கடிதம்- நவீன் செல்வங்கலை

நண்பரின் ‘வலி’ எமக்கு புரிகிறது… :) ஆழ்ந்து நோக்கியதன் விளைவாகத்தான் இக்கட்டுரை எழுந்திருக்கும் என நம்புகிறேன்.இந்நூலை நான் வாசித்ததில்லை. இருப்பினும் நண்பரின் இந்நூல் குறித்த பகிர்வினை வாசித்தப் பின்பு, ஒரு வேளை சீ. அருணின் கட்டுரைகள் வரலாறு குறித்த நுட்பமான பார்வை இல்லாதவரால் சான்றுகளாகக் கொள்ளப்பட்டால், எதிர் கால சந்ததியர்கள் பூனையை புலி எனக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடும். ஆய்வுகள் வேறு, நம்பிக்கைகள் வேறு எனும் நிலைபாட்டினை முதலில் ஆய்வாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.தமிழர் தம் நெடிய வரலாற்றை, அதில் உள்ள நுண்பாக விடயங்கள் எதையும் தாய்மொழி வழியாக முதலில் அறியவில்லை என்பது குற்றமாக இருந்த காலம் போய், சமிபக்காலமாக கள ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் சான்றுகளோடு பல ஆய்வாளர்கள், இதற்கு முன்பு நிறுவப்பட்ட கருத்துகளை தகர்த்து உண்மை சூழலை நிறுவியுள்ளனர் . இவற்றில் ஒன்றைக்கூடவா இவர் சான்றாகக் கொள்ளவில்லை?

வரலாற்றுக் குறிப்புகளை பதிவுச் செய்கையில் கால அளவீட்டு முறை என்பது தனியொரு பகுதியாகவே நிலைத்து நிற்கிறது. பல நூல்களில் ஒரே நிகழ்வானது பல்வேறு காலங்களில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டிருப்பது, ஆய்வாளர்களால் காலத்தை சரியான முறையில் கணக்கிட இயலாமல் போக்கினைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொறு ஆய்வாளனும் வரலாற்றை பதிவு செய்கையில் காலத்தை உய்த்துணர வேண்டும்.

உலகிலுள்ள தொன்மைச் சமுதாயங்களில் ஒன்று தமிழ்ச் சமுதாயம். தொன்மை மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. கடந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயமும் அதன் படைப்பான தமிழ் மொழியும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுள்ளன என்பது நாம் அறிந்ததே. சமுதாய மாற்றமானது மொழியில் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத பட்சத்தில் புதிய கருத்துகளும் பொருள்களும் உருவாகும். ஆனால் இம்மாற்றங்களின் கால நிலையையும், அதனால் எற்பட்ட விளைவுகளையும் ஆய்வாளர்கள் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதனை சீ. அருண் உள்ளார உணர்ந்திருந்தால் இந்நூலினை வெளியிடும் எண்ணமே அவருக்கு உதித்திருக்காது.

(Visited 47 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *