2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்
2005 வாழ்வில் மிக முக்கியமான காலம். ஒரு காதல் தோல்வியில் மனம் மிக சோர்ந்திருந்த ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் அழுகை பொத்துக்கொண்டு வரும் எனும் முகத்தோற்றம். மருத்துவர் சண்முகசிவா அப்போதுதான் அறிமுகமாகியிருந்தார். அவசரத்துக்கு ஏதாவது பாராட்டு சொற்களைக் கேட்க வேண்டுமென்றால் அவரை அழைப்பதுண்டு. அதுதான் நான் ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டும்.
எதிலுமே மனது ஒட்டாமல், ஆசிரியர் பணியும் முழுமையாய் கைவரப்பெறாமல் சோர்வாகவே சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் ஆஸ்ட்ரோ முதல் நாவல் போட்டியின் முடிவு விழா Palace of Golden Horses -ல் நடந்தது. பிரபஞ்சன், திலீப்குமார், சிவசங்கரி என மூன்று நடுவர்களோடு சிறப்பு விருந்தினராக வைரமுத்து என பல கலவையான எழுத்தாளர்கள் அந்நிகழ்வில் பேசினார்கள். இலக்கியத்துக்காகக் கூடிய மாபெரும் கூட்டத்தை அப்போதுதான் நான் முதன் முறையாகப் பார்த்தேன்.
சீ.முத்துசாமியை நாம் முதன் முதலாகச் சந்தித்ததும் அங்குதான். குறைவாகப் பேசினார். அவர் சொன்ன இரண்டு விசயங்கள் இன்னமும் நினைவில் உண்டு. “நமக்கு நம் எழுத்தைப் பற்றிய சுய விமர்சனம் தேவை. எழுத்து போட்டியல்ல… அது கலை. அவசரமும் போட்டித்தன்மையும் கலையைச் சாகடிக்கும்…” முத்துசாமியிடம் பேசும் போதுமட்டும் இதுபோன்ற சில உச்சமான வார்த்தைகள் கிடைக்கும்.
உண்மையில் இந்த நாவல் போட்டி 2003ல் தொடங்கப்பட்டது. அப்போது எனக்கு 21 வயது. கல்லூரியின் பயிற்றுப்பணியில் இருந்தேன். தைப்பிங்கில் உள்ள ஒரு பள்ளியில் பயிற்சி. ஒவ்வொரு நாளும் வேலைகளை முடித்துவிட்டு எழுத அமர்வேன். வார்த்தைகளைத் தேடித்தேடி டைப் செய்ய சிரமமாக இருக்கும். இடைநிலைப்பள்ளியில் என் வாழ்வோடு கலந்திருந்த காதலையும் கலகத்தையும் பதிவு செய்யும் தூண்டுதல் இருந்ததால் ஓயாமல் எழுத முடிந்தது. இரண்டு வருடம் கடந்து அந்தப் போட்டியில் எனக்கும் பரிசு கிடைத்திருக்கிறது என கடிதம் வந்ததும் குதூகலம்.
நிகழ்வில் பிரபஞ்சனின் உரை இலக்கியத்தின் நுட்பமான தருணங்களை அறிமுகம் செய்து வைத்தது. தமிழ் இலக்கியத்தைக் கடந்து உலக இலக்கியம் தொட்டு அவர் பேசினார். அடுத்து பேசிய வைரமுத்து பிரபஞ்சனின் சில உதாரணங்களை எடுத்துக்கொண்டு பேச , பிரபஞ்சன் அந்த அவையில் உருவாக்கி வைத்த கலை அதிர்வு மாசுபட ஆரம்பித்தது. நான் வைரமுத்து ஒரு கோமாளி என அறிந்துகொண்டது அந்த அவையில்தான்.
காதல் தோல்வியில் சோர்ந்திருந்த மனதுக்கு உடனடியாக ஒரு மாற்றம் தேவைப்பட்டது. என்னுடன் அம்மா, அப்பாவோடு பூங்குழலியும் வந்திருந்தார். 2002 நட்பான காலம் தொட்டே எனது எல்லா வெற்றிகளிலும் சருக்கல்களிலும் உடனிருக்கும் தோழி அவர். போட்டியில் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆறுதல் பரிசுகளின் பட்டியல் முடிந்ததும் கொஞ்சம் சோர்ந்துபோயிருந்தேன். அம்மா அப்பாவை அழைத்து வந்தது கொஞ்சம் அவமானமாக இருந்தது. மூன்றாவது பரிசும் இல்லை என தெரிந்தபோது நான் என்ன நாவல் எழுதினேன் என யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் மனதில் எதுவும் தெளிவாகவில்லை. இரண்டாவது பரிசுக்கு என் பெயர் அழைக்கப்பட்டதும் பதற்றம். குழலி உசுப்பினார். தட்டுத்தடுமாறி எழுந்து நடந்தேன். சட்டையை உள்ளே விட்டுக்கொள்ளலாமா? எண்ணைப் பிசுக்குள்ள முகத்தைத் துடைக்கலாமா என குழப்பம் பலவாறான கேள்விகள். கேள்விகள் முடியும் முன்பே மேடையில் இருந்தேன். சிவசங்கரி பரிசைக் கொடுத்தார். கீழே இறங்கி வந்தபோது யார் யாரோ கட்டிப்பிடித்தார்கள். பரிசு பெற்றவர்கள் எல்லாம் புகைப்படம் எடுக்கும் போது, ஆறுதல் பரிசு பெற்றவர்களை முன்னே அனுப்பிவிட்டு பின்னே ஒளிந்துகொண்டேன். உண்மையில் எனக்கு மகிழ்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் மாறி மாறி தாக்கின.
நெடுநாள்களுக்குப் பின் நடக்கும் முதல் நாவல் போட்டி என்பதால், போட்டியில் கலந்துகொண்டவர்கள் அதிகம். நாட்டின் மிக முக்கியமான நாவலாசிரியர்கள் கலந்துகொண்ட ஒரு போட்டியில் பொடியன் ஒருவன் இரண்டாம் பரிசைத் தட்டிச்சென்றது அனைவரையும் அப்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த ஆச்சரியம் அடங்கும் முன்புதான் நான் அ.ரெங்கசாமியை முதன் முதலாய் பார்த்தேன். அவரது ‘லங்காட் நதிக்கரை’ நாவலுக்கு 10000 ரிங்கிட் சிறப்பு பரிசு கிடைத்தது.
அதுநாள்வரை அப்படி ஓர் எழுத்தாளர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அல்லது மலேசிய இலக்கியத்தை நான் அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சீ.முத்துசாமியின் சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்ததாலும் , நவீன இலக்கியத்தில் அவர் பார்வை விசாலமானது என்பதாலும் ‘மண்புழுக்கள்’ என்ற அவரது நாவலுக்கு முதல் பரிசு (5000.00) கிடைத்ததும் , எனக்கு அறிமுகம் இல்லாத அ.ரெங்கசாமிக்கு சிறப்பு பரிசு கிடைத்ததும் உவப்பில்லாமல் கரித்தது.
“அப்படி என்ன இந்த ரெங்கசாமி எழுத்திட்டார்?” என மனமும் நாவும் சதா முணுமுணுத்துக்கொண்டே இருந்தன.
– தொடரும்
ஆரம்பிக்கும் போதே.. நகைச்சுவை வெடிகள்.. //எப்போது வேண்டுமானாலும் அழுகை பொத்துக்கொண்டு வரும் எனும் முகத்தோற்றம்.// ஹாஹாஹா..
இப்போதுதான் தொடரை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். வெரி பிஸி லா. தலகாணி சைஸ்’ல ஒரு புக்கு..படிக்கிறேன் படிக்கிறேன்.. முடிந்த பாடில்லை. மூழ்கினேன். அங்கிருந்து வர மனமில்லை. இருப்பினும் இங்குள்ள பல சுவாரஸ்யங்களை தவறவிடவும் மனமில்லை. ஓடிவந்தேன். முடிந்துவிட்டுத்தான் மீண்டும் அங்கு செல்லவேண்டும். ஐ மீன் அந்த புக்கு படிக்க. 🙂