பயணங்கள் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்கள். ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து செல்கிறோம் என்ற கிளுகிளுப்பையெல்லாம் கடந்து பயணங்கள் வெவ்வேறு விடயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. பல உலக நாடுகளைச் சுற்றிவரும் நபர்களை நான் சந்தித்ததுண்டு. ஓர் அந்நிய நாட்டில் காலடி எடுத்து வைத்த உற்சாகம் மட்டுமே அவர்களிடம் இருக்கும். வழக்கமான சுற்றுப்பயணத்தளங்கள், வழக்கமான ஆச்சரியங்கள், வழக்கமான தகவல்களைத் தவிர்த்து அவர்களிடம் பகிர்வதற்கு வேறொன்றும் இருப்பதில்லை.
ஜோக் ஜகார்தாவிற்குப் பயணம் செய்ய முடிவானப்பின் நான் நண்பர்களையும் உடன்வர அழைத்தேன். நண்பர்கள் குறிப்பாக எழுத்துலக நண்பர்களுடன் பயணிப்பது சுவாரசியமானது. பொதுவாகவே எழுத்தாளர்கள் எதையும் கூர்மையுடன்தான் அவதானிக்கிறார்கள். அது குறித்துப் பேசுகிறார்கள். பயணங்களின் போது நண்பர்களைத் தேர்வு செய்வதிலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நமக்கு ஆச்சரியமாகத் தோன்றும் பலவிடயம் அவர்கள் எதார்த்த சிந்தனைக்கு அற்பமாகத் தோன்றலாம். அந்த சிந்தனையே நமக்கு தொடர்ந்து எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருக்கும்.
இம்முறை மிக இயல்பாக நல்ல ஒரு பயணக்குழு அமைந்தது. நான், சந்துரு, தயாஜி, மணிமொழி, பூங்குழலி, யோகி, ஈஸ்வரி என எழுவர் அடங்கிய குழு. ஜோக் ஜா வை அடைந்தவுடன் எங்கள் வழிக்காட்டியான திரு கர்டி ஒரு போர்டை ஏந்தியபடி நின்றிருந்தார். ‘வல்லினம் குழு’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கர்டி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர். எங்கள் வாகனமோட்டி சூகியும் இஸ்லாமியர்தான். எனக்கு எப்போதுமே பெயர்களை நினைவு வைத்துக்கொள்வதில் சிக்கல் உண்டு. அதனால் தெரிந்த ஒன்றை நினைவு வைத்து தெரியாததை மனனம் செய்துக்கொள்வேன். அந்த வகையில் கர்டி என்ற பெயருக்குக் கரடியையும் சூகி என்ற பெயருக்கு சுகி சிவத்தையும் நினைவு படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் பெயர்களை மீட்டுணரும் போது கரடியைவிட சுகி சிவத்தை நினைத்துப்பார்ப்பது அதிக நடுக்கத்தைக் கொடுத்தது.
இறங்கியவுடன் ஓர் உணவகம் சென்றோம். வயல் ஓரம் அமைந்திருந்த உணவகம். வழக்கமான உணவக அமைப்பில் இருந்தது. பின்னால் எட்டிப்பார்த்தபோது மூங்கிலால் ஆன மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடல்கடந்து வந்து நான்கு சுவர்களுக்குள் சாப்பிடுவதா ? அந்த மூக்கில் மேடையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். உடனே கர்டி ஏற்பாடு செய்துக்கொடுத்தார். மலேசியாவில் நான் முழுமையாகத் தவிர்க்கும் மலாய்க்கார ரக உணவு. தம்பிடித்து சாப்பிட்டு முடித்ததும் நேராக ராமாயண நாடகம் பார்க்க அழைத்துச் சென்றார்.
தென்கிழக்காசிய நாடுகளில் ராமாயணம் மிகப் பிரபலம். பாலித்தீவுக்குச் சென்றிருந்த போது மனித சப்தங்களின் மூலம் இசை உருவாக்கி அதில் ராமாயணத்தை நாடகமாக்கி இருந்தனர். தெரிந்த கதை. ஆனாலும் பார்க்க சுவாரசியமாக இருந்ததற்கு அந்த மனித இசையே காரணமாக இருந்தது. இதில் என்னால் ராமாயணத்தை இரசிக்க முடியவில்லை. விமானத்தில் அமர்ந்து வந்தது முதல் இடுப்பு வலி மெதுவாகத் தலைக்காட்டத் தொடங்கியிருந்தது. பயணக் களைப்பு அமர வசதியான இருக்கையைத் தேடியது. ராமாயணம் சொல்லப்பட்ட இந்தோ மொழி சுத்தமாகப் புரியவில்லை. எல்லாவற்றையும் விட ராமாயணத்தைப் பார்ப்பதில் எனக்குள் இருந்த சலிப்பு.
வாசிக்கும் ஆர்வம் தொடங்கிய காலத்திலேயே புலவர் குழந்தை எழுதிய ராவணகாவியம், பெரியாரின் பார்வையில் ராமயணத்தின் அரசியல் போன்றவற்றை ஓரளவு வாசித்துள்ளதாலும் அடிப்படையில் அசல் ராமாயணத்துக்கும் கம்பர் தமிழில் எழுதிய ராமாயணத்துக்குமான வித்தியாசம் புரிந்ததாலும் என்னால் அவ்விலக்கியத்தை விமர்சனப் பூர்வமாக மட்டுமே அணுக முடிகிறது. எத்தனையோ மேடைகளில் கம்பரின் புலமையை பலரும் விவரிப்பதைக் கேட்டு அதிசயித்துள்ளேன். (கம்பரின் அசல் வரிகளில் நான் ராமாயணத்தை வாசித்ததில்லை. நான் வாசித்தவை அதன் விளக்க உரைகளே. கல்லூரியில் கம்பரின் அசல் வரிகளை வாசித்து புரிந்துக்கொள்ள மெனக்கெட்டு அதன் நுட்பத்தை வியந்துள்ளேன்.) இன்றும் யாராவது கம்பரின் புலமையைப் பேசினால் கேட்பதுண்டு. அது மொழி சார்ந்த ஈடுபாடு. ஆனால் ராமாயணம் எனும் அரசியல் நாடகத்தை அதன் காட்சிக்காக என்னால் ரசிக்க முடிந்ததில்லை. ஆனால் பாதி நேரம் வரையில் என்னை அங்கு இருக்க வைத்தது அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கு.
Prambanan எனும் பழங்கால கோயில் பின்னணியில் இருக்க வெட்டவெளி திறந்த அரங்கில் ராமாயணம் அரங்கேறியது. விளக்கொளியில் சாம்பல் பூத்த Prambanan கோயில் தங்க நிறமாக ஜொலித்தது. நெடுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அரங்கை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களில் நின்று பார்த்தேன். தங்கமேதான். அரங்கை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் உள்ளே நெருப்பெரிவது தெரிந்தது. அனுமன் தன் வாலால் தீ மூட்டியுள்ளான் என அறிந்து கொள்ள முடிந்தது. தீயின் ஜுவாலையில் Prambanan ஜோராய் இருந்தது.
தொடரும்