இன்னிக்குதான் கொக்குக்கும் நரிக்கும் கல்யாணம் போல. ஒரு மாதிரியா வானம் இருட்டிக்கிட்டு, மழை வந்தும் வராமலும் வெயிலடிச்சா அம்மா அப்படித்தான் சொல்லுவா.
அது உண்மையா இல்லையானெல்லாம் தெரியல… ஆனா இந்த மாதிரி நடக்குறதுக்கு சாத்தியப்படாத இல்ல நம்ம கண்ணுக்குதெரியப்படாம, நடந்துருக்குமோங்குற சந்தேகத்த தாங்கி நிக்கிற சங்கதியெல்லாம் கேட்டா என்னவோ சந்தோசமாதான் இருக்கு. அத சந்தோஷமுன்னு கூட சொல்லிட முடியல. ஏதோ ஒரு ஆராய்ச்சியோட தொடக்கமோன்னு மனசு பரபரங்குது .
கொக்கு…நரி… கல்யாணம்.
அம்மாவுக்கு எங்கிருந்து இது தெரிஞ்சதோ? ஒரு வேள பாட்டி சொல்லி கொடுத்திருப்பா, இல்ல வாய திறக்கும்போதே அந்தக் காலத்துலயெல்லாமுன்னு தொடங்கும் கும்பல் ஒன்னு கோயில் அரசமரத்துப் பக்கம் அளப்பாங்கள… அப்போ கேட்டிருக்கலாம். அப்படியும் இல்லனா சும்மா வெளையாட்டு காட்டுறதுக்கு அம்மா சின்னப்பிள்ளையில் எனக்கு சொல்லி காட்டியத நான்தான் உண்மையாக்கி பாக்குறனோ என்னவோ. இந்த முடிச்சி இப்படியே இருந்து நாளைக்கு நானும் சின்ன தம்பிக்கிட்ட சொல்ல, அப்படியே தொடர்ச்சியா இது போனாலும் போவும். எவ்வளவு தூரம் போவும்… அதவிட முக்கியமா இது எவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கும். எதுவும் சரியா தெரியல.
நான் கொக்கையெல்லாம் எப்பாவது டி.விடில பாக்குறதுதான். பாடாங் செராயிலிருந்து ஸ்கூலுக்கு வர பசங்க மட்டும் நாகா லீலீட் கம்பத்த கடக்கும் போது அப்பப்ப கொக்கு, வயல் பக்கம் பார்த்ததா சொல்லுவாங்க. “டேய் எப்படிடா இருந்துச்சி கொக்கு… வெள்ளையாவா? கதையில் வரமாதிரி அலகு ரொம்ப நீட்டா இருந்துச்சா? ஒத்தக்கால்ல நின்னுச்சா? ‘கொக்கு’ எல்லா எழுத்தையும் பாரேன் ககர வரிசையிலே வருதுன்னு” அன்றைக்கு முழுதும் கொக்கு புராணமா இருக்கும். அப்பமட்டும் சம்பந்தமே இல்லாமே தண்ணிமல வாத்தியார் சொல்லிக் கொடுத்த செய்யுளடியில் கடைசி ரெண்டுமட்டும் ஞாபகத்துக்கு வந்திடும். உடனே நான் ஆரம்பித்துவைக்க, வேறு நண்பர்கள் வெவ்வேறு மாதிரியா அதே அடிகளே சொல்லுவானுங்க.
“ஓடுமீனோட உருமீன் வருமளவும்
வாடியிருக்குமாங்கொக்கு”
எங்க கம்பத்துபக்கம் கோட்டான் வருவதோட சரி. அது கூட மேட்டுவீட்டுக்காரர் பக்கம் உள்ள கிளாபா சாவிட்டுல எலிகூட்டம் பெருத்துட்டதால வாங்கியாந்து விட்டதாம். அது என்னவோ தெரியல சின்ன வயசிலேருந்தே மிருகமுன்னு சொன்னாலே உள்மனசு கைதட்டும்.
