ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 3

001இந்து மதத்தின் மாதரம் வம்சத்தின் சின்னமாக இன்றும் மத்திய ஜாவாவில் இருக்கும் பழங்கோயில்தான் Prambanan. கோயிலை நெருங்கிய போது நேற்றிருந்த ஆச்சரியம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. பிரமம் எனும் சமஸ்கிருத சொல் ஜாவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்கோயில் அமைந்துள்ள இடம் பிரம்பனன் எனும் பெயர் பெற்று இடத்தின் பெயரையே கோயிலுக்கும் இட்டுள்ளனர்.

சிவன், விஷ்ணு , பிரம்மா என மூவருக்கும் தனித்தனியாக சன்னிதானங்கள் . சிவன் மூலமாக இருப்பதால் எல்லா இடங்களையும் போலவே இங்கும் சைவத்தைப் பரவலாக்கும் அரசியல் நடந்துள்ளதை ஊகிக்க முடிகிறது. சிவனுக்கு நேராக பெரிய நந்தி. எங்களின் வழிக்காட்டி இக்கோயில் பௌத்தமும் இந்துவும் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுவதாகச் சொன்னார். பௌத்த ஆலயங்களில் இருக்கும் அமைப்பு இதன் கோபுரங்களில் தென்பட்டது. நான் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் முதலில் பௌத்தம் இங்கு பரவியிருக்க வேண்டும், பின்னர் அதை அழித்து சைவம் பௌத்தச் சின்னங்களை சைவ சின்னங்களாக ஒப்பேற்றியிருக்க வேண்டும் என அபிப்பிராயம் கூறினேன்.

அபிப்பிராயம் மட்டும்தான். ஓர் வரலாற்றுச் சின்னத்தை நமது சிற்றறிவுக்கு ஏற்ப ஊகித்து வரலாற்றை002 திருகிச்சொல்வது அவசியமற்றது. ஆனால், வரலாறு குறித்த கேள்விகள் ஒவ்வொரு படைப்பாளனுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. வரலாறுகள் பொதுவாகவே அதிகார வர்க்கங்களால் எழுதப்படுபவை. தமிழகத்தில் சமணத்தையும் பௌத்தத்தையும் அழித்து சைவம் மிக மூர்க்கமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட வரலாற்றை நாம் வாசித்துள்ளோம். ஆக, சொல்லப்படுகின்ற வரலாற்றை இருக்கின்ற முன்னறிவைக்கொண்டே ஊகித்துப்பார்க்க முடிகிறது. அதை ஒட்டிய கேள்வி எழுப்ப முடிகிறது. கேள்விகளுக்கு உடனே பதில் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்விகள் எழுப்பப்படுவதும் வரலாற்றில் ஒரு பகுதிதான்.

பழங்காலக் கல்லுடன் எரிமலைக் கல்

பழங்காலக் கல்லுடன் எரிமலைக் கல்

இங்கும் கோயிலின் கற்களின் இணைப்பு முறையைப் பார்க்க முடிந்தது. இந்தத் தொழில்நுட்பம் எந்த நாட்டினுடையது என்பது குறித்து தெரியவில்லை. இந்தியப் பழங்காலக் கட்டடக் கலையில் இதுபோன்று கற்களை பல்வேறு வடிவங்களில் செதுக்கி ஒன்றுக்கு ஏற்றார் போல மற்றொன்றை இணைக்கும் முறை இருந்ததா என்பதை அது குறித்த ஆய்வாளர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும். இந்தக் கட்டடக்கலை மிக ஆச்சரியமானது. எளிதாக விளக்குவதென்றால் நமது வீடுகளில் விளையாடும் puzzle தன்மையில் அதன் கற்கள் இணைக்கப்பட்டிருக்கும். அவை உறுதியாக இருக்க முட்டையில் வெள்ளைக் கருவுடன் களிமண் போன்ற இதர பொருள்களையும் இணைத்து வலுவாக்கி இருந்தனர் என்றார் வழிகாட்டி. இன்று காணாமல் போயிருந்த கற்களுக்குப் பதிலாக எரிமலைக்கற்களைச் செதுக்கி மிகச் சிறப்பாகவே கோயிலை மறுநிர்மாணிப்புச் செய்திருந்தனர்.

பிரம்பனனைப் பார்த்துவிட்டு வெளியேற முனைந்த போது இருவர் அமர்ந்து003 ஓட்டும் சைக்கிள்கள் இருந்தன. சந்துரு – யோகி ஒரு சைக்கிளில் ஏறிக்கொண்டனர். குழலி தனியாக ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டார். நானும் தயாஜியும் ஒரு சைக்கிளில் பயணமானோம். இருவர் அமர்ந்து ஓட்டும் சைக்கிளில் பிரம்பனன் சண்டியைச் சுற்றி வந்தோம். அதற்கு வேறொரு வாயில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. இருவர் அமர்ந்து ஓட்டும் போது முன்னே அமர்ந்துள்ளவர்தான் மிக பொறுப்பாக இருக்க வேண்டும். தயாஜி மிக கவனமாகவே சைக்கிளைச் செலுத்தினார். அதன் பின்னர் மதிய உணவுக்குச் சென்றோம்.

004ஏறக்குறைய அன்று முழுவதுமே பல்வேறு பழங்காலக் கோயிலைப் பார்ப்பதிலேயே நேரம் கடந்தது. ஓய்வெடுக்க நினைத்தபோது ஒரு கோயில் வளாகத்திலேயே படுத்தேன். சற்று நேரத்திலெல்லாம் நல்ல உறக்கம். வெட்டவெளியில் இப்படிப் படுத்து நெடுநாட்களாகியிருந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒரு சிற்பி செதுக்கிவைத்த கருங்கல்லில் படுத்து உறங்குவது காலம் குறித்த வியப்பை மேலிடச் செய்தது. சின்ன வயதில் இது போல வாசலில் படுத்து மேகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதுண்டு. ஒரு மேகம் இன்னொரு மேகத்தை அடைய மேற்கொள்ளும் பயணம் எப்போதும் சலிப்பூட்டுவதில்லை. நான் இதை அன்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சந்துருவும் தனக்கும் அதே போன்ற அனுபவம் இருப்பதைக் கூறினார்.

எல்லோருக்குமே வானத்தைப் பார்ப்பதில் எல்லா வயதிலும் ஆர்வம் இருக்கவே செய்கிறது. வானம் என்பது மாயையாக இருந்தாலும்.

தொடரும்

(Visited 92 times, 1 visits today)

One thought on “ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 3

  1. சைக்கிளில் சுற்ற முடிந்ததா? அந்தக்கோவிலைச் சுற்றிலும் உடைந்த சிற்பங்கள், எரிமலையால் சிதறுண்ட கோவிலின் பாகங்கள், கற்குவியல்கள் என குவிந்து கிடக்குமே.. பாவம் தயாஜி.. மூச்சு திணறியிருப்பார். இந்துவை பௌத்தம் அழித்தது என்றுதான் சொல்கிறார்கள் அங்கே. உங்களின் கேள்வி தமிழ்நாட்டுச் சூழலை முன்வைத்து வைக்கப்பட்டது..!! நல்ல அனுபவம். தொடருங்கள். கோவிலின் அமைப்பு .. இன்னமும் கண்ணுக்குள்ளே.. ஆஹா ஆஹா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *