மறுநாள் முதல் வேளையாக ‘Candi Sambisari’ யை நோக்கி பயணமானோம். இது 12ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் கோவில். கிழக்கு ஜோக்ஜா பக்கம் அமைந்துள்ள இந்த கோவிலை முதன் முதலாய் 1986ல் கண்டுப்பிடித்தவர் ஒரு விவசாயி. விவசாயப்பணியின் போது தமது மண்வெட்டியில் ஏதோ இடிபட அவ்வூர் தலைவரிடம் புகார் செய்துள்ளார். அதன் பின்னரே அகழ்வாராய்ச்சி மூலமாக இங்குள்ள கோயிலை மீட்டெடுத்திருக்கின்றனர்.
இந்தத் தகவல்களைச் சொன்னதெல்லாம் அந்த விவசாயியேதான். வயது முதிர்ந்த அவருக்கு அரசு அங்கேயே ஒரு வேலை கொடுத்துள்ளது. அந்த வளாகத்தைத் தூய்மை படுத்தும் பணி. அந்த நேரத்தில் அவர் அங்கு இருப்பார் என நாங்கள் நினைத்திருக்கவில்லை. அவர் பேசியது ஓரளவு புரிந்தது. பெயரை விசாரித்தோம். ‘ஓ’ எனும் ஓசையில் முடிந்தது. பொதுவாகவே ஜாவா மக்களின் ஆண் பெயர்கள் ‘ஓ’ என வாய் பிழந்தும் பெண்களின் பெயர் ‘ம்’ என வாய் மூடிகொண்டும் இருக்கும் படி முடியும் என வழிக்காட்டி விளக்கினார். அந்த முதியவரின் விரல்கள் தடித்து பெருத்து நீண்டிருந்தன. ஒரு காலத்தில் வலுவுள்ள கைகளாக இருக்க வேண்டும். மங்காத கூரிய பார்வை. இன்னமும் உழைக்கும் உரம் அவர் உடலில் இருந்தது.
கோயிலைச் சுற்றி வந்தோம். சுற்றிலும் இந்து மதமும் அதைச் சார்ந்த உருவச் சிலைகள் இருந்தன. வடக்கில் துர்க்கை, கிழக்கில் விநாயகர் , தெற்கில் அகத்தியர் , வடக்கில் காவல் உருவங்கள் இருந்தன. உள்ளே லிங்கம். கொஞ்சம் வித்தியாசமான வடிவத்தில்தான் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில் சுமாத்திராவிலும், ஜாவாவிலும் இஸ்லாமே முதன்மை மதமாக விளங்கியது. இதன் தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என வரலாறு சொல்கிறது. ஆக இந்த ‘Candi Sambisari’ பிந்தையதுதான் என ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. அதே சமயத்தில் அகத்தியரின் சிலை இங்கு மட்டுமல்லாது நான் அங்குப் பார்த்த ஏனைய சண்டிகளிலும் இருந்தது.
கிபி 7 ஆம் நூற்றாண்டில் வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயச் செல்வாக்கினாலும், ஶ்ரீ விஜய இராட்சியம் இந்தோவில் சிறப்புற்று விளங்கியதாக வரலாற்றுத்தகவல்கள் கூறுகின்றன. 8ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மதத்தின் மாதரம் வம்சமும் ஜாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளமைக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்கள் இன்றும் அங்குப் பரவியுள்ளன. அதில் ஒரு எச்சமாகவே ‘Candi Sambisari’ எனக்குத் தோன்றியது.
அரசு இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கிறது. அக்காலத்தில் தனித்தனியாகக் கற்களை இணைப்பதன் மூலமே மதச் சின்னங்களை உருவாக்கி இருந்தனர். கிடைக்காத கற்களுக்கு மாற்றாக எரிமைலையிலிருந்து தயாரிக்கும் புதிய கற்களை அதே அளவில் உருவாக்கி அவ்வீடங்களைப் பாதுக்காக்கிறது இந்தோ அரசாங்கம். இருக்கின்ற லெம்பா பூஜாங்கை இடித்துப்போட்ட மலேசிய அரசின் வரலாற்று அறிவை நினைத்து அந்நிமிடம் மெய் சிலிர்த்தோம்.
– தொடரும்.
பூமிக்கு அடியில் இந்தக்கோவில் என்னையும் ஆச்சரியப்படுத்தியது. தொடருங்கள். அருமையான எழுத்துநடை. ஆர்வமாக உள்ளது