வீட்டுக்குப் பின்னால கோழிங்க மேயுறது கூட ஒரு நேஷனல் ஜோகராப்பிக் மாதிரிதான் இருக்குது. என்னா எவனாவது வெள்ளைக்காரன் வந்து பின்னாலேயே தஸ்புஸ்சுனு குரல் கொடுத்தா இதுங்களோட மவுசே தனி. இதையெல்லாம் விட இப்படி சாமான் கொட்டாய் பக்கம் உக்காந்து பாகுறது ஏனோ சலிப்பு ஏற்படுத்த மாட்டேங்குது. இப்பயெல்லாம் அது ஒரு கடமையா கூட ஆயிடுச்சி. தேவைப்பட்டா வாழைத்தார் நுனியில் ரொம்ப லேசாவே வரிசைப்பிடிச்சி மஞ்சலா நிக்கிர பூவ குத்தி, விழுந்ததுல ஊதி எடுத்து, உள்ளுக்கு திக்குலோண்டு இருக்கிற தேன் திட்ட உரிஞ்சவும், ஒரு நீண்ட குச்சியில் காலியான டின்னகட்டி பழுத்த பப்பாளிய தூக்குனாப்படி புடிச்சி, டின்னுக்குள்ள அத லபக்குன்னு விழவைக்கவும், லஸ்டிக்குல அப்போதைக்கு தெரியுற ஒன்ன குறியாவச்சி அடிக்கவும், அந்த சாமான் கொட்டாய் படிக்கட்டு மட்டும் எப்பவும் எனக்காகக் காத்துக்கிட்டு ஈரத்தில பிசுபிசுத்துகிட்டுதான் இருக்கு. அந்தத் தண்ணியோட மூலம் எதுன்னு தெரியல.
ஆனா சாமகொட்டாயோட சம்பந்தப்படுத்திப் பார்க்கும்பொழுது, இந்த ஈரம் கொஞ்சம் அருவருக்க தக்கதாகத்தான் இருக்கும். அதுவும் கூட இப்ப வெல்லாம் பழகிப்போய், உக்காந்து எழுந்திருச்சதும், சிலுவாருக்குப் பின்னால வட்டமா ஈரம் இருந்தாதான் திருப்தியாகுது மனசு.
ஆரம்பத்துலயெல்லாம் இந்தக் கோழிங்கள எனக்கு பிரிச்சி பார்க்க தெரியாது. சேவலுக்கெல்லாம் ஒரே மாதிரி கம்பீரம். பொட்டைக்கு எல்லாம் ஒரே மாதிரி ஒயரம்.
ஆனா இப்பவெல்லாம் கோழிங்க குடும்பம் நடத்துறத பாக்குறதுதான் ரொம்ப புடிச்சமான வேலையா போச்சு. அதுவும் ஆறு மணி வாக்குல அம்மா பண்ண கோழிக்குக் கண்டோங் போடும்போது எங்கிருந்தோ பொதருலேருந்து பொத்துகிட்டுவரும் கோழிகள பார்க்க ரொம்பவே வேடிக்கையா இருக்கும். எப்பவும் அம்மா நம்பி எங்கையில கண்டோங் டப்பியை கொடுத்ததில்லை. சரிசமமா பகிர்ந்து போட மாட்டேனாம். அம்மா தீனியெல்லாம் போட்டு முடிஞ்சதும் எம்பங்குக்கு நானும் கொஞ்சமா மணல அள்ளி ‘பெ…பெ’ன்னு வீசுவேன். வேகமா ஓடியாந்து மண்ண கொத்திபாத்து, ஒரு மாதிரியா சிலிப்பிக்கிட்டு ஏமாந்த கடுப்பில போகும். அப்ப மட்டும் ஏதோ கெட்டவார்த்தையிலே அதுங்க என்னைய திட்டுறதா தோணும். என்ன கெட்ட வார்த்த… கூட்டாளி பய எப்பவும் வெரல அசிங்கமா நீட்டிகாட்டி சொல்லுவானே அதுவா? இல்ல போர்ம் ஃபைப் படிக்கிற அண்ண அன்றைக்கு தலையில தட்டி சொன்னார அதுவா?
