐந்து வயதுக்கு இடையே ஏற்படுகிறது. இந்தப் பருவம் பாலினம் சார்ந்த அடையாளம் உருவாதற்கான முக்கிய காலகட்டமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் ஒடிபெல் சிக்கல் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. ஒடிபெல் சிக்கல் என்பது உள்மனதுக்குள் மறைந்திருக்கும் உணர்வுககளையும் எண்ணங்களையும் சார்ந்த உளப் பகுப்பாய்வுக் கோட்பாடு ஆகும் . உளவியல் துறையில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இவரின் இந்தக் கூற்று பலருக்கும் அதிருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் பிராய்டின் இந்த ஆய்வை இன்று பலரும் ஒப்புக்கொண்டே உள்ளனர். அதை மையப்படுத்து ஏராளமான ஆய்வு நூல்களும் வந்த வண்ணம்தான் உள்ளன.
நாம் தாய் வழி சமூகம்
சரி இதே விடயத்தைக் கொஞ்சம் வரலாறு சார்ந்தும் பார்க்கலாம். நாம் தாய் வழி சமூகத்தினர் என்பது பலரும் அறிந்த விடயம். மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் பெண்கள்தான் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுக்காக்க பெண்களே வேட்டையாடுவதில் முதன்மை வகித்தனர். இதை தாய் வழி சமூகம் என்கின்றனர். தாய் வழி சமூகத்தில் பெண்ணே மையம். அவளுக்கு பல ஆண்கள் துணை இருப்பர். தொன்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளது மற்றுமொரு உதாரணம். இந்த வரலாற்று உண்மையை ஒரு புனைவின் அடிப்படையில் சொல்லிச்செல்லும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் என்பவர் எழுதியுள்ளார். தமிழில் கண .முத்தையா மொழிப்பெயர்த்துள்ளார். அதில் தாய் வழி சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு காட்சி வரும்.
ஒரு தாய் (தலைமை தாங்குபவள்) குழந்தையை ஈன்றெடுப்பாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் . தான் ஈன்ற மகன்களின் வலுவான ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுடன் தாய் உறவு கொள்வாள். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும். இது பல்வேறு நிலைகளில் தொடரும். பல்வேறு ஆய்வாளர்களாலும் முக்கியமாகக் கருதப்படும் இந்த நூலை ஆபாசக் குப்பை என தூக்கிப் போட்டுவிடலாமா? வரலாற்றில் ஒரு காலத்தில் இயல்பாக இருந்த விடயம் மற்றொரு சந்தர்ப்பத்தில் அபத்தமாகவும் அருவருப்பானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த உணர்வை ஏற்படுத்துவது எது? இது மனிதனின் ஆதி உணர்வா? இல்லை ! இது தந்தை வழி சமூகம் ஆனப்பிறகு ஏற்பட்ட பழக்கத்தில் விளைவு மட்டுமே. உறவுகளின் புனிதம் என்பது காலங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.
உறவு முறைகள்
அவ்வளவு ஏன்? நமது தென்கிழக்காசியாவிலேயே உறவுகள் குறித்த மாற்று முறைமைகள் உள்ளனவே. தாய்லாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட சொத்துகளைப் பாதுகாக்க இரத்த உறவுள்ள சகோதரனுக்கும் சகோதரிக்கும் திருமணம் செய்துவைக்கும் முறை இருந்தது. நமது நாட்டில் மலாய்க்காரர்கள் சகோதர உறவு முறை கொண்டவர்களைத் திருமணம் செய்துக்கொள்ளவில்லையா? ஆக! காதல், காமம், திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஏற்பவும் இனங்களுக்கு ஏற்பவும் பழக்கங்களுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது.
தமிழ் இலக்கியத்தில் தாய்மை
சரி, அப்படியென்ன தயாஜி அப்படியென்ன தமிழ் இலக்கியத்தில் இல்லாததைப் புதிதாகக் கூறிவிட்டார் என ஆராய்ந்தாலும் சொல்லும் அளவுக்கும் விடயம் புதிதில்லை. ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ எனும் பாலியல் சிக்கலை மையமாக வைத்த படைப்பு அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாய் மீதான பாலியல் சிக்கலை எழுதி 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்குகிறது இவ்வுளவியல் நாவல். அதே போல இன்று தமிழில் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலும் மகள் – அப்பாவுக்கிடையிலான காதலை, காமத்தைப் பேசுகிறது. மிக அண்மையில் அமைப்பியலில் மிக முன்னோடியாகவும் தமிழின் மிக முக்கிய விமர்சகராகவும் கருதப்படும் தமிழவன் நடத்தும் சிற்றிதழில் ஒரு சிறுகதை இவ்வாறு இருக்கும். தனது தாய் நடித்த நீலப்படத்தைத் தற்செயலாகப் பார்த்து ஓர் இளைஞனுக்கு ஏற்படும் வெறுப்பு பின்னர் காமமாக மாறும்.
முதலில் இது போன்ற சம்பவங்கள் இலக்கியப் பிரதிகள் வெளிவரக் காரணம் என்ன? அவை இந்தச் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முதல் காரணம். நமது நாட்டில்கூட விரும்பத்துடனோ வல்லுறவாகவோ இது போன்ற சம்பவங்கள் நடப்பது பதிவாகியுள்ளன. சில நீதிமன்றம் வரை சென்றுள்ளன. இலக்கியம் ஒரு சமூக நிகழ்வின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. மாறாக அது ஒரு தினசரி நாளிதழின் வேலையைச் செய்யவில்லை. தினசரிகள் பெரும்பாலான மக்கள் விரும்பும் தகவல்களை பிரசுரிக்கின்றன. இலக்கியம் யாரின் விருப்பம் பொருட்டும் இயங்குவதில்லை. தினசரிகளுக்கு எதை வெளியிட வேண்டும் / கூடாது என்ற விருப்பு வெறுப்புகள் உண்டு. இலக்கியத்துக்கு அது கிடையாது. இலக்கியத்தின் வேலை சமூகத்தை தூக்கி நிறுத்துவது என நம்பிக்கொண்டிருப்பவர்கள் உலக இலக்கியப் போக்கை கவனிக்கவில்லை எனப் பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.
உளவியல் என்ன செய்கிறதோ அதையே இலக்கியம் தன் வழியில் செய்கிறது. பிராய்ட் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளும் உலகம் ஓர் இலக்கியவாதி அவ்வாய்வை தனது புனைவில் சுதந்திரம் வழி செய்யும் போது ஏற்பதில்லை என்பதே வருத்தம். ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய இளம் இலக்கியவாதிவரை பேச முயலும் உளவியலை ஓர் மலேசிய இளைஞன் பேசினால் குற்றமாகிவிடுகிறது.
இந்து மத புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் எல்லயற்ற மனித உறவுமுறைகள் பற்றி எக்கச்சக்கமாக எழுதப்பட்டுள்ளன. சொல்லப்போனால் மகாபாரத்தில் இல்லாத கருவோ, கற்பனையோ, கதையோ இல்லை என்றே சொல்லலாம். இன்றைக்குப் புதிய சிந்தனைகளாகவும் போக்குகளாகவும் கொள்ளப்படும் எல்லாமே பாரதக் கதைகளில் உள்ளன. ஆண் பெண்ணாவது, பெண் ஆணாவது, திருமணத்துக்கு முன்பே குழந்தை பெறுவது, பிற ஆண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது, பெண் – ஆண் இருபாலருமே பல தார மணம் புரிவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதைவிட்டு நம் ஒழுக்க சீலர்கள் வருவதில்லை. மகாபாரதத்தை ஒழுக்கக் கேடான நூல் என எரிக்கவும் தயாராக இல்லை. மாறாக இந்து மதத்துக்கு ஒரு அவப்பெயரென்றால் கொதித்து எழுகிறார்கள். இது என்ன நியாயம்?
