விஜயா, நான் உலகின் மிக முக்கியமான இரு கலை ஆளுமைகளை கொஞ்சம் அறிமுகம் செய்கிறேன். பின்னர் விரிவாகப் பேசலாம்.
எம்.எஃப்.உசைன் :
எம்.எஃப்.உசைன் (M F Husain) பற்றி கேள்வி பட்டிருக்கலாம். இந்தியாவின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞராக வர்ணிக்கப் படுகிறார் . உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன. ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது. இவரது ஓவியங்களைக் காண : http://webneel.com/mf-husain-paintings-art-controversy-indian-artist
சரஸ்வதி, லட்சுமி, சிவன், அனுமன், சீதை போன்ற இந்துக் கடவுள்களை உசைன் நிர்வாணக் கோலத்தில் வரைந்ததும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரத மாதா கற்பழிக்கப் பட்டது போன்று வரைந்ததும் (Rape Of India) பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்துக் கடவுள்களை மட்டும் உசைன் அவமதிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல. ‘மீனாட்சி:மூன்று நகரங்களின் கதை’ ( Meenaxi: A Tale of Three Cities) என்ற தபு நடித்த திரைப்படத்தையும் அவர் இயக்கினார். அந்த படத்தில் வந்த சில வசனங்கள் இஸ்லாமிய மதத்தை அவமதிப்பவை எனவும் சர்ச்சை எழுந்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் வண்ணம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன; பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. உசைன் வீட்டின் மீது இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சர்ச்சைகளாலும், கொலை மிரட்டல்களாலும் 2006ல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் துபாய் நகரில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு கத்தார் நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய அரசு இவருக்கு, பத்ம ஶ்ரீ விருது (1966). பத்ம பூஷன் (1973), பத்ம விபூஷன் (1991) போன்ற உயரிய விருதுகளை வழங்கியுள்ளது.
(அனேகமாக நம் நாட்டு ஒழுக்கவாதிகள் அவரைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே நாளைக்கே பத்திரிகைகளில் அவருக்கு எதிரான கண்டனங்கள் பறக்கலாம். தோழர்களே , அவர் 2011ல் இறந்துவிட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)
சல்மான் ருஷ்டி :
இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ் ( The Satanic Verses) இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது.
2007ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக “நைட் பேச்சிலர்” என்ற சர் பட்டம் வழங்கியது.பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைம்ஸ் இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது.
000
ஒரு கலைஞன் தனக்குப் பாதகம் வரும் எனத் தெரிந்தும் அதை மீறி செயல்படுவதற்கான காரணம் என்ன? எனக்கு குவர்னிகா தொகுப்பில் இருக்கும் நீட்ஷேவின் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘நமது மதம், அறம், தத்துவம் என்பனவெல்லாம் மனித இழிவின் வடிவங்கள். இவற்றிற்கான எதிர் இயக்கமே கலை’.
ஆமாம் விஜயா, கலை ஓர் எதிர் இயக்கம். அது சூழலோடு ஒத்துப்போகும் சக்தி அல்ல. அதிகாரம் எதை சொல்கிறதோ அதை மீண்டும் சொல்லிக்காட்டும் தேவை கலைக்கு இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டு சொல்லப்பட்டு துருபிடித்த சிந்தனையை கலை உலுக்கி தகர்க்கிறது. அதற்கு எதிரான இயக்கமாகவே அது செயல்படுகிறது. உடனே உங்களிடம் ஒரு கேள்வி தோன்றலாம். ‘அப்படியானால் அதிகாரத்தோடு ஒத்துப்போய் இயற்றப்பட்டிருக்கும் எண்ணற்ற கலை வடிவங்களை என்ன செய்வது?’ நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை காலம், சூழல், அரசியல் சார்ந்து அதன் தேவை இல்லாமல் போக வாய்ப்புண்டு.
