நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘oedipus complex’ மற்றும் தாய் வழி சமூகத்தில் உள்ள உறவு முறை எப்படி நம் தமிழ் சமூகத்துடன் தொடர்பு கொள்வது? தமிழ் படைப்பாக இருக்கும் இதை படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் மேல் பகிர்ந்துள்ள கருத்தும் கோட்பாடுகளும் அந்த அந்த சமூக கட்டமைப்புகளில் காலகோலத்தோடு தொடர்பு கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு தமிழ் வாசகனுக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். எழுத்தாளன் ஒரு சமூக மறுமலர்ச்சியாளனாக கண்டிப்பாக இருக்க வேண்டும் என சொல்லவில்லை. ஆனால் அந்தச் சமூகத்தோடு / சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துகளை அல்லது சற்று அப்பாற்பட்ட கருத்துகளை வைக்கும் போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை சற்று யோசிக்கலாம்.
கண்டிப்பாக என்னுடைய வாசிக்கும் வட்டம் உங்கள் அளவுக்கு விரிந்தது இல்லை. தங்களின் பதிவுகளில் நான் நிறைய தெரிந்து கொண்டு இருக்கிறேன். அந்த வகையில் நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் பல புதிய தகவல்களைக் கொடுத்துள்ளது. நான் படித்த அளவில் காம உணர்வுகளை மிகவும் மெல்லிய கொச்சை படுத்தாத வகையில் நிலை படுத்தி நல்ல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தக் கருவை அப்படிச் சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
Vehl Murali from Kuala Lumpur
December 4, 2013 at 12:32 am
அன்புமிக்க நண்பருக்கு, இன்று உண்மையில் வேறொரு நண்பரின் கேள்விக்கு பதில் சொல்ல இருந்தேன். ஆனால், கட்டுரைக்குப் பின்பு வந்த உங்களின் கருத்துக்கு சில விளக்கங்கள் சொல்வது உத்தமம் என நினைக்கிறேன். உங்கள் எழுத்தில் உள்ள நேர்மை அதற்கு மிக முக்கியக் காரணம். ஆங்கில எழுத்துருவை நீங்கள் உபயோகித்திருந்தீர்கள். நான் தமிழ்ப் படுத்தியுள்ளேன். கொஞ்சம் முயன்று தமிழில் எழுதினால் வாசிப்புக்கு சுலபமாகும் என நினைக்கிறேன். அடுத்த முறை முயலுங்கள்.
விசயத்துக்கு வருவோம்,
உங்கள் கடிதத்தில் இரு விடயங்களைச் சொல்லியுள்ளீர்கள். ஒன்றாவது ‘oedipus complex’ அல்லது தாய் வழி சமூகம் போன்றவற்றை எப்படித் தமிழ்ச் சமூகத்துடன் தொடர்பு படுத்துவது. அதேபோல சமூகத்துக்கு ஒவ்வாத கருத்துகளை வைப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்தவை.
தோழர், நமது தமிழ்ச் சமூகம் தாய் வழி சமூகம்தான். ஆய்வுகள் மூலமாக அதைதான் சொல்கிறார்கள். நாம் நம்மை தொல்குடிகள் என்று கூறிக்கொண்டால் நம்முடையது தாய்வழி சமூகமாகவே இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. அடுத்தது ‘oedipus complex’ குறித்தது. ஓர் ஆய்வு நடந்த பின் அதை மையப்படுத்தி ஒரு புனைவு இயற்றப்படுவதில்லை. மாறாக சமூகத்திடம் இருந்துதான் ஆய்வுகள் தொடங்கி கோட்பாடுகளாகக் கட்டமைக்கப்படுகின்றன. நான் சொல்வது புரியும் என நினைக்கிறேன். உதாரணமாக கார்ல் மார்க்ஸ் பொருள்முதல்வாதம் பேசுவதற்கு முன்பே இந்த உலகில் முதலாளிகளின் ஒடுக்கு முறை இருந்தது. மார்க்ஸ் அந்தச் சமூக சிக்கலை ஆராய்கிறார். ஒருவன் இந்த முதலாளிகளின் ஒடுக்கு முறையை தன் கதையில் எழுதும் போது அவன் மார்க்ஸியம் படித்துவிட்டுதான் எழுத வேண்டும் என்பதில்லை. காரணம் மார்க்ஸுக்கு முன்பே சமூகத்தில் பொருளாதார ஒடுக்குமுறைகள் இருந்துள்ளன.
