வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி!

இப்போது காலை மணி 6. ஒரு விடுமுறை காலையில் எழுந்து ‘வெண்ணிற இரவுகள்’ பற்றி எழுத என்ன காரணமாக இருக்க வேண்டும்? மலேசியாவில் பிறந்துவிட்ட காரணத்தினால் இங்கு முன்னெடுக்கப்படும் கலை ரீதியான எல்லா முயற்சிகளும் ஆதரவு தரும் எண்ணம் எனக்கில்லை. அது இலக்கியமாக இருந்தாலும் , சினிமாவாக இருந்தாலும் அடிப்படையான தரம் இல்லாமல் அது குறித்து நான் ஒருவார்த்தைகூட பேசுவதில்லை. ஒருவேளை ஒரு குப்பை தேவைக்கு மீறி கொண்டாடப்பட்டால் இளம் ரசிகர்களின், வாசகர்களின் குழப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதை விமர்சிக்கலாம். அது குப்பை என சுட்டிக்காட்டலாம். அதேவேளையில் , மலேசியாவில் கலை முயற்சிகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது அது குறித்து மௌனமாக இருப்பதும் அதைவிட கேவலமானதுதான். நாம் அது குறித்து பேச வேண்டியுள்ளது. அதன் நகர்ச்சிக்கு நம்மாலானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.


இப்படம் கவர்வதே அதன் தலைப்பினால்தான். தாஸ்தோவ்ஸ்கியின் நாவல் ‘வெண்ணிற இரவுகள்’. அற்புதமான காதல் கதை. இந்த நாவலுக்கும் படத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. அதை ஏற்கனவே ‘இயற்கை’ என்ற தலைப்பில் 2003 தமிழ்த்திரை உலகம் சுட்டுவிட்டது.

அன்பை அல்லது அடங்காத காதலை நாம் எப்படிக் காட்டலாம்? சில பரிசு பொருள்களின் மூலம், சில கவிதைகள் மூலம், சில தியாகங்களின் மூலம் ,சில சொற்கள் மூலம், சில முத்தங்கள் மூலம் இப்படி வழக்கமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘வெண்ணிற இரவுகள்’ அடங்காத காதலைதான் சொல்கிறது. வேறு முறையில். தன் மொழியில் தன் வழியில்.
படத்தின் சாதகமான விசயங்களாக சிலவற்றைக் கூறலாம். ஒன்றாவது இது அச்சு அசலான மலேசியப் படம். அச்சு அசலான மலேசியப் படத்தை உருவாக்க ஜனரஞ்சக தமிழ்த்திரைப்படங்கள் மீது வெறுப்பு தேவை. அந்த வெறுப்பு இயக்குனர் பிரகாஷ்க்கு உண்டென்றே நினைக்கிறேன். வசனங்களிலோ , உணர்வுகளிலோ பார்த்து பார்த்து புளித்துப்போன தமிழ் சினிமா வாடை இல்லை. அதே போல அதிகமான மலேசியத் திரைப்படங்களில் காட்டுவது போல கட்டங்களைக் காட்டி ‘இங்கதான் நின்னு பேசுறோம்’ என்ற சிறுபிள்ளைத்தனமான கதை சொல்லும் முறையெல்லாம் இல்லை. சிங்கப்பூரைக்காட்டும் போதுகூட அங்கு பிரபல சின்னமாக இருக்கும் வெள்ளை சிங்க சிலையின் பின்புறத்தை மட்டுமே பாதி காண்பிக்கிறார்கள். இது பெரிய விசயமா எனக்கேட்கலாம். ஐயா… மலேசிய திரை உலகம் அவ்வளவு கொடுமை செஞ்சிருக்குய்யா… அந்த பலவீனங்களைக் களைந்து வருவதே முதல் வெற்றியாகப் படுகிறதே என்ன செய்வது?

அதேபோல இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஈரான், ஜப்பான், தென் அமெரிக்க படங்களைப் பார்த்துவிட்டு நம்ம ஊரு இயக்குனர்கள் காட்சிகளை நீட்டித்து காட்டுவதன் மூலமாக ‘கலை படம்’ செய்றோம் என்ற கொடுமையோ… ‘நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?’ எனத்தொடங்கி காதலுக்கான அன்புக்கான லெட்சரர் செஞ்சி கதறி அழுது…கண்ணீர் மல்கி வசனம் பேசும் பரிதாபமோ இப்படத்தில் இல்லை. அப்படியானால் இது ஒரு கலைப்படமா? எனக்கேட்டால் அதுவும் இல்லை.

இது ஒரு முதல் மலேசியத்திரைப்படம். ரப்பர் தோட்டத்தைக் காட்டுவதால் மட்டும் ஒன்று மலேசியத்தமிழ் திரைப்படமாகிவிடாது. இது  இளைஞர்களின் கல்லூரி வாழ்வைச் சார்ந்துள்ளது. ஒட்டவைத்த டிவி சீரியல்களையும் , தமிழ்நாட்டு குப்பையின் மறுவடிவங்களையும், மட்டமான நகைச்சுவை தொகுப்புகளையும் மலேசியத்திரைப்படம் என பார்த்து பார்த்து சலித்து கிடந்த நமக்கு ஒரு மலேசியத்திரைப்படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என நிரூப்பித்திருக்கும் சினிமா முயற்சி. ஆனால் இப்படம் இன்னும் அரசியல் ரீதியில் பலமாக சில விடயங்களைச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

மலேசிய படத்தில் முதன் முதலாக சாதிய சிக்கல் பேசப்படுகிறது என நினைக்கிறேன். (இதற்கு முன் பேசப்பட்டிருந்தால் மன்னிக்கவும்) அதை இன்னும் கொஞ்சம் வலுவாகப் பேசியிருக்கலாம். குறிப்பாக மியன்மார் இந்தியர்களின் சமூக சூழல் உணர்த்தப்படவே இல்லை. அங்கும் மலேசியாவைக் காட்டிலும் கடுமையான சாதிய அணுசரிப்பு முறைகள் உள்ளன. ஆங்காங்கே அதன் மீதான வெறுப்பை கதாநாயகன் பேசுவதன் மூலமாக மீண்டும் மீண்டும் மையத்திற்கு பயணித்துவர முடியும் என நினைக்கிறேன். ஒரு வெறுப்பின் கசப்பு அவன் வாழ்வு முழுவதும் எவ்வாறு தொடர்கிறது என மியன்மார் சாதிய அமைப்பு மீதான வருத்தங்களைச் சொல்வதன் மூலமாகக் காட்டியிருக்கலாம். அதே நேரத்தில் மலேசியாவில் பொருளாதர உயர்வெல்லாம் சாதியத்தின் முன்பு என்னவாகிவிடுகின்றது என்பதையும் வேறு இடங்களில் பேச முயன்றிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

இது எதிர்ப்பார்ப்புதான். திரைப்படம் எனும் மாபெரும் கூட்டு அமைப்புக்கு முன் நமது எதிர்ப்பார்ப்பை மீறிய நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். அதன் வேறு தொழில்நுட்பம் அறியாத நான் அல்லது என்னைப் போன்றவர்கள் கவனித்துப்பார்ப்பது திரைக்கதையையும் அதை சொன்ன முறையையும் அதன் அரசியலை மட்டுமே. கதாநாயகன்/ கதாநாயகி நல்ல தேர்வு. மகேனிடம் இயல்பான நடிப்பு உள்ளது. எளிதாக அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார். சில இடங்களில் வசனத்தை உச்சரிக்கும் முறையை நிதானித்தால் முழுமையாக புரியும். சங்கீதா படத்தின் பலம். நல்ல நடிப்பாற்றல் உண்டு . தொடர்ந்து நல்ல இயக்குனர்கள் கையில் சிக்க வேண்டும்.

பல தமிழ்த்திரைப்படங்களில் பாதியில் எழுந்து வந்ததுண்டு. தொலைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்ததுண்டு, அடிக்கடி வெளியேறி மனநிலையை திடப்படுத்திக்கொண்டு நிதானித்து வந்ததுண்டு. பிரகாஷ் மற்றும் குழுவினர் இருக்கையில் அமரவைத்துவிட்டார்கள். நம்பிக்கையுடன் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்த திருப்தியில் வெளிவரலாம்.

6 மார்ச்சில் மீண்டும் திரையில் சென்று பார்ப்பேன். நண்பர்களும் பாருங்கள்.

(Visited 251 times, 1 visits today)

2 thoughts on “வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி!

  1. மலேசிய திரைப்படங்களை அதனின் கோமாளித்தனங்களை ரசிப்பதற்காகவே பார்த்து சிரித்ததுண்டு.. உங்களின் விமர்சனம் எதையோ சொல்லவருகிறது. ஏமாற்றாது என்கிற நம்பிக்கை பிறக்கிறது.. படம் பார்த்துவிட்டு கருத்து பகிர்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *