ஒரு கவிதை விளங்கிக்கொள்ளவதில் வாசகனின் வாசிப்பு அனுபவத்திற்கு சம்பந்தம் உண்டா? வாசிப்புத்தளத்தில் ஓரளவாவது இயங்கிகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களே விளக்கம்பெற ஒரு சிலரை நாட வேண்டியிருக்கும்போது சாதாரண வாசகனை குழப்பி விடுவதில் என்ன பயன்? – விஜயலட்சுமி
விஜயா,ஏற்கனவே நான் இதற்கு பதில் சொன்னேன். இன்னும் தெளிவாக பதில் சொல்ல முயல்கிறேன். ஒரு அன்பர் , ‘உன்னால் முடியாவிட்டால் மக்களுக்குப் புரியும்படி கவிதை எழுதமுடியவில்லை என ஒப்புக்கொள் .நான் உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன் ‘ என வேறு சொல்லியுள்ளதை பின்னூட்டத்தில் படித்திருக்கலாம். நிச்சயமாக என்னால் முடியவில்லை. எல்லாருக்கும் புரியும்படி எழுத தெரியவில்லை. ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து அவர் சொல்லித்தரட்டும்.
விஜயா, கவிதையையெல்லாம் ஒரு பக்கம் விடுங்கள். ஒரு கட்டுரையை எடுத்துக்கொள்வோம். சி. ஜெயபாரதன் எழுதும் அறிவியல் கட்டுரைகளைப் படித்துள்ளீர்களா? நான் திண்ணையில் முன்பு தொடர்ந்து அவரை வாசித்தேன். ‘காதல்’ இதழ் நடத்தியபோது சில கட்டுரைகளையும் மீள் பிரசுரம் செய்துள்ளேன். அவரது கட்டுரைகளைப் புரிந்துகொள்வது எளியது அல்ல. அறிவியல் குறித்த அடிப்படை புரிதல் இருந்தால் மட்டுமே உங்களால் அதை முழுமையாக அறிய முடியும். ஓஷோவை வாசித்து புரியவில்லை எனச்சொன்னவர்களை நான் சந்தித்துள்ளேன். ஆன்மிகம் குறித்த ஓரளவாவது அறிமுகம் இருந்தால்தான் ஓஷோவை அணுக முடிகின்றது. தமிழனின் அமைப்பியல் தொடர்பான கட்டுரைகளை மிகவும் கஷ்டப்பட்டே வாசித்திருக்கிறேன். அக்கட்டுரை தமிழ் எனும் மொழியில் இயங்கினால் அவர் பேசுவது எனக்குப் பரிட்சயம் இல்லாத துறை எனவே மெனக்கெட வேண்டியுள்ளது. ஆக, மொழியுடைய ‘மெது நடை’ போல அங்கம் வகிக்கும் கட்டுரையையே நம்மால் அதன் பின்புல அறிவு இல்லாமல் வாசித்து உள்வாங்க முடியாத போது படிமங்கள், குறியீடுகள் மூலம் மொழியுடைய ‘நடனமாக’ வெளிப்படும் கவிதையை உடனடியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பது என்ன நியாயம்?
ஒரு மலரை அறிந்துக்கொள்ள மூடியிருக்கும் அதன் இதழ்களை பிரிக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய வன்முறை. நீங்கள் மலர் மலர்வதைக் காண காத்திருக்க வேண்டும். அது மட்டுமே மலரை அறியும் வழி. ஒரு கணவன் தன் மனைவியின் காமத்தை அறிய அவளை நிர்வாணப்படுத்துவதுதான் வழி என நினைத்தால் அது எத்தனை அருவருப்பானது. நிர்வாணத்துக்கும் காமத்துக்கும்தான் என்ன சம்பந்தம்? கவிதையை நிர்வாணமாக்கி நாம் எதைதான் அறியப் போகிறோம்?
இப்படிக் கேள்வி கேட்பவர்களிடம் நான் எப்போதுமே ஒரு பதில் கேள்வி கேட்பேன்.
“ஈராயிரம் ஆண்டு கவிதை மரபில் உங்களுக்கு எந்தக் கவிதையின் பொருள் புரிந்தது?”
இந்தக் கேள்விக்கு விதண்டாவாதம் செய்பவர்களிடம் பதில் இல்லை. உடனே அவர்கள் பிரபலமான சில சங்க இலக்கியப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், திருக்குறள் போன்றவற்றின் பொருள்களை ஒப்புவிக்கத் தொடங்குவர். இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் நேர்மையாக யோசித்துப் பாருங்கள். கல்விகூடங்களில் போதிக்காத , சினிமா அல்லது பிரச்சார மேடைகளில் முழங்காத எத்தனை சங்க இலக்கிய பாடல்களையும், திருக்குறளையும் , பாரதி பாடல்களையும் உங்களுக்குத் தெரியும்? எதையுமே வாசிக்காமல், மொழிமீது மோகம் உள்ளது போலவும்…இதற்கு முன்பு எழுதிய இலக்கியத்தையெல்லாம் படித்துக்கிழித்துவிட்டு நவீன கவிதையின் பொருள் மட்டும் புரியாமல் ஸ்தம்பித்துப் போய் நிர்ப்பது போன்ற செயல் நடிப்பன்றி வெறென்ன விஜயா?
உண்மையில் நாம் வாசித்து வருபவையெல்லாம் அவற்றின் பொருளைதான் என்பதை உணர வேண்டும். சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்களின் வாய்வழி கதைகளைக் கேட்டுப் பழகியே நாம் இளங்கோவடிகளைக் கரைத்துக்குடித்துவிட்டது போன்ற ஞான முகத்தைச் சூடியுள்ளதை வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். சங்கப்பாடல்களுக்கும் திருக்குறள் என பழைய இலக்கியங்களுக்குப் பொருள் எழுதப்பட்டமையால் மட்டுமே அவை நமக்குப் புரிவதாக நாம் பாவனை செய்கிறோம். ஆனால் பொருளுரைகளே எத்தனை மாறுபட்டுள்ளது என திருக்குறளை ஒப்பிட்டுபார்த்தாலே தெரியும்.
பழைய இலக்கியங்களுக்கு அதை இயற்றியவர்கள் பொருள் எழுதிவைக்காத நிலையில் அதன் பின்வந்த புலவர்கள் நமக்குக் கொடுத்த பொருளை நாம் உள்வாங்கி கொள்கிறோம். ஒரு நிமிடம் யோசிப்போம் விஜயா. திட்டவட்டமான ஒரு பொருள்தான் ஒரு இலக்கியப் பிரதிக்கு உண்டென்றால் ஏன் ஒரு இலக்கியப் பிரதிக்கு இத்தனை மாறுபட்ட பொருளுரைகள்? சுஜாதா வரை அதன் பொருளை எழுதிவிட்டுச் சென்றுள்ளார். சங்கப்பாடல்களுக்கும் இதே நிலைதான். புரிகிறதா! ஒர் இலக்கியப்பிரதி ஒரு வாசகனுக்கு ஒரே பொருளைக் கொடுக்க முடியாது. கொடுத்திருந்தால் இத்தனை பொருளுரைகளின் தேவை இருந்திருக்குமா என்ன?
ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லை என்றால், அக்கவிதையைச் சொல்பவருக்கும் அக்கவிதையைப் படிப்பவருக்கும் இடையிலான மனோதளம், மொழித் தளம், அனுபவத் தளம் ஆகியவை மாறுபட்டிருக்கலாம். எத்தனையோ கவிதைகளின் மையம் புரியாமல் சட்டென நிகழும் அனுபவத் தெரிப்பில் அதை மீட்டுணர்ந்துள்ளேன். எனக்கு பசுவய்யாவின் கவிதைகள் பிடிக்காது. (சுந்தர ராமசாமியில் கவிதைக்கான பெயர் பசுவய்யா) பல விமர்சகர்கள் பாராட்டியிருந்தாலும் என் வாசிப்புக்கு உவப்பாய் இல்லை. ஆனாலும் ஒன்றை விமர்சிக்கும் முன் அதை வாசிக்க வேண்டும் என்றே வாசித்துள்ளேன். அதில் ஒரு கவிதை:
நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.
இந்தக் கவிதையை வாசித்த கணத்தில் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஒருமுறை தற்செயலாக நான் பா.அ.சிவத்தை சாலையைக் கடக்கும் போது பார்த்துவிட்டேன். எங்கே போகிறார் என ஒரு அடி வைத்தவுடன் அவர் இறந்துபோனது நினைவுக்கு வந்தது. அவர் வேறு யாரோ என நினைத்துக்கொண்டேன். சிவம் இறந்துவிட்டார் என்ற உண்மை ஏன் என் நினைவுக்கு வந்தது என பின்னர் நானே என்னை நொந்துக்கொண்டேன். இந்தக் கவிதை இந்த இடத்திலிருந்து பொதுவுக்கு விரிகிறது. நினைவுகள் மட்டுமே நம்மை மகிழ்ச்சியும் கவலையும் அடைய வைக்கின்றன. உண்மையில் கவலையோ மகிழ்ச்சியோ உலகில் இல்லாதது போலவே தோன்றுகிறது. அத்தனையும் நாம் மூளையில் தேக்கிவைக்கும் எண்ணங்கள். இறந்தகாலத்தின் அனுபங்களை எதிர்காலத்தோடு பொருத்திப்பார்த்தே அத்தனை உணர்வுகளையும் நாமாக உற்பத்திச்செய்துக்கொள்கிறோமோ என அன்று முழுதும் தோன்றியது. ஒரு கவிதை செயல்படும் விதம் இதுதான். அது நமக்குத் தெரியாமல் நமக்குள் அமர்ந்து கொள்கிறது. நமது நுண்ணுணர்வுகளை கிளர்ச்சியுறச் செய்கிறது. (குறிப்பு : உண்மையாகவே இந்தச் சம்பவத்துக்குப் பின்னும் பசுவய்யாவின் கவிதைகள் வாசிப்பதில் விருப்பம் இல்லை)
விஜயா, மிகத்தெளிவாக மீண்டும் சொல்கிறேன். பாமரர்கள் என்று யாருமில்லை. மாறாக நீங்கள் குறிப்பிடுபவர்கள் வேறுவிதமான மொழிப் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் மொழியிலும் கூட தமிழ் இலக்கியத்தில் கவிதைகள் உண்டு. ஆனால், அவையும் தம்மளவில் உள் அடுக்குகளைக் கொண்டவைதான்.
இலக்கியம் என்பது வாழ்வை பொது புத்தி சார்ந்து ஒப்பிப்பது மட்டுமல்ல. வாழ்வின் புதிர்களையும் மறைபொருள்களையும் கண்டடைவது. புதிர்களையும் நுண்ணிய மன சிடுக்குகளையும் நீங்கள் நேரடிச்சொற்கள் மூலம் அறிவது சாத்தியமே இல்லை. நீங்கள் இவற்றை மறுப்பது உங்களையே மறுக்கிற ஒரு முயற்சியே. அல்லது உங்கள் மனம் பேசும் ஒரு சிக்கலான உண்மையை எதிர்க்கொள்ள தயங்கும் கோழைத்தனம் மட்டுமே.
இறுதியாக ஆதவன் தீட்சண்யாவின் அண்மையில் வாசித்தக் கவிதை ஒன்றை பகிர்கிறேன். எளிய வார்த்தைகள். கவித்துவத்தை கொண்டிராத எளிமையான வார்த்தைகள் மூலம் கவிதையை நிகழ்த்திக்காட்ட அவரால் முடிகிறது.
நவகண்டம்
கடல் என்பது மீன்தான் என்று
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
வலையோடு வந்த ஒருவன் சொன்னான்
இல்லை அது தண்ணீர் என்று
தண்ணீர்தானென்றால்
கேனில் அடைத்து விற்றுவிடலாமேயென
துள்ளிய மற்றொருவனிடம்
உப்புத்தண்ணீரை
யாரடா வாங்குவார்கள் என்றேன்
அதனாலென்ன
தண்ணீரையும் உப்பையும் தனித்தனியாகப் பிரித்து
தண்ணீரை தண்ணீரைவிட சுவையானது எனவும்
உப்பை உப்பைவிட கரிப்பானதெனவும்
இரட்டை வியாபாரம் நடத்தலாமென்றான்
வியாபாரம் என்று வந்துவிட்டால்
எதையாவது விற்றுக்கொண்டேயிருக்க வேண்டுமென
எல்லாவற்றையும் விற்கத் தொடங்கியவர்கள்
இறுதியில்
தத்தமது தலையை வெட்டி தராசில் நிறுத்தினர்
இத்தனைப் பிணங்களையும் எப்படித்தான் தின்பதென
பொய்யாய் சலித்தபடி
இரையெடுக்கத் தாழும் கழுகினை வீழ்த்த
கவணில் பொருத்துகிறேன்
என் தலையை.