மறுநாள் Borobudur போகப்போகும் ஆர்வம் முதல் நாளே தொற்றிக்கொண்டது. Borobudur க்குச் செல்ல இருவகையான திட்டங்கள் இருந்தன. முதலாவதும் காலையில் ஒன்பது மணிக்குப் புறப்படுவது. இரண்டாவது, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டுச் செல்வது. அதிகாலையில் செல்வதில் உள்ள விசேடம் சூரிய உதயத்தை மலையிலிருந்து காணலாம். நான், சந்துரு , யோகி மற்றும் மணிமொழி ஏற்கனவே மலையிலிருந்து சூரிய உதயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் ‘புரோகா’வில் இருக்கும் மலையில் ஏறியதுண்டு. காஜாங்கில் இருக்கும் அந்த மலையில் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஏறிச் சென்றோம். செங்குத்தான சிக்கலான பாதையில் ஏறி மலையை அடைந்தபோது காலை மணி ஏழாகி இருந்தது.
மலையில் ஏறுவதன் மூலம் சூரியனை அருகில் இருந்தெல்லாம் பார்த்துவிட முடியாதுதான். எவ்வளவு உயரே போனாலும் சூரியன் எட்டாத உயரத்தில்தான் இருக்கிறது. ஆனாலும் மலை என்பது தற்காலிக உலகிலிருந்து விடுபடும் நிலை. மிகச்சாதாரணமாக இருபதாவது மாடியிலிருந்து கீழே இருக்கும் பரபரத்த நகரைப் பார்க்கும் போது அதன் வேகம் அர்த்தமற்றதாகவே தெரியும். அதே போல மேலே எல்லாமும் மிக நிதானமாக நகர்வதை காண்கிறோம். ஒரு பறவை அத்தனை அவகாசம் எடுத்து தனது கூட்டத்துடன் நம் கண்களைக் கடந்து செல்கிறது. ஒரு மேகம் மிக நிதானமாக தன் கூட்டத்தில் கலக்கிறது. நாமும் மேலே இருக்கும் போது இயல்பாகவே நிதானமாகிவிடுகிறோம். இயற்கையை முழுமையாய் காணும் மனம் முழுமையாய் உருவாகிவிடுகிறது. நிதானமே இயற்கையை தரிசிக்கும் வழி.
நான் அதிகாலையில் செல்லலாம் எனக்கூறியவுடன் குழலியும் தயாஜியும் உடனே ஆமோதித்தனர். இருவரும் உற்சாகமானவர்கள். பயணத்தில் கூடுதல் உற்சாகத்துடன் இருந்தனர். ஒருவகையாக எல்லாருமே அதிகாலை நான்குக்குச் செல்ல சம்மதம் தெரிவித்தவுடன் கர்டியிடம் எங்கள் ஆர்வத்தைக் கூறினோம். அதற்குக் கூடுதலாகக் கொஞ்சம் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மறுநாள் பயணம் உறுதியானவுடன் அறைக்குத் திரும்பினோம்.
மூன்று நட்சத்திர விடுதி அது. ‘பூரி ஹர்தா’ எனும் அந்த விடுதியில் வேறு யாரும் இருக்கிறார்களா என குழம்பும் அளவுக்கு அமைதி. சில ஆங்கிலேயர்களின் முகம் தெரிந்தது. எனக்கும் தயாஜிக்கும் ஓர் அறை. சந்துரு மற்றும் யோகி ஒரு அறையில் தங்கிக்கொண்டனர். மணிமொழி, குழலி மற்றும் ஈஸ்வரி ஒரு அறையில் தங்கினர். விடுதி கலை நுட்பமாக இருந்தது. அறையில் மரக்கதவுகூட அழகாகச் செதுக்கப்பட்டிருந்தது. வரவேற்பறையில் மூன்று நிர்வாண நங்கைகள் நிற்கும் ஓவியம். எங்கள் அறையில் பிதுங்கிய மார்புடன் ஒரு பெண் பின்புறம் திரும்பி நிர்க்கும் ஓவியம் அறையை முழுமைப் படுத்தியிருந்தது. கொஞ்சம் வெளியே நடந்தால் நீச்சல் குளம்.
நாங்கள் நீச்சல் குளத்தில் இறங்கினோம். ஆளமான குளம். குளோரின் கலந்த நீரை குறைந்தது ஒரு லிட்டராவது தற்செயலாகப் பருகியிருப்பேன். ஒருவர் மீது மற்றவர் நீரடித்து விளையாடியதில் உடல் காயத்தொடங்கியது எனக்கு. பொதுவாகவே நண்பர்களுடனான பயணங்களில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் பயணத்தில் மெல்லிய சோர்வு தட்டும். எப்படியும் கவனம் பாதிக்கப்பட்டவர்கள் மேல் குவியும். எனவே முடிந்தவரை உடல் நோவை கவனத்தில் வைத்திருக்கக் கூடாது என முடிவு செய்துக்கொண்டேன். மணிமொழி முன்னெச்சரிக்கையாகக் கொண்டுவந்திருந்த மருந்துகள் தற்காலிகமாகக் கைக்கொடுத்தன.
எல்லாவித சோர்வையும் மறுநாள் காலை பார்க்கப்போகும் Borobudur-ன் கற்பனைத்தோற்றம் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தது.
தொடரும்
செம ஜாலிதான்..