Haruki Murakami என்ற உலகப் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் Kafka on the Shore என்ற நாவலில் ஒரு சிறுவன் தனது தாயையும் சகோதரியையும் புணர்வது பற்றி எழுதியிருப்பார். அந்த நாவல் மில்லியன் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டது. ஏராளமான விருதுகளை வென்றது. 2005ல் இந்நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நியூ யார்க் டைம்ஸிஸ் தலைசிறந்த 10 நூல்களில் ஒன்றாக இடம்பெற்றது. அப்படியானால், வாசித்தவர்கள் அனைவரும் ஒழுக்கக் கேடானவர்களா? விருது கொடுத்த அமைப்புகள் ஒழுங்கை நாசப்படுத்த நினைக்கின்றதா?
முடிவாக
நான் தயாஜி எழுதியது மலேசியாவில் முக்கியமாக சிறுகதை எனச் சொல்ல வரவில்லை தோழர். கதையில் சில பலவீனங்கள் உண்டு. சில இடங்களில் வடிவமைதி தேவைப்படுகிறது. சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியமாகிறது. ஆனால், இங்கு அதுவல்ல பிரச்னை. தயாஜி புனைவின் மூலம் ஆராய அல்லது உடைத்துப் பார்க்க நினைக்கும் சில சமூக புனிதங்களைத் தொடாதே எனக்கூற யாருக்கும் உரிமையில்லை. அது குறித்து பேசினால் நான் விவாதிக்கவே செய்வேன். காரணம் அது காலாகாலமாக உலகம் முழுதும் உள்ள பல படைப்பாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டே வந்துள்ளது. ஏன் அது குறித்தெல்லாம் நம் ஒழுக்கவாதிகள் வாய் திறக்கவில்லை. காரணம் அவர்கள் எதையுமே படிப்பதில்லை. இதை மட்டுமல்ல எதையுமே வாசிப்பதில்லை. ஆனால் பெரிய ஆராய்ச்சி மன்னர்கள் போல பிதற்றுவார்கள். ஒரு அடிப்படையான கேள்விக்கு ஓடி ஒளிவார்கள்.அப்புறம் வேறு எவனாவது தைரியசாலி இருக்கிறானா எனப்பார்த்து , அவன் பின் நின்று நாக்கை நீட்டுவார்கள். இன்னும் நான் குறிப்பிட ஏராளமாக இலக்கியங்களும் ஆய்வுகளும் தமிழில் உண்டு. ஆனால், நான் இங்கு காட்டவிரும்புவது அறிவின் கூர்மையள்ள. நான் ஒவ்வொரு முறையும் நேரம் எடுத்து விளக்கம் சொல்ல முனைவதே உங்களைப் போன்ற இளம் தலைமுறைக்கு மட்டுமே. இந்த விளக்கத்தால் வெளியில் கூச்சல் போடுபவர்கள் தங்கள் எண்ணத்தை பின்னிழுத்துக்கொண்டு செல்வார்கள் என்றெல்லாம் நான் வேடிக்கையாகக் கூட கருதவில்லை. கருத்து வலுவாக உள்ளவனுக்குக் கோபம் வராது. அது இல்லாதவன் கோபம் கொள்வான். சபிப்பான். தனிமனித தாக்குதல் செய்வான். நான் விளக்கம் தருவது உங்களுக்கு. இந்த விளக்கம் உங்களைப் போன்ற குழப்பம் உள்ள இளம் இலக்கிய ஆர்வளர்களுக்குச் சென்றால் போதும்.
மலேசியாவில் இது போன்ற சில முயற்சிகள் தேவை என்றே நான் நினைக்கிறேன். அது முதிராமல் இருந்தாலும் ஒரு தொடக்கத்துக்காகவாவது இது போன்ற இலக்கிய முயற்சிகள் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
அதை வல்லினம் தொடர்ந்து பிரசுரிக்கும்.
நாளை … இவர் கேள்விக்கும் பதில் சொல்லதான் வேண்டும். நண்பர்கள் விரும்பினாலும் சொல்லலாம்.
ஒழுக்கமானவர்கள் போல உங்களையும் வல்லினத்தாரையும் ஏசிக்கொண்டிருக்கும் சிலரின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் போல. என் தோழியிடம் முக நூலில் எப்படிப் பேசினார்கள் என இந்த ஒழுக்கச்சீலர்களின் உண்மை முகத்தை வல்லினத்தில் காட்டுகிறேன். (எல்லாவற்றையும் சேகரித்து அனுப்பினால் வல்லினம் பிரசுரிக்குமா?)அதேபோல எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். தயாஜியின் சிறுகதையில் காளி என்ற பெண் தெய்வத்தின் மீது காமம் கொள்வது போல உள்ளது. இது முறையா? நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன். கடவுளின் மேல் காமம் கொள்வதுதான் நவீன இலக்கியமா ? அல்லது பின் நவீன இலக்கியமா?
unmayil oru vaasaganaaga oru pathivai padikum poluthu avar pin pulathukku etpa sila vimarsananggal thondruvathu eyalbu. Antha vagaiyile intha siru kathai kurithu sila vimarsananggal (tani patta paarvai endru kooda eduthu kollalam). Oru padaipaalanukku avan saarntha moli matrum samuugathin paal oru kadappaadu ullathu enbathu ennudaya karuthu.
Antha konathil irunthu paarkum poluthu neengal kuripittulle oedipus complex matrum thaai vali samuugathil ulla uravu murai eppadi nam tamil samoogathodu thodarbu kolvathu? Tamil padaipaaga irukkum ithai padipavargal perumbaalum Tamil pinpulathai kondavargalaaga irupaargal. Appadi irukke neengal mel pagirnthu ulla karuthum kotpaadugalum antha antha samooga katta amaipugalil kaaala kolathodu thodarbu kondu irukalam. Aaanal oru Tamil vaasaganukku eppadi patta taakathai yetpaduthum? Eluthalan oru samooga marumalarchiyalanaaga kandippaga irukke vendum endru solla villai. Aanal antha samoogathodu/saamoogathikku ovvatha karuthukalai allathu satru appaar patta karuthugalai vaikum poluthu athan thaakam eppadi irukum enbathai satru yosikalam.
Kandippaga ennudaya vaasikum vattam unggal alavukku virinthu illai. Tanggalin pathuvugalil naan niraya terinthu kondu orukiren. Antha vagaiyil neengal koduthulle vilakkam pala puthiya tagavalgalai koduthullathu. Naan paditha alavil kaama unarvugalai migavum melliye kochai paduthate vagayil nilai paduthi nalla kathaigal vantha vannam ullathu. Inthe karuvai appadi solli irukalamo endru tondrukirathu.
Ithu kandipaaga muluvathumaaga enathu tanippatta karuthukal mattume. nandri.
நன்றி…..
//கருத்து வலுவாக உள்ளவனுக்குக் கோபம் வராது. அது இல்லாதவன் கோபம் கொள்வான். சபிப்பான். தனிமனித தாக்குதல் செய்வான். நான் விளக்கம் தருவது உங்களுக்கு. இந்த விளக்கம் உங்களைப் போன்ற குழப்பம் உள்ள இளம் இலக்கிய ஆர்வளர்களுக்குச் சென்றால் போதும்.///
1.”ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)
2. “தாய், மகள், சகோதரி – எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை அறிவாளியையும் வெற்றிகொள்ளும்” என்கிற மனுஸ்மிருதியின் உத்தரவு அன்றிருந்த நிலைமையை விளக்கப் போதுமானது.
– பண்டைய அமைப்புமுறை: ஆரிய சமூகத்தின் நிலை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 7 பக்கம் 12 மற்றும் 389
நான் விரும்பி வாசிக்கும் இணைய இதழ்களில் வல்லினமும் இடம் பெரும்.காரணம்,மலேசியாவில் இருந்து இயங்கிவரும் இலக்கியத் தேடலை பூர்த்தி செய்யும் வலைப்பதிவு.ஆனால்,கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்கிறார் வல்லினம் ஆசிரியர்.அவர்கள் செய்தார்கள் இவர்கள் செய்தார்கள் அப்பொழுதெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை,இப்பொழுது சொல்கிறீர்களே…..என்று வருத்தம்(என்ன கொடுமையப்பா…)
ஐயா..,(திரு.நவீன்..)
நீங்களே சொல்லுங்கள்…..நம் நாட்டில் எத்தனை பேர் தமிழ் மொழி (படைப்புகள் மட்டும் அல்ல….) வாசிக்கிறார்கள் குறிப்பாக இளைஞர்கள்…?அப்படியும் வாசித்தால் ஒரு சிலரே…
அடுத்தாக சில கேள்விகள்,இதற்க்கு பதில் தருவதோ அல்ல தூக்கிவீசிவிட்டு செல்வதோ …..உங்கள் விருப்பம்(து.நவீன் அவர்களுக்கு மட்டும் தான்)
1.எத்தனை தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் சேர்கிறார்கள்…?
இதுப்போன்ற படைப்புகளை பார்த்தால்…அவளவுதான்…..
சரி,உங்கள் பார்வைக்கே வருவோமே….நீங்கள் எழுதியுள்ள பதில் இலக்கியத்தரம் வாய்ந்தது.எங்களைப் போன்ற இளம் படைபாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி….,ஆனால்,”கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்”சிறுகதையை ஒரு வாசகன் வாசிக்கும் பொழுது என்ன என்ன மனதில் தோன்றும்…..?(ஓ…நாமும் நமது “அந்த” அனுபவத்தை எழுதலாம்….போல இருக்கே….என தோன்றுவது திண்ணம்.
இது இனிவரும் காலத்தில் மலேசிய தமிழ்மொழி சிர்குலைக்கும் என்பது உண்மை….
நம் நாட்டில் தமிழ் இலக்கியம் ஒரு மொழிப்பாடமாக எடுத்துக்கொள்ளவே மாணவர்கள் விரும்புவதில்லை….காரணம்,தமிழ் தானே……என்ற அலட்சியம் ….இதற்க்கு தப்பாமல் ஜால்றா போடுவார்கள் பெற்றோர்கள்…
நான் ஒரு மலேசியத் தமிழன்.என் தாய் மொழியில் ஒன்றும் சாக்கடை அல்ல….,அதில் கண்டவர் வந்து அசுத்தம் செய்ய….
உங்களுக்கே தெரியும்,(தமிழ் நாட்டில் உள்ள வர்களைப்பற்றி பேச வேண்டாம்.)
மலேசியாவில் தமிழர்கள் எத்தனை வேதனைகள் படுகிறார்
கள் என்று,மலேசியாவில் தமிழை நிலைநாட்ட எத்தனையோ காரியங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது…
2.நமது தேசிய இல்லக்கியத்தில் இதுப் போன்ற படைப்புகளுக்கு முக்கியத்துவம் தருவார்களா….?
இதுப் போன்ற படைப்புகள் வேண்டும் என்றால் வேறு மொழியில் எழுதிக்கொள்ளுங்கள்….ஆனால்,தமிழில் மட்டும் வேண்டாம்..
.இது உங்கள் வாசகனின் வேண்டுகோள்.
அரு.நலவேந்தன்.
இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.
ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.
அதற்காக தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்’ என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.
இருந்தபோதிலும் படைப்பு மண்டையைக் குடையவே ஆரம்பித்தது.நவீன் சொல்லியிருக்கின்ற கருத்துக்களை அனைத்தும் அருமை. அப்படிப்பார்க்கையில் ஒரு படைப்பாளியாகப்பட்டவன், நவீன் சொல்லியிருக்கின்ற அனைத்து இலக்கியங்களையும் வாசித்தாலேயொழிய தெரிந்திருந்தாலேயொழிய இக்கருத்தையொட்டிய செம்மையான படைப்பினை சீர்த்தூக்கிப் பார்த்து வழங்க இயலாது என்று சொன்னால் அது மிகையல்ல.
அப்படி எந்த ஒரு பரந்த வாசிப்பு அனுபவமும் இல்லாமல் இதுபோன்றதொரு கருவைத்தொட்டு படைப்பினைப் படைக்கப்படுகிறபோது அது வெறும் வக்கிர சிந்தனையின் வெளிப்பாடாகவே பரிணமிக்குமே தவிர நுண்ணறிவு சமாச்சாரங்கள் அங்கே ஒருபோதும் இருக்காது. இக்கதையில் வரும் சில இடங்களின் சம்பவங்களில் எனது வாசிப்பு அனுபவமும் அப்படித்தான் இருந்தது.
ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.
எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்…
ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.
இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.