ஹி ஹி ஹி ஹி: சாருவுக்கு பதில்

சாரு நிவேதிதா எழுதியுள்ள (http://charuonline.com/blog/?p=1503) கட்டுரையில் குறிப்பிடும் மலேசியப் பொடியன் நான்தான். இரண்டு நாள்களுக்கு முன்புதான் கண்ணாடியில் கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறது என கவனித்துப் பார்த்தேன். சாரு பொடியன் என்றவுடம் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

முதலில் சாரு சொல்லியதைப் போல யாரையும் குஷிபடுத்தும் எண்ணத்திலெல்லாம் நான் இக்கட்டுரையை (http://vallinam.com.my/version2/?p=1313) எழுதவில்லை. சினிமா வாய்ப்புக்கு அலைந்து அலைந்து இயக்குனர்களின் கடைக்கண் பட, அவர்களின் மசாலா படங்களை உலகத்தரமென எழுதி குஷிப்படுத்தி, கிடைத்த வாய்ப்புக்கு கையையோ காலையோ ஆட்டும் வரமெல்லாம் எனக்கின்னும் வாய்க்கவில்லை. சாரு மொழியில் சொல்வதானால் அந்த ‘மட்டித்தனம்’ வரவில்லை. சமகால தமிழ் இலக்கியத்தில் இயங்குபவர்களை கவனப்படுத்துவதிலும் அவர்களை அக்கறையாக வாசித்து உரையாடுவதிலும் தமிழ்ப்படைப்பாளிகளிடையே காணப்படும் தேக்கத்தைச் சுட்டிக்காட்டினேன். அந்தத் தேக்கம் பெண் படைப்பாளிகளிடம் மட்டுமல்ல உலக இலக்கியங்களை அடிக்கடி கோடிட்டுக்காட்டும் சாரு போன்றவர்களிடமும் உள்ளது என்றேன். அதை இப்போதும் உறுதிபட சொல்கிறேன். அதற்கு சாருவின் இரண்டாவது கட்டுரையே சான்று : http://charuonline.com/blog/?p=1507

முதலில் சாருவே சொல்லியுள்ளதைப் போல, உலக இலக்கியங்களை அறியாத அவரை அவ்வாறு குறிப்பிட்டதை எண்ணி வருந்துகிறேன். அவரது ‘ஊரின் மிக அழகான பெண்’ என்ற மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் , ‘ஒழுங்கின்மையின் வெறியாட்டம்’ என்ற நேர்காணல் தொகுப்பு, ‘வரம்பு மீறிய பிரதிகள்’ தொகுப்பில் உள்ள அவரது கட்டுரைகள் போன்றவற்றை வாசித்து நான் தவறாக ஏற்படுத்திக்கொண்ட மனச்சித்திரமாக அது இருக்கலாம். வேண்டுமானால் அந்த வரியில் உலக இலக்கியத்துக்கு பதிலாக, ‘ஃப்ரெஞ்ச் மற்றும் அரபி இலக்கியம்’ என திருத்திக்கொள்ளலாம். சாரு தனது எதிர்வினையில் சு.வெங்கடேசனுக்கு பதிலாக சு. வேணுகோபால் என்று பெயரை தவறாக மாற்றி போட்டுவிட்டு, பின்னர் ‘பெயர்களை ரத்து செய்து விட்டு நான் சொல்ல வந்ததை மட்டும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் ‘ என்ற அவரது வாசகத்தையே இதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மலேசிய இலக்கியத்தில் ஒன்றுமில்லை, தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமில்லை, இந்திய இலக்கியத்தில் ஒன்றுமில்லை என எவ்வித உழைப்பும் இல்லாமல்… போகிற போக்கில் பேசுபவர்களிடம் எப்போதுமே நான் மாற்றுக்கருத்துகளுடன் உரையாட தயாராகவே இருக்கிறேன். சாரு பல தருணங்களில் சமகால தமிழ் இலக்கியத்தில் தான் வாசிக்கும் அளவில் ஒன்றும் இல்லை என்பதுபோல பேசியும் எழுதியும் உள்ளது பலரும் அறிந்ததுதான். http://charuonline.com/blog/?p=1512 என்ற துணுக்கில் எஸ்.ரா காவல் கோட்டத்தை நிராகரித்து விமர்சித்துள்ளதால் தான் எதற்கு அதை வாசிக்க வேண்டும் என்கிறார். சாருவின் பாணியிலேயே சொல்வதென்றால் எந்தத் தமிழ்த்திரைப்படத்துக்காவது இத்தகைய அவமதிப்பைச் செய்வாரா? ஊரே நாசமான படம் எனச் சொன்னாலும் பார்த்துவிட்டு வந்து திட்டித்தீர்ப்பார். ஆனால், காவல் கோட்டம் போன்ற ஓர் ஆக்கத்துக்கு எஸ்.ராவின் விமர்சனம் இவருக்குப் போதுமானதாகிறது. அப்படிப் பார்த்தால் இவர் பட்டியலில் இலக்கியத்துக்காக உயிரையே கொடுப்பவர்களில் ஜெயமோகன் இருக்கிறார். ஜெயமோகன் ‘காவல் கோட்டத்தை’ தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்த முக்கியமான சாதனை என்கிறார். இப்போது அவர் எஸ்.ரா சொல்வதைக் கேட்பாரா இல்லை ஜெயமோகன் சொல்வதைக் கேட்பாரா? ஒரே குழப்பமாக இருக்கிறது.

