நான் நண்பர்களுடன் இருக்கும் போது அதிக உற்சாகம் அடைபவன். இதழியல் தொடர்பான எவ்வித தொடக்கமும் இல்லாத போதே எனக்கு நண்பர்கள் ஆனவர்கள் ஓவியர் சந்துருவும் பூங்குழலியும். மாற்றுக்கருத்துகளால் சிவம் எதிரியாக இருந்து நண்பரானவர். எங்களிடம் அப்போதெல்லாம் பெரிய கனவுகள் இல்லாத போதும் இலக்கியம் தொடர்பான நிறைந்த ஆர்வம் இருந்தது. பின்னாளில் இந்த ஆர்வம்தான் ‘காதல்’ இதழ் தொடங்க உதவியாக தூண்டுகோளாக இருந்தது.
யுவராஜன், சிவம் (அப்போதெல்லாம் நண்பர்களாகிவிட்டோம்) உள்ளிட்ட நண்பர்களின் கலந்துரையாடலுக்குப் பின் காதல் துவங்கப்பட்டாலும் அதில் பெரும்பாலும் நானும் மணிமொழியுமே இயங்கினோம் என்றுக்கூறலாம். தொடக்கத்தில் அத்தனைப்பக்கங்களையும் மணிமொழிதான் டைப் செய்வாள். உள்ளடகத்தைத் தேர்வு செய்து அது இதழாகும் வரை நான் உடனிருப்பேன். மணிமொழி அப்போதெல்லாம் சோர்ந்து காணப்படுவார். அவர் வீட்டின் வேலைகள், இளங்கலை படிப்போடு ‘காதல்’ இதழும் அவரை கணிசமாக வாட்டியிருந்தது. அதன் பின்னர் டைப் செய்ய வெளியில் கொடுப்போம். இரவுகளில் கண்விழித்து சந்துருவுடன் பக்கம் வடிவமைத்த பொழுதுகள் நினைவில் நிற்பவை. இரவின் தனிமையைப் போக்க குழலி, யுவராஜன் வருவதுண்டு. அப்போதைய வேலைகளைப் பகிர்ந்துகொள்வோம். காதல் அதிகபட்சம் 300தான் விற்றது .
10 இதழ் பிரசுரமானப் பின் காதல் நின்றது. அதன் பின்னர் ‘வல்லினம்’ தொடங்கினேன். எனது முடிவை முதலில் சந்துருவிடமும் யோகியிடமும்தான் சொன்னேன். ஒரு பழைய லெப்டாப் என்னிடம் இருந்தது. இதழை முழுமையாக உருவாக்கும் பொறுப்பை நான் எடுத்திருந்தேன். அப்போது மணிமொழி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இருந்தார். முற்றிலும் தொடர்பில்லை. நான் ஆசிரியர் வேலையில் சேர்ந்த புதிது. ஆசிரியர் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் பாதி வல்லினத்துக்குப் போய்விடும். சிவம் அப்போது தன்னை முழுமையாக வல்லினத்தில் பிணைத்திருந்தார். குழலியுடனும் அப்போது தொடர்பற்றிருந்தது. ‘செம்பருத்தி’ சார்ந்த இயக்கங்களில் அவர் தீவிரமாகச் செயல்ப்பட்டுக்கொண்டிருந்தார் என நினைக்கிறேன். காதலைப் போல மாத இதழாக இல்லாமல் ‘வல்லினம்’ காலாண்டிதழாக வந்தது. முதல் இதழை மனுஷ்ய புத்திரன் அச்சடித்து தமிழகத்திலிருந்து அனுப்பினார். அதற்கான பணத்தை ஒருவருடத்துக்குப் பிறகுதான் அவருக்குக் கொடுத்து முடித்தேன். அதன் பின்னர் இதழ் மலேசியாவிலேயே தயாரானது.
ஒவ்வொரு இதழுக்கும் அச்சு செலவுக்கே 2000 ரிங்கிட் தேவைப்படும். இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவராக அழைத்து நூறு ரிங்கிட் கேட்பேன். சிலர் தரும் பதில்களால் அவமானம் பிய்த்துத் திண்ணும். (அந்த இலக்கிய முகங்கள் ஒவ்வொன்றும் இன்றும் நினைவில் உண்டு)பலமுறை தனியாக அமர்ந்து அழுவேன். இதழை நடத்துவதை விடுவதாகவும் இல்லை. அப்போது ஆதி.ராஜகுமாரன் அவர்களின் உதவி பெரும் பலமாக இருந்தது. பக்க வடிவமைப்பு பலு குறைந்தது. சண்முகசிவா என் கண்ணீருக்கு ஆறுதல் சொல்வார். “பணம் உன் பையில் சேராதவரை நீ யாரிடம் பணம் கேட்பது தவறே இல்லை” என்பார். அந்த வாசகம் மட்டுமே எனக்கு உற்சாகம்.
காதலின் போதும் வல்லினத்தின் போதும் அவ்விதழ்களைச் சுமந்து செல்வது ஒரு இன்பம். கால் அறுவை சிகிச்சைக்குப் பின்பும் நொண்டிக்கொண்டே புத்தகங்களைத் தபாலில் சேர்ப்பேன். கடைகளுக்குப் போடுவேன். விற்காத கட்டுகளை மீண்டும் சுமந்து வருவேன். குறைந்த இதழ்கள் என்பதால் விநியோகிப்பாளர்களின் ஊழியர்கள் கூட என்னைக்கண்டுக் கொள்ள மாட்டார்கள். “நீயே போடு” என்பார்கள். ஒவ்வொரு கட்டாக இறக்கி வைப்பேன். காதல் இதழின் போதெல்லாம் மணிமொழியும் என்னுடன் சேர்ந்தே புத்தகம் சுமப்பாள். மஹாத்மனிடம் கிடைத்த நெருக்கம் எனக்கு வேலை பலுவைக் குறைத்தன. காத்திருப்பதும் சுமப்பதும் காயப்படுவதும் இதழுக்காகத்தான் என்றால் எனக்கு அது சம்மதமாகவே இருந்தது. வல்லினம் வளர வளர யார் யாரோவெல்லாம் அதன் வளர்ச்சியில் காரணியாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட போது அதன் மிக முக்கிய பலமாக இருந்த சிவம் விலகிச்சென்றிருந்தார். அதே சமயம் வல்லினம் அகப்பக்க துவக்கத்திலிருந்து சிவா பெரியண்ணன் நண்பரானார்.
வல்லினத்துக்கு பணம் கொடுத்த காரணத்தினால் என்னால் யாருடனும் சமரசம் செய்துகொண்டிருக்க முடிந்ததில்லை. விளைவு ! உதவியவர்கள் விமர்சனத்துக்குறிவர்களாக இருந்தால் தடையில்லாமல் கருத்தை வைக்கவே பிளவுகள் ஏற்பட்டு வல்லினம் அச்சு இதழ் நின்றது. வல்லினம் உருவான காலங்கள் மன அழுத்தமானவை. இதழ் உள்ளடகத்தைத் தேடுவது தொடங்கி அதன் அச்சு செலவுக்கான பணம் தேடி முடிப்பதில் புனைவுக்கான மனம் முற்றிலும் சிதைந்திருந்தது. ஆனால், ஒரு துரும்பைக்கூட அசைக்காமல் உட்கார வைத்து எனக்கு ஆலோசனை சொல்ல ஒரு கூட்டமே இருந்தது. சில சமயம் நான் அவர்களுக்கு வேலைக்காரனோ என எண்ணும் அளவுக்கு அறிவுரைகள் நீளும். ஒருவேளை அத்துறையில் அதற்கு முன் இயங்கி இருப்பார்களேயானால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். எவ்வித செயல்பாட்டு துடிப்பும் இல்லாமல், படைப்பு ரீதியாகவோ பண ரீதியாகவோ துளியும் உதவாதவர்களின் வெற்றுச்சொற்களை நான் நகர்த்தி வைக்கக் கற்றுக்கொண்ட காலம் அது. அதனால் எனக்கு இழப்பென்றாலும் பாதகமில்லை; எனது முடிவுகள் தவறானவையாக இருந்தாலும் நானே எடுப்பதென தீர்மாணித்தேன்.
அந்த நேரத்தில் மஹாத்மன் இல்லாமல் இருந்திருந்தால் முற்றிலும் மனம் சிதைந்திருக்கலாம். அதே போல சந்துரு. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரியாதவர். தெரியாததை தெரியாது என சொல்பவர். ஓஷோ சொல்வார் , ஆன்மிகம் தன்னை வெளிக்காட்ட முயலாத போதே உருவாகும். சந்துரு தன்னை வெளிக்காட்ட தெரியாதவர். அவர் கவிதைகளில் மனம் திறந்த பேச்சுகளில் சட்டெனெ ஒரு வெறுமை வெளிப்படும். வல்லினம் இணைய இதழ் உருவான காலக்கட்டத்தை உற்சாகமானது எனலாம்.