சாதாரண பார்வையிலயே இப்ப என்னால கோழிங்கள பிரிச்சிபாக்க முடிஞ்சது. அந்த செவப்பு நெர பொட்டைக்கு பேரு செவப்பி.. கொண்ட மொளஞ்சதும் வளராத சேவலுக்கு பேரு கட்டையன்… கறுப்பு பொட்டைக்கு கறுப்பி… இப்படி எல்லாமே காரண பேர்தான். அதுக்கு மூலகர்த்தா யாருன்னு எல்லாம் கணக்கு இல்ல. ஏதோ பேச்சித்தொடர்ச்சியில் சட்டுனு அகப்படுகிற வார்த்தைகள்தான் அதுங்களுக்கான பெயர். ஆனா காஞ்சப் புண்ணையே திரும்ப திரும்ப நோண்டுற வெரலாட்டம்… எப்பவுமே எங்கண்ண கட்டிப்போடுகிறது கோணக்கழுத்து சேவ தான்.
அடையாளம் தெரியறதுக்காக அம்மா சொன்ன வார்த்தைதான் அதுக்கு பேராவே ஆயிடுச்சி. மத்த சேவலவிட கொஞ்சம் ஒசரமா, சோத்துக்கை பக்கமா கழுத்த சாச்சாப்படி நடக்கும் கோணக்கழுத்து.
வளர்ந்த புதுசுல எல்லா சேவலையும் போல தெடமாதான் இருந்துச்சி. அப்புறம் ஏதோ சீக்குபுடிச்சி, இறகுகள் கொஞ்சம் கொட்டிப்போயி, ஒரு நான்கு நாளா ஒரங்கியே கெடந்து, தெம்பாயி எழுந்தப்ப கழுத்து மட்டும் கோணலா ஆகி, ஒடம்பு மெலிஞ்சு போயி பார்க்க பரிதாபமா இருந்தும், எல்லா சேவலுக்கும் முந்தி கொக்கரகோன்னு கூவுனப்ப அம்மா ஆச்சரியப்பட்டுதான் போனா.
சீக்கு வந்ததாலேயே எந்த விருந்துக்கும் அம்மா அத அறுக்க நெனச்சதில்ல.
அதுமட்டும்தான் காரணம்னு சொல்லிவிட முடியாது. ஒரு சீக்கு கோழிங்குறதவிட அம்மாவுக்கு வேறு ஏதோ காரணம் இருந்திருக்கனும். மத்த மத்த சேவலெல்லாம் தீபாவளிக்கும் பொறந்தநாளுக்குமா அறுபட கோணக்கழுத்து எத்தனையோ தீபாவளியே பாத்திடுச்சி.
மெலிஞ்சி இருந்தாலும் ஒடைக்க முடியாத ரோத்தான் கம்பாட்டம்தான் கோணக்கழுத்து. எந்த நேரமும் திமிராவே சுத்தும்.
கொட்டாயி இருந்தாலும் கொய்யா மரத்துமேலதான் அடையும். பல சமயத்துல தனியாதான் திரியும். பொட்டைய பாத்துட்டா போதும்… ஒரு மாதிரியா கால தூக்கி கோணலா நடந்து பொட்டையோட தலைய பாத்து லொட்டுனு கொத்தும். அதுக்குன்னு தனி ராஜியம்… தனி சுதந்திரம். அது மேல மட்டும் அப்படி ஒரு ஈர்ப்பு எதுக்குன்னு தெரியல. ஒரு வேள அதுவும் எங்கப்பாவ போல இழுக்குறதாலயோ!
ஆமா அப்பாகூட கோணக்கழுத்து சேவலாட்டம்தான். எந்த நேரமும் நெஞ்ச நிமித்திதான் நடப்பாரு. அப்படிகூட முழுசா சொல்லிவிட முடியாது.. சீன தெளகேகிட்ட வேலசெய்யிறப்ப அந்த நிமிந்த நெஞ்ச பாக்க முடியாது. ஒரு தரம் டவுனுக்கு போனப்ப அப்பாவ கடையில பாத்துட்டேருக்கேன். சீனன் என்னமோ கத்திடிகிட்டு இருக்க கொஞ்சம் அதிகமாதான் குனிஞ்சிருந்தாரு அப்பா. அங்க வளைஞ்ச முதுகத்தான் அப்பா ரொம்பவும் கஷ்டப்பட்டு வீட்டில நிமித்தப்பாக்குறாருன்னு நினைக்கிறேன்.
பல அம்சம் அப்பாவுக்கும் கோணக்கழுத்துக்கும் ஒத்தே போச்சி. சும்மாவே அம்மாவ மெரட்டுவாரு…சமயத்துல அடிகூட விழும். அதெல்லாம் அம்மாவுக்கு வலிக்குமான்னு தெரியல. அப்பாவிட அம்மா ரொம்பவே பலசாளியா தெரிவா.ஒசரம்கூட அதிகம்தான்.
அப்பா கொஞ்சம் ஒடம்ப நிமித்தி நின்னா எத்தன எலும்புன்னு எண்ணி பார்த்திடலாம். ஆனாக்கா டி.வியில இத்தனூண்டு நரிய கண்டதும் ஓடிஒளியற மாடு மாதிரிதான் அம்மா அப்பாவ பார்த்தும் பயந்து நடுங்குவா. வீட்டுக்குள்ளகூட சமயத்துல நேஷனல் ஜொகராப்பிக் நடக்கத்தான் செய்யுது.
ஒன்னாப்பு படிக்கிறப்பவெல்லாம் நான்கூட அப்பாவபாத்து ரொம்பவும் பயப்படுறது உண்டு. வாழ்வு எங்கேருந்து தொடங்கிச்சின்ற ஞாபக தளம் தெளிவா இருக்குறதுக்கு முன்பே அப்பாவோட மிரட்டல் படலம் எங்கிட்ட தொடங்கியிருக்க வேண்டும்.
கற்பனையில் கத்தி சண்ட போடுற எதிரிக்குக்கூட அப்பாவோட உருவத்ததான் வச்சிருக்கேன். எப்பவுமே அப்பாவுக்குதான் தோப்பு. எப்பவாவது மூங்கியில அம்பு செஞ்சி சாதாக்குன்னு வாழ மரத்துல குத்தி அப்பா ஒடம்புல ரத்தம் வலியுறதா நெனச்சுக்குவேன்.
அப்பா என்னோட பெரிய எதிரியா தெரிஞ்சாரு. அப்பாவுக்கு என்னைய பாக்கும் போதெல்லாம் படிக்கிறது மட்டும்தான் நினைவுக்கு வரும் போல. ஏண்டா படிக்கலன்னு எந்தப்பக்கம் பார்த்தாலும் கேப்பாரு, இன்னிக்கி பேப்பர் படிச்சியா? புதுசா ஏதாவது? டவுனுக்கு போரேன் ஏதாச்சம் வேண்டுமா? ஸ்கூலு எத்தனை மணிக்கு முடிஞ்சது? இப்படி எவ்வளவு கேக்கலாம். கடமைக்கு அப்பா ஏதாச்சம் பேசியாகனும்.. அதுக்கு அப்பா மனப்பாடம் செஞ்சி வச்சிருக்கிற ஒரே வரிதான் இது.
இப்பவெல்லாம் அப்பாவோட பூச்சாண்டிதனம் எனக்கு அவ்வளவா பயம் கொடுக்குறதில்ல. திரும்ப திரும்ப மெல்லும்போது ருசி இல்லாம போயிடுற சுவிங்கம் மாதிரிதான் ஒரே சலிப்ப கொடுத்திடுச்சி. அப்பாவோட உருட்டல் மெரட்டலும் அதுக்கு அம்மாவோட அழுகையும். அந்தக்காலத்து எம்.ஜி.ஆர். படத்துல ஹீரோயினுகிட்ட கெட்டவன் வந்துட்டா ஒடனே வந்து காப்பாத்துர ஹீரோ மாதிரிதான் அம்மா. ஆமா.. அம்மாதான் எனக்கு ஹீரோ.