இதில் விசேசம் என்னவென்றால், 27ஆம் திகதி தனக்கு சு.வெங்கடேசன் என ஒருவர் இருப்பது இப்போதுதான் தெரியும் எனக்கூறிவிட்டு அதே 27ஆம் திகதி எஸ்.ரா சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரையைக் கோடிட்டுக்காட்டி எதற்கு சு.வெங்கடேசனையெல்லாம் படிக்க வேண்டும் என்கிறார். எஸ்.ராவின் விமர்சனத்தைப் படித்துதான் அவர் அந்த முடிவை எடுத்தார் என்றால், சு.வெங்கடேசனை எப்படி அவருக்கு 2014 ஆக்ஸ்ட் 28ல்தான் தெரிந்தது? இந்த முரண்நகையையெல்லாம் நாம் பொறுத்துக்கொண்டு நிதானமாகக் காரணம் கேட்டால் ‘உன் பிறப்பே தப்பானது’ என திட்டுவார்.

அவரைப் போல யார் தமிழ் இலக்கியத்தைப் பகடி செய்யும் போதும் நான் முன்வைக்கும் கேள்விகள் அனைத்துமே , சமகாலத்தில் நான் முக்கியமாகக் கருதும் தமிழ் படைப்புகள் அடிப்படையானவை. சாரு அவற்றை இன்னும் வாசித்திருக்காத பட்சத்தில் அவ்வாறான பகடிகளும் தமிழ் இலக்கியத்தின் மீது அவர் வைக்கும் விமர்சனங்களும் அர்த்தமற்றதாக எஞ்சுகின்றன. “நான் அதையெல்லாம் படிக்க மாட்டேன்” எனச்சொல்வது சாருவின் முழு உரிமை. படிக்க இயலாததும் அவரவர் சூழல் பொறுத்தது. ஆனால், அதையெல்லாம் வாசிக்காமல் ஒரு மொழியில் படைக்கப்படும் இலக்கியத்தில் ஒன்றுமில்லை என்றால் அதை விமர்சிப்பதும் என் உரிமைதான். ஜெயமோகன் மலேசியா வந்திருந்த போது, “மலேசிய நாவல்கள் குறிப்பிடும்படி இல்லை” என்றார். அவர் அவ்வாறு சொல்ல மலேசிய நாவல்கள் குறித்து விரிவான அறிமுகங்கள் மலேசிய இலக்கிய உலகில் நடக்கவில்லை எனக் கருதினேன். அதன் பின்னர்தான் மலேசிய நாவல்கள் குறித்த அறிமுக கட்டுரைகளை எழுதி நூலாக வெளியிட்டேன். ஆனால், தமிழகச் சூழலில் மிகச் சிலர் அவ்வப்போது தமிழின் முக்கியமான ஆக்கங்கள் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். எத்தனை நூல்கள் வந்தாலும் தேர்ந்தெடுத்து வாசிக்கக் கூடிய நூல்கள் குறித்த அறிமுகங்கள் கிடைத்துவிடுகின்றன. இந்தச் சூழலில் அவர் பெயரே தெரியாது என்பதெல்லாம் அபத்தம். இதையே சாருவை ஓர் எழுத்தாளராகத் தெரியாது என யாராவது சொன்னால் சொன்னவனுக்கு அன்று காதில் ரத்தம் வடியும். ஆனால், சாரு தன் காலத்தில் எழுதும் ஒரு சக படைப்பாளியின் பெயர் தெரியாது என்பார். அதை ஏன் என்று எவனாவது கேள்வி கேட்டால் உடனே புலம்பல் தொடங்கிவிடும்.

வல்லினம் இணைய இதழாக தொடங்கப்பட்ட நாள்களில் பலரிடமும் அதை அறிமுகம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளேன். நிறைய இணைய தளங்கள் அதை தொடர்ந்து செய்து வருகின்றன. அவ்வாறு சாருவிடமும் கேட்கப்பட்டு அவர் இணையத் தளத்தில் வல்லினத்துக்கு லிங்க் கொடுத்தார். அவ்வளவே. லிங்க் கொடுத்த அனைவருக்குமே ‘நன்றி’ சொல்வதுதானே நியாயம். இப்பொழுதும் சாருவுக்கு அதற்காக நன்றி சொல்லலாம். ஆனால், என் கருத்துகளில் அதனால் மாற்றமே இல்லை. ஆனால், நான் நன்றி சொல்லிவிட்டதையும் ஒப்புக்கொண்டு, பிறகு நான் நன்றிக்கெட்டத் தனமாக நடந்துகொண்டேன் என்பதெல்லாம் உண்மையில் காமடி. ஒரு லிங்க் கொடுத்ததற்குக் காலமெல்லாம் அடிமையாகச் சேவகம் செய்ய வேண்டுமா என்ன?

வல்லினம் எவ்வித விளம்பர உதவியும் இல்லாமல் நடத்தப்படுகிற தளம். எனவே வல்லினத்தில் எழுதப்படும் எந்த படைப்புக்கும் நாங்கள் இதுவரை பணம் கொடுத்ததில்லை. ஆனால், ‘பறை’ இதழ் பணத்துக்கு விற்கப்படுவதால் அதில் எழுதும் எழுத்தாளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சாரு சொல்லியுள்ளது போல அவர் வல்லினத்துக்கு எந்த கட்டுரையும் கொடுக்கவில்லை. அவர் எழுதிக்கொடுத்தது ‘தங்கமீன்’ எனும் சிங்கை இதழுக்கு. வல்லினத்தில் வாசகர் கேள்வி பதில் பகுதியில் அவர் பங்கெடுத்தார். ஆனால் இப்போது கட்டுரை கொடுத்ததாகக் குழப்புகிறார்.

சாருவின் http://charuonline.com/blog/?p=1507 இரண்டாவது பத்தியே அவரது தெளிவற்ற பேச்சுக்கும் சிந்தனைக்கும் சான்றாக உள்ளது. முதல் கட்டுரையில் சு.வேணுகோபால் குறித்து அவதூறு பேசியவர் இவ்வாறு சொல்கிறார், (இன்றுதான் … இப்போதுதான் எனக்கு சு. வெங்கடேசன் என்றும் சு. வேணுகோபால் என்றும் இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்றே தெரியும். ) இதைதான் நான் சொல்கிறேன். இவ்விருவரின் ஆக்கங்களையும் வாசித்ததில்லை, இதுபோல தமிழ் இலக்கியத்தில் இயங்கும் இன்னும் பலரையும் படிக்காத அவர் தமிழ் இலக்கியத்தின் போக்கு குறித்து பேசுவதென்பது அபத்தம்.

இறுதியாக, சாருவுக்குக் கொடுத்திருக்கும் பதிலில் வரிக்கு வரி அவரைப்போலவோ அவரைவிடவோ உஷ்ணமான தொணியில் என்னாலும் பேச முடியும் . பணம் தொடர்பான பேச்சில் சாரு மலேசியா வந்திருந்த போது நிகழ்ந்த அனுபங்களை ஆதாரங்களோடு இந்தக் கட்டுரையில் கிண்டலடிக்கலாம். ஆனால், நான் அதையெல்லாம் விரும்பவில்லை. ஒருவகையில் தமிழ் இலக்கியத்தின் முகம் மாறி வருகின்றது என்பதை நான் அறிய சாருவின் முதல் இரு நாவல்கள் உதவியிருக்கின்றன. அந்த மரியாதை அப்படியே இருக்கட்டும்.

ஆனால், அது மரியாதை மட்டுமே. பயமெல்லாம் இல்லை. கைகளுக்கு எட்டாத தொலைவில் இருந்துகொண்டு சவடால் பேச்சு பேசும் குசும்புக்காரர்கள் எங்கள் ஊரிலும் அதிகம். என்னைப் பார்க்கும் போது செருப்பை எடுத்து காட்டுவேன் எனச் சொல்லியுள்ளார். செருப்பைக் காட்ட விமானம் பிடித்து மலேசியா வரவேண்டும். வந்தால் யாராவது தகவல் சொல்லுங்கள். எனக்குக் காட்டுவதற்கெல்லாம் நேரமில்லை. அவ்வளவு நிதானமும் இல்லை. செருப்பை கையில் வைத்துக்கொண்டு காட்டிக்கொண்டு நிற்க்கவெல்லாம் கொஞ்சம் பொறுமை வேண்டும் அல்லவா?

(Visited 333 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *