தயாஜியின் கதை சர்ச்சையானப்பின்னர் பலரும் பலவித கருத்துகளைச் சொன்னாலும் அதில் எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் சொன்னது மட்டும் மிக அர்த்தம் வாய்ந்தது. “வல்லினம் மஞ்சள் பத்திரிகைபோல” நடத்துப்படுவதாகச் சொல்லியிருந்தார். நல்லக் கருத்துதான். அந்த நிமிடத்திலிருந்து ராஜேந்திரனிடம்தான் இனி ஓர் இதழை எப்படி நடத்துவது என பயிற்சி பெறலாம் என முடிவெடுத்திருந்தேன்.
அவர் ஞாயிறு ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் ‘மக்கள் ஓசையை’ ஒரு பாட நூலைப்போல வாசிக்கத் தொடங்கினேன். அவர் தன் திருவாய் மலர்ந்து அடிக்கடி சொல்லும் வாசகம், “பத்திரிகை குடும்பத்துடன் அமர்ந்து படிக்க வேண்டும்” என்பதுதான்.
எனக்குத் தெரிந்து யாரும் குடும்பத்துடன் அமர்ந்து எதையும் படிப்பதில்லை. அவரவர் வயதுக்கும் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்பவே தேடி ஓர் இதழிலும் இலக்கியத்திலும் வாசிக்கின்றனர். எல்லோருக்குமான ஓர் இலகியத்தை ராஜேந்திரனே சொல்கிறார் என்றால் சும்மாவா? அப்படித் தொடர்ந்து வாசித்ததில் இன்றைய ஞாயிறில் குடும்பத்துடன் படிக்கும் / பார்க்கும் படியான படங்களை பிரசுரித்து ராஜேந்திரன் இளைஞர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது புரிந்தது.
கடந்த ஞாயிறு மக்கள் ஓசையைப் பார்த்தாலும் இதே நிலைதான். அந்தப் படங்களையெல்லாம் போட எனக்குக் கூட கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. அப்படியென்றால் மாண்புமிகு எழுத்தாளர் சங்கத்தலைவர் அவர்கள் சொல்ல வரும் அறிய கருத்து என்னவென்றால், ‘சொற்கள் மூலம் பெண் உடலைப் பற்றி பேசாதீர்கள். பேசாமல் படம் போட்டு காட்டி விடுங்கள்’ என்பதுதான் என நினைகிறேன் . எத்தனைப் பூடகமாகச் சொல்கிறார் தலைவர். அதன் மூலமே குடும்பத்துடன் அதை அமர்ந்து பார்க்க முடியும் போல. காரணம், வீட்டில் தமிழ்ப்படிக்கத் தெரியாதவர்கள் இருந்தால் படத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் பாருங்கள்.
சரி, எங்களுக்கு அந்த தைரியம் இல்லை. ஞாயிறு மக்கள் ஓசை போல படங்களையெல்லாம் நாங்கள் பிரசுரித்து குடும்ப பத்திரிகை நடத்த முடியாதுதான். அதற்காக வருந்துகிறோம்.