நான் இரு வேறு பட்ட திரைப்பட சூழல் மூலமாக மட்டுமே இதை விளக்க சாத்தியம் உண்டென நினைக்கிறேன். இவை இரண்டுமே அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ்ப்படமாகவே இருப்பதை உறுதி செய்கிறேன். சில ஐரோப்பிய, லத்தின் அமெரிக்க படங்கள் மூலமாகக் கூட விளக்க முயலலாம். ஆனால் தயாஜி விவகாரத்தில் நமது இலக்கியவாதிகளின் பரந்த வாசிப்பை எண்ணி திடுக்கிட்டே போனேன். Haruki Murakami குறித்து நான் சொல்லப்போக, நம்ம எழுத்தாளர்களோ என்னவோ பருத்திவீரன் திரைப்பட கதாநாயகன் போல, ‘என்னா சித்தப்பு..யாரோ முராகாமியாமுல்ல… என்னமோ எழுதியிருக்கானாமுல்ல… நம்ம காதுலயே பூ சுத்துறாயிங்க சித்தப்பு… அவன் பாவம் எழுதிப்புட்டு என்ன பாடு பட்டானோ… நாம அதையெல்லாம் படிக்காதனால டபாய்கிறாய்ங்க சித்தப்பு’ எனும் தோரணையில் லுங்கியை அண்ட்ராயர் தெரியும் வரை கட்டிக்கொண்டு விமர்சனம் எழுதியிருந்தனர்.
முதலில் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள். பொதுவாக எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் நமது பொதுபுத்தியில் ஒப்புக்கொண்ட விடயங்களை சொல்கின்றன. தாய்க்கு தலைவணங்குவது, தந்தையின் பேச்சை மீறாமை, ஒரு பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினையாமை என அதில் சொல்லப்படும் நற்கருத்துகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நற்கருத்துகள் ஏற்கனவே சமூகத்தில் உள்ளவைதான். பள்ளிக்கூடங்களில் போதிக்கப்படுபவைதான். எல்லோரும் அறிந்த ஓர் உண்மைதான் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், அப்படங்களை உலகத்திரை வரிசையில் வைக்க நமக்குச் சங்கடங்கள் இருக்கும். அவை எத்தனை நல்ல கருத்துகளை வலியுறுத்தினாலும் பாடல்கள் மூலம் நல்ல விடயங்களைச் சொன்னாலும் வாழ்க்கை என்பது அவர் திரைப்படம் காட்டும் யதார்த்தத்தை மிஞ்சி இருக்கிறது என்பதை எந்த நல்ல கலைஞனும் அறிவான்.
வாழ்க்கை ஒரு நேர்க்கோட்டு வடிவத்தில் அமையவில்லை. நாம் சொல்லிக்கொண்டிருக்கும் அறத்தில் இல்லாமல் மாற்று அறத்திலும் அது இயங்குகிறது. நாம் சொல்லும் ஒழுக்கம் இல்லாமல் மாற்று ஒழுங்கில் அது ஜீவிக்கிறது. காலம் முழுதும் பதியப்பட்டுள்ள வரலாறுகள் அதைதானே நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன. நாம் விரும்பும் வாழ்க்கையாக இது இல்லை. வாழ்க்கை இரக்கமற்று நம் முன் விரிந்திருக்கிறது. நாம் அதன் அர்த்தமில்லா அலையில் முடிந்தவரை அடித்துச் செல்கிறோம்.
‘மூடு பனி’யில் பிரதாப்பின் தன் தந்தை ஒரு பாலியல் தொழிலாளியுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவர் தன் தாயாரை அடித்து துன்புறுத்தியதோடு தன் அம்மாவுக்கு மரணம் நிகழ ஒரு காரணியாக இருந்தார் என நம்புகிறார்.அதனால் பாலியல் தொழிலாளர்களைக் கொல்லுகிறார். ஒருமுறை அப்படிக் கொலை செய்துவிட்டு வெளியே வரும்போது அந்த பாலியல் தொழிலாளியில் குழந்தை எதிர்ப்படுகிறது. அடுத்த நிமிடம் பிரதாப்பின் கோபம் மாறி அவன் தாயின் எண்ணம் அலைக்கழிக்கிறது. அடுத்த நிமிடமே அந்த பாலியல் தொழிலாளி ஒரு தாய்க்கான படிமத்துடன் வந்து அவனை துன்பப்படுத்துகிறாள். இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை ஈவிரக்கமற்ற தன்மையை நல்ல திரைப்படங்கள் நமக்குக் காட்டிக்கொண்டே இருக்கின்றன.
‘அவள் அப்படித்தான்’ என்றொரு படம். வெகுசனத்திடம் அதிக செல்வாக்குப் பெறாவிட்டாலும் திரை உலகத்தினரால் மாற்று முயற்சி என சொல்லப்பட்ட படைப்பு இது. காதல் என்பதை கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு முன் தமிழ் சினிமா காட்ட முனைந்த பெண் எனும் பிம்பத்தை அசைக்கிறது. அதேபோல ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ குறித்தும் அறிந்திருப்பீர்கள். தமிழ்ச்சினிமாவில் அவை முக்கியமான முயற்சிகள். நேரடியாக அரசியல் அதிகாரத்தையே விமர்சிக்கும் திரைப்படங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் உலகமயமாக்கலை கேள்வி எழுப்பும் ‘கற்றது தமிழ்’ , சிங்கள அரசையும், இந்திய அரசையும் விமர்சிக்கும் ‘செங்கடல்’ என போய் இப்போது பலராலும் பேசப்படும் ‘சூது கௌவும்’ உட்பட நாம் கவனிக்க வேண்டியுள்ளதாகிறது. இதற்கு முன் தமிழ் சினிமா கொண்டாடிய நேர்மை, உண்மை போன்றவற்றையெல்லாம் எள்ளி நகையாடிவிட்டது இந்தப் படம்.
இன்னும் மனித வாழ்வின் மிக நுணுகிய இடங்களைப் பேசும் திரைப்படங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு பார்க்கலாம்தான். ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்றொரு படத்தை அண்மையில் பார்த்தேன். யாரோ ஒருவர் கொடுத்துவிட்டுப் போன காரை தங்களுடையதாக்கிக் கொள்ள துடிக்கும் ஒரு குடும்பத்தின் மன உணர்வை துள்ளியமாகக் காட்டியிருந்தனர். அந்தக் காரை மிக தாராளமாகக் கிராமத்தின் எல்லா தேவைகளுக்கும் உபயோகிப்பார்கள். இதையே எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் ஒப்பிட்டுப்பாருங்கள். 10 வருடம் கடந்து கேட்டாலும் ஒரு கீரல் கூட படாமல் காரை திரும்பக் கொடுத்திருப்பார். பிறர் பொருளை உபயோகிப்பது தவறு என அவருக்குத் தெரிந்திருக்கும். எம்.ஜி,ஆர் சொல்வது நற்கருத்து. ‘பண்ணையாரும் பத்மினியும்’ சொல்வது எதார்த்தம். இந்த எதார்த்தம் குறித்துதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த உண்மை இன்னும் உக்கிரமாகச் சொல்லப்படும் காலம் தமிழ்ச் சினிமாவில் வெகு தூரம் இல்லை என்றே தோன்றுகிறது.
விஜயா, நான் சொல்லவரும் விடயத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். இலக்கியம் புனிதத்தைக் களங்கடிக்கவில்லை. கலையில் வேலையே புனிதமாகக் கட்டமைக்கப்பட்டவற்றைக் கேள்வி எழுப்புவதுதான். மதம், இலக்கியம், உறவுகள், வழிபடும் சின்னங்கள், மொழி, இனம் என புனிதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்தையுமே கலை காலாகாலமாக கேள்வி எழுப்புவதை நீங்கள் வாசித்திருக்கலாம். அவ்வளவு ஏன் யமுனாச்சாரியார் எனும் வேதாந்தி சொன்ன ஒரு கூற்றைப் படித்து அதிர்ந்தேன். அவர் வாசகம் இது.
‘பரந்தாமனின் சிவந்த கண்ணும் நாயின் சிவந்த குதமும் ஒன்றே ‘
(ஆதாரங்கள் உள்ளன. இணையத்தில் தேடி வாசியுங்கள்)
இதை தவிர கலிலியோ போன்ற விஞ்ஞானிகளும் புனிதங்களை அறிவியல் மூலம் கேள்வி எழுப்பியபோது பட்ட பாட்டை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
“பிரபஞ்சத்தின் மையம் பூமியே-ஏனெனில் அது அவ்வாறு தான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறது” என்பது அக்காலத் திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, தாலமி என்ற வானவியலாளரும் அப்படித்தான் கூறியிருந்தார். “ பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமியும் மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன் றுவது பூமியின் வேகத்தினால்தான்” என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு. கலிலியோ கோபர்னிக் கஸின் கருத்துதான் சரி என்று நிரூபித்தார். பைபிளில் கூறப்பட்ட தற்கு மாறாக கலிலியோ வின் கருத்துக்கள் இருந் ததால் போப் முன் ஆஜ ராகி விசாரணையை அவர் எதிர் கொள்ள நேர்ந் தது. கலிலியோவுக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. பின்னர் அது வீட்டுச் சிறைவாசமாக மாற்றப்பட்டது. 1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்.
‘மீண்டும் சொல்லுதல்’ எனும் உக்தியுனாலேயே கலை சாகிறது. இன்று காலண்டரில் உள்ள ஓவியங்களை நீங்கள் கலை என ஏற்றுக்கொள்வீர்களா? அவை ஏற்கனவே உள்ளதை மீண்டும் அச்சாக்குகின்றது. ஒன்றைப் போலவே மீண்டும் மீண்டும் உற்பத்தியாகும் ஒரு எழுத்து கலையாகாது. அது ஒரு உற்பத்தி பொருள். காலண்டர் ஓவியத்துக்குக் கொடுக்க வேண்டிய கவனத்தை அதற்குக் கொடுத்தால் போதும். அறங்களை வலியுறுத்தி புனையப்படும் இன்றைய எழுத்துக்குவியல்களை நான் அப்படித்தான் அணுகுகிறேன். மொழியால் மாறுபட்டிருக்கிறதே தவிர கருத்து, சிந்தனை நிலையில் அவை படியெடுக்கப்பட்டவையே. அதில் அந்த கலைஞனின்/ எழுத்தாளனின் வாழ்க்கை குறித்த தனித்த தரிசனம் இல்லாவிட்டால் அதை வாசிப்பது வீண். அவ்வெழுத்து ஒரு சமூக மனதின் எழுத்து வடிவம் மட்டுமே.
நிலையான புனிதம் என ஒன்றும் இல்லை விஜயா. அது காலத்துக்காலம் மாறுகிறது. ஆனால் கலை எல்லா காலத்திலும் புனிதங்களைச் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டே இருக்கிறது.
// இலக்கியம் புனிதத்தைக் களங்கடிக்கவில்லை. கலையில் வேலையே புனிதமாகக் கட்டமைக்கப்பட்டவற்றைக் கேள்வி எழுப்புவதுதான். // i understand
கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உடைத்து எறிகிற கட்டுரை. அருமையான உதாரணக்கருத்துகள். கற்றல் அனுபவத்தில் பயணிக்கிறேன். பெருமகிழ்ச்சி.
தொடருங்கள்.. இங்கே பகிரப்பட்ட பலதகவல்களைத் தெரிந்துகொள்ள, பலபுத்தகங்களை வாசித்தாகவேண்டும்.
பருத்திவீரன்.. // ஹாஹாஹா
// இலக்கியம் புனிதத்தைக் களங்கடிக்கவில்லை. கலையில் வேலையே புனிதமாகக் கட்டமைக்கப்பட்டவற்றைக் கேள்வி எழுப்புவதுதான். // நவீன், வெளியில் பலரும் கருத்துவேறுபாடு கொண்டு கடுமையாக விமர்சனங்களை முன்வைக்கும் காரணம் இலக்கியம் அல்லது கலை வடிவங்களின் நோக்கத்தை அவர்கள் புரிந்து வைத்திருப்பதில் காணப்படும் வேறுபாடே என நினைக்கிறேன். பலரும் இலக்கியம்/கலையின் பணி புனிதங்களை போற்றுவதும் கொண்டாடுவதும் தான் என்கிற புரிதலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பழக்கத்தாலும் சமூக அச்சத்தாலும் புனிதம் என்று சொல்லப்பட்ட ஒன்றை ஆதரித்து எழுதுவதே இலக்கியத்தின் பணியாக செயலாற்றுகின்றனர். மாறாக ஒரு படைப்பு வழக்கில் உள்ள ஒரு உயரிய கருத்தை உடைத்து வினா எழுப்ப முனைவதை அவர்கள் இலக்கிய குற்றமாக பார்க்கின்றனர்.