சிக்மண்ட் பிராய்ட் என்பவர் ஒரு உளவியலாளர். அவர் இல்லாத ஒன்றை திடீர் எனக் கண்டுப்பிடிக்கவில்லை. மாறாக சமூகத்தை ஆராய்வதன் மூலமே உளவியல் சார்ந்த கண்டடைவுகள் சாத்தியம். இதை எளிய கல்வி அறிவுள்ள ஒருவனுக்குக் கூட விளங்கும் என நினைக்கிறேன். ஆனால், வெளியில் நின்று கூச்சலிடுபவர்களுக்குப் புரிவதில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், எந்த ஆய்வாளரும் புதிதாக ஒரு கோட்பாட்டைக் கண்டுப்பிடித்து அதற்குள் சமூகம் இயங்க வேண்டும் என சொல்லவில்லை. மாறாக சமூகத்தைப் பொறுத்தே ஆய்வின் முடிவுகள் அமைகின்றன. தோழர், நீங்கள் இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்படி இருக்கையில் சமூக மனம் என்பது ஒவ்வொரு மனநிலைக்கும் ஒவ்வொன்றாக இருக்குமா என்ன? தாய், தமக்கை , தந்தை போன்ற உறவுகள் நம்மைப் போலவே மேல் நாடுகளிலும் மதிப்பிற்குறியவைதான். நாம் கொஞ்சம் அதிகமான புனிதங்களைச் சேர்த்துவிடுகிறோம் அவ்வளவே.
சரி, இது எப்படி இந்தச் சமூகத்துடன் இணைந்து போகிறது எனப் பார்த்தால் நடப்புச் சூழல் மட்டுமே உதாரணம். நடப்புச் சூழலில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை எனச் சொல்ல முடியுமா? நமது வாழ்நாளிலேயே எத்தனை சம்பவங்கள் இது போல நடப்பதை செவிமடுக்கிறோம். குடும்பங்களுக்குள் நிகழும் பாலியல் கொடுமைகள் தொடர்பாக அண்மையில் கூட நமது தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடல் நடந்ததே. நடக்கும் சூழலை ஓர் எழுத்தாளன் தன் எழுத்தில் கொண்டுவருவதில் என்ன தவறு இருக்கப் போகிறது. அதுவும் தயாஜியின் கதையில் உள்ள கதாப்பாத்திரம் தான் மலக்கூடக் குளிக்குள் தண்டிக்கப்படுவதாகவே முதலிலிருந்து கூறி வருகிறார்.
தண்டனை ஏன் கிடைக்கிறது? தவறு செய்வதால்தான். கதையில் வருபவன் தான் தவறு செய்துவிட்டதாகவும் அதனால் தனக்கு தண்டனை கிடைக்கிறது என்றும் தன்னை மன்னித்துக்காப்பாற்ற வேண்டும் என்றும் மன்றாடுகிறான். அவன் தான் தவறாக நினைக்கும் தருணங்களை மீட்டுணர்கிறான். அதில் அவன் தாயைக் காமத்துடன் பார்த்தது தவறுதான் எனச் சொல்கிறானே தவிர அப்படிச் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்யவில்லையே.
தோழர், இது முதலில் பின்நவீன கதையெல்லாம் இல்லை. மிக எளிய யதார்த்த கதைதான். இந்தச் சமூகம் எதையெல்லாம் தவறு எனச் சொல்கிறதோ அதையெல்லாம் தவறு எனவே கதாபாத்திரமும் சொல்கிறது. தவறை தவறு எனச் சொல்வதில் ஏன் எல்லோருக்கும் பதற்றம் வருகிறது. ஒரே காரணம் இதுவரை சொல்லப்படாத தவறை அது சொல்கிறது. நமது பொது புத்தியில் தவறு என்பது திருட்டு, கொலை, கொள்ளை அல்லது பாலியல் வல்லுறவு என சுருங்கி விடுகிறது. நம் கண்ணுக்குத் தெரியாத கருத்தில் நுழையாத சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தத் தவறுகளைச் சொல்பவன் குற்றவாளியாகிவிடுகிறான்.மேலை இலக்கியங்களில் இதுபோன்ற உறவுகளை நியாயப்படுத்தும் பிரதிகள் ஏராளம் வந்துள்ளன. சில திரைப்படங்களாகி விருதுகளையும் குவித்துள்ளன. தமிழில் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவல் முடிவும் காதலுடந்தான் முடியும்.
இரண்டாவதாக நீங்கள் சொல்லியுள்ள விடயத்துடன் நான் ஒத்துப்போகிறேன். நீங்கள் சொல்வதைதான் நான் வடிவமைதி என்கிறேன். அதை கூற எல்லோருக்கும் உரிமை உண்டு. காரணம் நாம் அனைவருமே வாசகர்கள். ஆனால் தயாஜி மட்டுமல்ல வேறு எந்த எழுத்தாளனையும் இதை எழுதாதே அதை எழுதாதே என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்பது மட்டுமே என் தரப்பு.
நான் பெரிய இலக்கியப் பின்புலம் கொண்டவனெல்லாம் இல்லை… ஒரு சாதாரணமான வாசகன் என்ற முறையில் இந்த பதிவை செய்கிறேன்….
தயாஜியின் கதையைப் படித்ததில் இருந்து நான் புரிந்து கொண்ட விஷயம்….
கட்டுக்கடங்காத காமத்தின் பிடியில் சிக்கி தன் தாயின் உடம்பை கூட பார்க்க முயற்சித்த ஒருவன், இறுதியில் தான் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக எண்ணி, எண்ணிப் பார்த்து, நரக வேதனையில் சிக்கித் தவிக்கிறான்.
இதைத் தான் கதையின் மையக் கருத்தாக நான் புரிந்து கொண்டது.
இது சரியா? இதைத் தான் கதை சொல்ல வருகிறதா?
என்னுடைய நிலைப்பாடு
1. கடவுள், சொர்க்கமும், நரகமும் எல்லாம் நம் மனதில் தான் உள்ளது என்று நம்புகின்றவன் நான். அந்தவகையில் ஒருவன் நிச்சயமாக தான் செய்த கொடுமையான தவறுகளுக்கு தன் மனசாட்சியிடம் மண்டியிட்டே ஆகவேண்டும்.
2. இந்த கதையில் வருவது போன்று வக்கிர எண்ணம் கொண்ட மனிதர்கள் உலகில் இல்லவே இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது. நிச்சயம் இருக்கிறார்கள். அதற்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் சில உண்மை சம்பவங்களே சாட்சி.
3. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒருவன் இந்தக் கதையைப் படித்து தான் கெட்டுப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கையடக்கருவிகளில் HD தொழில்நுட்பத்தில் ஆபாசப் படங்களையும், மஞ்சள் பத்திரிக்கைகளையும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம், படிக்கலாம்.
கதை குறித்த எனது கேள்விகள்
1. தன் தாயையே காம நோக்கோடு பார்த்ததற்காக தன் தவறை உணர்ந்து தொடக்கத்திலேயே தாயிடம் மன்னிப்பு கேட்கிறான்.
அப்படி மன்னிப்பு கேட்கும் போது தான் எப்படி இந்த காரியத்தை செய்யத் துணிந்தேன் என்பதை அன்றைய நாளில் தான் பார்த்த புளூ பிலிமை காரணம் காட்டுகிறான்.
மனசாட்சியின் கோரப்பிடியில் சிக்கி, சித்திரவதை அனுபவிக்கும் அவன் தான் பார்த்த புளூ பிலிமில் கண்ட காட்சிகளை அணு அணுவாக ரசித்து தாயிடம் விளக்குவது ஏன்?
//அவளை தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் நேரே நீண்ட நாற்காலியில் வைக்கிறான். இருவரும் சட்டைகளை அவிழ்க்கிறார்கள். நினைத்தது போலவே அவளின் இடது வலது ரிப்பனை அவள் அவிழ்க்கிறாள்//
படிக்கும் வாசகர்களுக்கு கிளர்சியூட்டுவது போன்ற இந்த வரிகள் இந்த இடத்தில் அவசியம் தானா?
2. //கணவனை விட காதலனுக்குத்தானே பெண்ணுடம்பில் உரிமை அதிகம். என் உரிமை//
இந்த வரி அவனின் தனிப்பட்ட ‘statement’ என்று வைத்துக்கொண்டாலும், அது தவறா? சரியா? என்று அவன் உணர்வது போல் கதையின் முடிவு வரை எங்கும் கூறப்படவில்லை.
இந்த வரியைப் படிக்கும் வாசகர்களுக்கு வல்லினம் கூறவரும் வருவது என்ன? இந்த வரி குறித்த உங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவும்.
3. இந்தக் கதையில் ஆங்காங்கே “மூத்திரம் வருகிறது” என்று கூறப்படுவதற்கு காரணம் அவன் பயப்படுகிறானா?
//காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்.//
பயந்தவன் இப்படி கூறுவானா? பின் காளி வருகிறாள் என்ற போது எதற்கு மூத்திரம் வருகிறது?
பயத்தினாலா?
மொத்தத்தில் அந்தக் கதாப்பாத்திரம் தன் தவறை உணர்ந்தானா இல்லையா என்று எனக்கு புரியவில்லை. உணர்ந்தான் என்றால் எந்த இடத்தில் உணர்ந்தான்?
விளக்கமளிக்க வேண்டும்…
இவண்
பீனிக்ஸ்தாசன்