ஒவ்வொரு தடவையும் அப்பா ஏதோ திட்டிக்கிட்டு எங்கிட்ட கையோங்கி வரும்போதெல்லாம் என்னைய மொத்தமா மூடி, முழுசா இருக்கி, அவளோட அப்போதைய வேர்வையில என்னைய நனச்சி, அவன விட்டுடுங்கன்னு அழுது, அப்பாவோட கோவத்தையெல்லாம் அவ முதுகுல வாங்கிகிட்டு, அலுத்துப்போயி அப்பா போனதும் ஒன்னுமே நடக்காதது மாதிரி கண்ண தோல் பட்டையில் தொடச்சிக்கிட்டு, மூக்க சட்டை அடியில நனைச்சிக்கிட்டு, விட்டுவச்ச மங்கை கழுவவோ… துணிய தொவைக்கவோ போயிடுவா.
அந்தச் சமயமெல்லாம் அம்மாவோட அந்தக் கட்டிப்புடிச்ச இறுக்கம்தான் ஒரு முப்பது நிமிஷம் வரைக்கும் ஒடம்புலேயே இருக்குறதா தோணும்.
கொஞ்ச நேரம் அம்மா வாசம் எம்மேல அடிக்கும். கண்ணீரா வியர்வையான்னு ரகம் பிரிச்சி பார்க்க முடியாத நீர் அங்கங்க சொட்டியிருக்கும். அதெல்லாம் ரொம்ப நேரம் ஒடம்புல இருக்கனுமுன்னு ஆசையா இருக்கும். எனக்கு புடிச்ச எதுவும்தான் ரொம்ப நேரம் எங்கிட்ட இருக்குறதில்லையே! இந்த சாமான் கொட்டாய் படிக்கட்டு ஈரத்தைத் தவிர.
அப்பா வந்துட்டாருன்னு உள்ளுக்கு ஏதோ ஒரு பாத்திரம் சத்தமா சொல்லி சிரிச்சது. ஏறக்குறைய இது மத்தியான சாப்பாட்டுக்கு அவர் வரும் நேரம்தான். வழக்கமா அதை அறிய நான் நூதனமான முறை ஒன்ன வச்சிருந்தேன். சாமான் கொட்டாய் படிக்கட்டுல அமர்ந்து பார்த்தா, சூரிய வெளிச்சம் கூரைக்குப்பின்னால சரியா டிவி ஏரியலுக்கு மேலயோ… கொஞ்சம் பக்கதுலயோ நிக்கிறது தெரியும். ஒடனே புக்க மொகத்துக்கு முன்னாடி கிடத்தி ‘சிறகொடிந்த பறவை’ன்னு ரொம்பவேகமா கத்தி படிக்க தொடங்குவேன்.. ரொம்ப காலமா அந்தச் சிறகொடிந்த பறவைதான் என்னை காப்பாத்திக்கிட்டு இருந்தது. ஒரு வகையில அந்தக் கதை எனக்கு நல்லாவே மனப்பாடமாச்சி. அப்பாவுக்கு தேவை எதையாவது நான் படிக்கும் சத்தம். அதுக்கு இது போதுமானதா இருந்தது. இன்றைக்கு மந்தமாயி கெடக்குற வானம் அதுக்கும் வழிவிடல. சோறு போட்டு திங்குறாரு போல. அதுல கூட திமிருதான்… உருட்டிவிட்ட பானையாலயோ… அந்தச் சத்தத்துல ஏற்பட்ட மனசோட சின்ன திடுக்கிப்பிலோ ஆம்பளத்தனத்த காட்டுறாரோ காட்டட்டும். அந்தப் பக்கமெல்லாம் கவனம் போகக்கூடாதுன்னு மனசோட மல்லுக்கட்டிக்கிட்டேன்.
எம்முன்னுக்குதான் கோணக்கழுத்து மேஞ்சிகிட்டிருக்கு. ரொம்பவே திமிரா மத்த சேவல்களைவிட தெம்புல.. கம்பீரத்துல குறைவா இருந்தாலும்.. எல்லாம் தனக்கடிமைங்கிற எண்ணத்துல திரியிரமாதிரி இருக்கு… தூரத்துல புதுசா குஞ்சுபொறிச்ச பெட்டை மீது அதோட கவனம் திரும்புறாப்படி தெரியுது.
“ஏய் ஒரு நெத்திலி கருவாடு பொறிச்சி வைக்க முடியாதா? காலையிலேருந்து என்னாத்த புடுங்கிக்கிட்டிருந்த?” கொஞ்சம்கூட நடப்பத கவனிக்க முடியாதபடி அப்பா ஆரம்பித்திருந்தார். அம்மா இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டா. அப்போதைக்கு அம்மா கொடுக்குற பதிலு சட்டிபானை உருட்டளோ.. தொட்டி தண்ணியோட வேகமான தவிப்பாகவோதான் இருக்கும். அதுக்கதுக்கு அம்மா சரியான ஒலிகள வகுத்து வச்சிருந்தா. என்னாலகூட அம்மாவோட அந்த பாஷையில அப்போதைய உணர்வுகள புரிஞ்சிக்க முடிஞ்சது. “எங்க உன் உத்தம புத்திரன்… படிக்காம என்னா பன்னிக்கிட்டு இருக்கான்?” போச்சுடா வந்துட்டாரா எம்பக்கம். இனி உருப்பட்ட மாதிரிதான்னு தோணுச்சி. இப்ப ரொம்ப நேரமா எதையோ புல்லுக்குள்ள தேடி தேடி களைச்சிபோன கோணக்கழுத்து மெதுவா பெட்ட பக்கம் தலைய தூக்கி பாத்துச்சு. ஏதோ ஒன்னு அதோட பார்வையில தெரிஞ்சது.
“ஒங்களுக்கெல்லாம் சம்பாரிச்சி கொட்டுரேன்ல அந்த நெளுவு. ஒக்காந்து திங்கிர திமிரு. ஏய் உங்கிட்டதாண்டி பேசிக்கிட்டு இருக்கேன்.. ஒடம்ப மாடு மாதிரி வளத்து வச்சிகிட்டு.. சொல்லுறது ஏறுதா பாரு” ரொம்பவும் அழுத்தப்படும் போதுதான் மேல ரொம்ப வேகமா எம்பி குதிக்க முடியும்.
வேல இடத்துல ரொம்பவும் அப்பா அழுத்தப்பட்டுறுக்குறது அம்மாவுக்கும் தெரியும். சில பொருட்களோட அதிர்வுகள்ல அம்மா இன்னமும் ஞாயமான பதில்கள் சொல்லிகிட்டுதான் இருந்தா. இப்ப சேவலிடமிருந்து கொஞ்சமா என்னுடைய கவனம் ஓடியிருப்பத உணர்ந்துக்க முடிஞ்சது. கவனத்தை ஒருங்கிணைத்து கூர்ந்து பார்த்தேன். கோணக்கழுத்து கொஞ்ச கொஞ்சமா புதுசா குஞ்சு பொறிச்ச பொட்டைய நெருங்கிகிட்டு இருந்தது.
பெட்டையும் அதுக்கு ஏத்த மாதிரி ரொம்பவும் அலட்டிக்காம மெதுமெதுவா குஞ்சுகள கூட்டிக்கிட்டு நவுந்துகிட்டு இருந்தது. ஆனா ஏதோ ஒரு கவனம் அதோட பார்வையில் மட்டும் இருந்தது.
“ஒனக்கு என்னா திமிராடி.. நானென்ன பைத்தியமா.. ஏதாவது வாய தொரந்து பேசு. இல்ல வீட்ட விட்டு போடி”. இதுக்குப்பிறகு என்னா நடந்திருக்குமுன்னு தெரியல. ஆனா கழுவிவச்ச மங்குபோட்ட சத்தத்துல அப்பா அம்மாவ தள்ளிவிட்டிருக்கலாமுன்னு புரிஞ்சது. எனக்கு அதையெல்லாம் கண்டுக்க நேரமில்ல, திரும்பி பார்க்க கூடாதுன்னு நினைச்சேன். என்னோட நேஷனல் ஜோகராப்பிக் சேனல மாத்த விரும்பல. கோணக்கழுத்து லொட்டுனு போட்ட ஒரு கொத்துல பெட்ட கொஞ்சம் அதிகமாவே கொக்கரிச்சி நடைய வேகபடுத்திச்சி. ஆனா அதோட கவனமெல்லாம் குஞ்சுகள பத்திரமா கூட்டியாந்திரனுமுன்னே இருந்தது. “என்னாடி மொறைக்கிற.. என்னைய அடிக்கபோறியா? நான் ஆம்பலடி.. அப்படிதான். எனக்கு நீ இல்லாட்டி படுக்க வேற பொட்டச்சி கிடைக்க மாட்டாளா?” மீண்டும் பாத்திர சத்தம். இந்தமுறை இன்னும் கொஞ்ச வேகமா. அதுவும் தொடர்ந்து ரெண்டுமூனு தரம் கேட்டது. அப்பா இப்ப கொஞ்சம் திருப்தியில இருப்பாரு. தான் ஆம்பளன்னு ரொம்பவும் உறுதியாயிட்டதா நினைப்பாரு. நான், அம்மாவெல்லாம் அப்பாவோட வீரத்தக்கண்டு மளைச்சி போயிருப்போமுன்னு சந்தோஷப்படுவாறு. அம்மா பாவம்தான். ஆனா நான் என்னாபண்ண? அம்மாவ அப்பா அடிச்சதுல ஏற்பட்ட பதற்றத்தவிட இப்ப கோணக்கழுத்து பெட்டையோட மண்டய அழுத்தமா ரெண்டுமூனு கொத்துவிட்டதுலதான் அதிகமா இருந்தது.
“அங்கபாரு ஒரு எலவு, வெளிய கோழிய பாத்துக்கிட்டு இருக்கு. இதுதான் நம்பளய சோறுபோட்டு காப்பாத்த போகுதா? படிக்க சொன்னா முடியாது.. வெட்டியா இந்த மாதிரி எதையாவது செஞ்சிகிட்டு இருக்கும். அந்தப் பொரம்போக்குக்கு பொறந்தவன…” அப்பா தன்னோட கடைசி ஆயுதத்த எடுத்துட்டாரு.
ஆனா தன்னோட வழக்கமான ஆரவாரத்தவிட கோணக்கழுத்து ரொம்பவே ஆராஜகம் செஞ்சிக்கிட்டு இருந்தது. ஆமா…குஞ்சுகள கொத்த தயாரா ஆயிடிச்சி. பெட்டை முடிஞ்சவரைக்கும் தன்னோட இறக்கைக்குள்ள அந்த ஏழு குஞ்சையும் மூடி மூடி பதுக்கியும் அதுங்கள மொத்தமா பாதுகாக்க முடியல. கோணக்கழுத்து மீண்டும் தீவிரம் காட்ட ஆரம்பிச்சதும் பெட்டையோட கொக்கரிப்பு சட்டென கூடியிருந்தது. அதன் கழுத்து உரோமங்கள் சிலுப்பியிருந்தன. குஞ்சுகளை இறக்கைக்குள் இருந்து விடுவித்த வேகத்தில் ஆக்ரோஷமாக அதை விரித்து தனது கொக்கரிப்பில் உஷ்ணத்தைக் கூட்டியது. பயம் கலந்த வீரத்தோட பெட்டை இப்ப எதிர்ப்பதைப் பார்த்ததும் கோணக்கழுத்து ஒரு அடி பின்வாங்கியது.. எனக்கு குஞ்சுகள பார்க்க பொறாமையா இருந்தது.
பேரவைக் கதைகள் 20 (ஆண்டு 2005)
பொதுப்பிரிவு 2ஆம் பரிசு