நான்
பிரிவு பற்றி கூறியதை
புரிந்துகொள்ள முடியாத
உன் சூன்யப் பெருவெளிக்கு
சில உதாரணங்கள் காட்டினேன்
ஒரு காகிதத்தைக் கிழித்து
உடைகளைக் கலைத்து
நிலத்தினைப் பிழந்து
நகத்தினை கடித்து
இடைவெளியை விரித்து
உதாரணங்கள் காட்டிக்கொண்டே இருந்தேன்
பிரிவு குறித்து புரியாத
உனக்கான பாவனையற்று
மௌனத்தில் சாய்ந்த நேரம்
நீ அழுதாய்
***
முடியாத இந்தப் பாதையில்
நான் நடப்பது
ஒரு நிழலின்
உணர்வின்மையுடந்தான்
எளிதாக செய்யக்கூடிய
கொலைகள் மற்றும் தற்கொலைகள்
சூழ்ந்துள்ள பிரதேசத்தில்
ஒரு புல் மேட்டில் அமர்வது கூட
வருத்துகிறது
என்னைப்பற்றி
நம்பவே முடியாத ஒரு சொல்
உங்கள் காதுகளில் விழும் சமயம்
உங்கள் முகம் எப்படி மாறும்
என ஊகிக்கும் கற்பனையில்
நீங்கள் இறந்துவிட்டிருந்தீர்கள்
***
நீயும் நானும்
பெரும் புயலில் அணையவிருந்த
ஒரு சுடரை
கைகள் பொசுங்க காப்பாற்றினோம்
அது படபடப்பது
இறுதி சொட்டு எண்ணை தீர்வதின்
அச்சத்தில் என அறியாமல்
***
நீயும் நானும்
என்றோ ஒரு நாள்
இறந்துவிடுவோம்
என்பதை மறந்திவிட்டு
அவ்வப்போது
எதிர்காலம் குறித்து
பேசுகிறோம்
அத்தனை நம்பிக்கையாய்
***
வேறு வழியே இல்லாமல்
நாம்
நமது கடந்த கால அந்தரங்க புகைப்பட ஆல்பத்தை
ஒரு நாள் புரட்டினோம்…
அதில் உள்ள என்னையும் உன்னையும்
வெட்கம் கசிய கவனித்தோம்
சில இடங்களில் கைகள் வைத்து மூடினோம்
சில பக்கங்களை கிழித்து எறிந்தோம்
உனது அசைவுகளையும் எனது பாவனைகளையும்
மாறி மாறி கிண்டல் செய்தோம்
அது நாமாக இருக்காது
என சந்தேகம் எழுப்பிக்கொண்டோம்
சந்தேகத்தை நாமே உறுதி செய்தோம்
புகைப்படங்களை கிழிக்கும் முன்
யாரோ இருவருக்காக
நாம் காரணமே இல்லாமல்
அழுதோம்
***
வெற்றியால் மகிழ்கிறவர்களை
ஒவ்வொரு கணமும்
ஆச்சரியத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறேன்
மகிழ்ச்சியாய் இருப்பவர்களெல்லாம்
வெற்றியாளர்களாய் இல்லாமல் இருக்கும் போது
அவ்வாச்சரியம் உடனே நீங்குகிறது
***
எதையும் அறியாமல்
கடலோரம் சிப்பி பொறுக்கும்
சிறுமியைக் கண்டவுடன்
உடைந்துபோகிறது
அரங்குகளில் தூவப்பட்ட கைத்தட்டல்களாலும்
காமிரா ஒளியாலும்
எழுந்த ஆதீதமான செறுக்கு
***
இன்று கிடைக்க வேண்டிய
ஒரு தண்டனை
இல்லை என ஆகும் போது
இரவு எரிகிறது
கோமாளியின் முகத்தில் அத்தனை விசேசமாய்
சுடர்விடும்
சிவந்த மூக்கு
தெருவில் அறிந்துகொள்ள முடியாத பொருளென
நாயால் மோப்பம் பிடிக்கப்படுவதுபோல
ஆகிவிடுகிறது வாழ்க்கை
ஒரு 3டி நிழல்போல
எங்கோ நோக்கி யாரையோ தேடுகிறோம்
அறவே அசைவில்லாவிட்டாலும்
பயமுறுத்தும்
ஓர் அந்தரங்க நிழல்படம் போல
இந்த காலத்தின் நிதானம்
அச்சுறுத்துகிறது