பாலமுருகன், தயாஜி, அ.பாண்டியன், யோகி போன்றவர்களின் இணைவு உண்மையில் சொற்களில் சொல்ல முடியாத உற்சாகம். சட்டென ஒரு பாதுகாப்புணர்வை நான் உள்ளூர உணரத்தொடங்கினேன். அவர்களிடம் எப்போதும் எதையும் கேட்கவும் பெறவும் முழு உரிமை உள்ளதாகவே மனம் நம்பும். பூங்குழலி வீரனின் மீள் நுழைவு, தினேஸ்வரியின் தீவிர இலக்கியம் தொடர்பான ஆர்வம், தினகரன், விஜயலட்சுமி, போன்ற இளம் எழுத்தாளர்களின் நம்பிக்கை, நவீன் செல்வங்கலை , சரவணதீர்த்தா, கங்காதுரை, சிவா லெனின் போன்றவர்களின் இடையறாத தேடல் வல்லினத்தை மேலும் மேலும் பலமாக்கியது. ஶ்ரீவிஜி, மகேஸ் போன்ற நண்பர்களின் ஆதரவு ஆக்ககரமானது. இந்த நம்பிக்கையே இன்று ‘பறை’ தொடங்க உந்துதல். இன்று இரண்டாவது பறையின் வடிவமைப்பைப் பார்த்தப்பின் முழு திருப்தி.
மலேசியாவில் எதெல்லாம் நடக்கச் சாத்தியம் இல்லை எனச் சொன்னார்களோ அது மிக ஆக்கப்பூர்வமாகவே தொடர்கிறது. தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டே நண்பர்களுடன் மேலும் மேலும் இறுக்கமாகக் கைகளைக் கோர்க்க முடிகிறது. விஜயலட்சுமி, பாண்டியன் போன்ற நண்பர்கள் காலம் கருதாது செய்யும் வல்லினம் மற்றும் பறைக்கான பணிகள் எப்போதுமே நினைவு படுத்த வேண்டியவை. கே.பாலமுருகன் எனும் உற்சாகமான எழுத்தாளர் , சிவா பெரியண்ணன் போன்ற நிதானமாகச் சிந்தித்துச் செயல்ப்படுபவர்கள் இருப்பதால் ஓரளவு சமநிலையுடன் வல்லினம் குழு நகர முடிகிறது. அதோடு முடிவுகளை கூட்டுச்சிந்தனையில் உறுதிப்படுத்தும் பக்குவத்தையும் காலம் கொடுத்துள்ளது.
பொதுவாகவே மாற்று கருத்துள்ள ஒரு சிறுகுழுவினர் எல்லா தேசங்களிலும் செயல்ப்பட்டே வருகின்றனர். இந்தக் குழுவினரின் பிடி தளர வைக்க அதிகார வர்க்கங்கள் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதம் அவதூறுதான். அவதூறுகளுக்கு நடுங்காதவர்கள் குறைவு. அதிலும் குறிப்பாக பெண்களின் நடத்தை குறித்து பேசுவதில் இது போன்றவர்களுக்கு அலாதி பிரியம். ஆனால், வல்லினம் தீவிரமாக முன்னெடுக்கும் அல்லது சந்திக்கும் ஒவ்வொரு சிக்கலின் போதும் அந்த அவதூறுகளையெல்லாம் சுமந்துகொண்டு கடந்துவர தனி துணிவு தேவைப்படுகிறது. வல்லினத்துக்கு அவதூறு நிகழும் போதெல்லாம் விலகி போபவர்களும் எட்டி நின்று பார்ப்பவர்களும் கண்டுக்கொள்ளாதவர்களும் இருந்தனர். அவதூறுகளால் பெண்களுக்கே அதிகம் பாதிப்பு. நிலை இப்படி இருக்க, எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு பூங்குழலி, யோகி போன்ற நண்பர்களின் இருப்பே உற்சாகத்தையும் நம்பிக்கையையும் மேலும் அதிகரித்தது. வல்லினத்தின் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும் போது, தனக்கு நேரப்போகும் அவதூறுகளைப் பற்றி கவலைப்படாமல், அதே காலக்கட்டத்தில் வல்லினத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட விஜயலட்சுமியையும் நவீன் செல்வங்கலையின் நம்பிக்கையையும் என்னவென்று சொல்வது.
வல்லினத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள். ஆன்மிகம், நாத்திகம், பகுத்தறிவுவாதம் இப்படி எல்லாமுமே கலந்தவர்கள்தான். இலக்கியத்தால் மட்டுமே இத்தனை மாற்றுச்சிந்தனைக்கொண்ட மனிதர்கள் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பளிக்கிறது. அங்கு எச்சரிக்கைகள் இருக்கலாமே தவிர கட்டளைகள் இல்லை. மாற்றுக்கருத்துள்ளவர்களோடு அன்பு செலுத்த இலக்கியம் சொல்லித்தருகிறது. எனக்கு என் நண்பர்களின் எழுத்துகளை நூலாக்குவதில் அதி உற்சாகம். அவர்களை மேடையில் நிறுத்தி பார்ப்பதில் ஆனந்தம் அடைவதுண்டு. ஒரு சமூகத்தின் மாற்றத்தை இளைஞர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அதுபோன்ற மாற்று சிந்தனை கொண்ட இளைஞர்களுடன் இணைவதும் செயலாற்றுவதுமே இந்த கசகசபான கோப்பு வேலைக்கு மத்தியில் உவப்பானது.
உண்மையில் வல்லின செயல்பாடு சேவையெல்லாம் இல்லை. பலர் அவ்வாறு சொல்லும் போது அருவருப்பாக உள்ளது. தமிழ், மொழி, இலக்கியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தில் வல்லினத்தையும் சேர்த்துவிடுவார்களோ என தோன்றி பயமுறுத்துகிறது. பிடித்தமானதை செய்வது தியாகமோ தமிழ் சேவையோ அல்ல. யாரும் எதையும் செய்ய இங்கு தூண்டவில்லை. அதே போல காத்திருக்கவும் இல்லை. இது ஓர் இலக்கிய நகர்ச்சி. மாற்றுச்சிந்தனைக்கான களம்.
வல்லினம் இன்னும் விரிவாகிக்கொண்டே செல்லும். “பறை” இதழ் கொடுக்கும் உற்சாகம் போல அதன் பல பரிமாணங்களும் பங்களிக்கும். ஒவ்வொரு முறையும் ஒரு இதழ் வேலையை முடித்தப்பின் இந்த இலக்கிய சுவடின் தொடக்கங்களை நினைக்காமல் இருக்க முடிவதில்லை. பல நூறு முறைகள் எனக்குள் நான் கூறிக்கொள்ளும் கதை இது. அதில் வலி உண்டு. அதனால் வலிமையும் உண்டு. இந்த எண்ணங்கள் அடுத்த பறை உதயமாகும் போதும் தோன்றும். வல்லினத்தின் ஒவ்வொரு நகர்ச்சியிலும் தோன்றும். தொடக்கங்கள் எவ்வளவு எளிமையானவையாக உள்ளன என அவ்வெண்ணம் தோன்றும் போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்.
anna, sila visayanggal silar parvayil veru vithamagavum, ate visayam palveru konanggalil palarukku vivathamagavum amayum. unggal muyarchi puthumai. ethayum parantha virintha parvayil parthal ethuvume ingge paathagamillai. ingge unggaludaya parvai unggalukku niyayamaga padugirathu. ate parvai pirarukku paathagamaga padukirathu. tani manitha suthantiram ellorukkum undu. atai etrukollum manamthan yarukkum illai. tuninthu vittirgal. seyal mattume pirathanam. matravai kandu odungga vendam. indraya ninggal…. nalaya ilainyargalukkku vilippunarvu. todarunggal. valthukkal. analum, sila neranggalil pirar manam punpadumpadi oru visayatai neradiyaga tinippatai vida, nasookaka sollalame…. ithu intha kaiyalavu katra sagotariyin vendukolthan; kattalai alla. nandri.
ethavathu uthavi vendumanal taaralaga kelunggal anna, ennal mudinthal kandippaga seiven.
தொடரட்டும் முயற்சிகள்.. 🙂 வாழ்த்துகள்