2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்
ஒரு வெற்றி அடைந்தபின் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பமே மறுநாள்களில் மிஞ்சியது. தொலைக்காட்சி, நாளிதழ் என பலவற்றிலும் என் படங்கள் தொடர்ந்து வந்தாலும் நான் எழுதிய நாவல் குறித்து கேட்டபவர்களைக் காணக்கிடைக்கவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்கள் யாருக்குமே நாவல் குறித்தோ அதில் பரிசு பெறும் எழுத்தாளன் எனும் வகையரா அவர்களுடந்தான் இந்த பூமியில் வாழ்வது குறித்தோ கொஞ்சமும் கேள்விகள் இல்லை. பள்ளியில் நான் மட்டுமே ‘ஈ…’ என பார்ப்பவர்களிடமெல்லாம் பல்லைக்காட்டிக் கொண்டிருந்தேன். எனது வெற்றி குறித்து அறியாதவர்கள்மேல் கடும் கோபம் வந்தது. பின்னர், ‘அவர்கள் ஏன் அறிந்திருக்க வேண்டும்’ என்ற எனக்குள் எழுந்த கேள்வியே சோர்வடையவும் வைத்தது.
அந்த வாரத்தின் ஓர் இரவில் , திலீப்குமார் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் அவர்களுடன் உரையாட வாய்ப்புக்கிடைத்தது. உடன், சண்முகசிவா மற்றும் யுவராஜன் இருந்தனர். பிரபஞ்சன் பாசிபயிர் உருண்டையைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பலகாரத்தின், மேல் பரப்பில் இருக்கும் பொரித்த மாவை பாதியளவு நீக்கிவிட்டு , கெட்டியாகிவிட்டிருந்த பாசிப்பயிரை தனித்தனியாகப் பிரித்துச் சாப்பிட்டார். என் வாழ்நாளில் அவ்வாறு அவ்வுருண்டையைச் சாப்பிட்ட ஒருவரை இந்நாள்வரை மீண்டும் கண்டதே இல்லை.
பேச்சு போட்டியில் பங்குபெற்ற நாவல்கள் பக்கம் திரும்பியது. சீ.முத்துசாமி மற்றும் அ.ரெங்கசாமியின் நாவல்களின் தரம் குறித்து பேசப்பட்டன. முத்துசாமியின் மொழி சிலாகிக்கப்பட்டது. ஆனால், பெரும் வரலாருக்கு மத்தியில் ஊர்ந்து செல்லும் கதையமைப்பைக் கொண்டதால் ரெங்கசாமியின் நாவல் மிக முக்கியமானதாகவே கருத்துகள் வைக்கப்பட்டன. ரெங்கசாமி என்ற பெயர், அவர் வயது, நாவலின் பெயர் என மூன்றுமே எனக்கு வாசிப்புக்கு உகந்ததாய் இல்லை. அப்போது நான் நவீன இலக்கிய வாசிப்பில் தீவிரமாக வேறு இருந்தேன். இரண்டு கை விரல்களிலும் கணக்கிட்டு நவீன இலக்கியவாதிகள் பெயர்களை மனப்பாடமாகச் சொல்லும் அளவுக்கு வாசிப்பு இருந்தது. சீ.முத்துசாமியின் மொழியும் மலேசியத் தமிழர்களின் தோட்டப்புற வாழ்வும் தமிழக நடுவர்களுக்குப் புரியவில்லை என்றும் அதனால் ரெங்கசாமிக்குப் பரிசைத்தூக்கி கொடுத்துவிட்டார்கள் என்றும் நண்பர்களோடு கிசுகிசுத்தேன்.
இவர்களுக்கு அடுத்த நிலையில் பரிசு பெற்ற என்னை அவ்வவையில் மறந்தே போய்விட்டிருந்தனர். வெற்றியாளனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, வேறு விசயங்களை அவனை வைத்துக்கொண்டே பேசுவது எவ்வளவு கொடுமையானது! எனவே நானே அதை நினைவுக்குக் கொண்டுவர பிரபஞ்சன் ஒரு கருத்தைச் சொன்னார். “நீங்க, நாவல்ல தாத்தாவோட பாத்திரத்தை நல்லா சொல்லியிருக்கீங்க… அதேபோல பேரனுடையதையும் சொல்லியிருக்கலாம்…” இதன் அர்த்தம் பின்னர் புரிந்தாலும் ஏண்டா கேட்டோம் இருந்தது அப்போது. விழுந்து விழுந்து வடித்த நாவலுக்கு இவ்வளவுதானா விமர்சனம் என கடுகடுத்தது. எனவே ‘பிரபஞ்சனுக்கு இலக்கியம் தெரியவில்லை’ என முடிவுக்கு வர அன்றைய இரவின் அனுபவம் போதுமாகிவிட்டது.
உண்மையில் புகழ் கொடியது. பக்குவப்படாத மனங்களை அது நிம்மதியாக விடுவதில்லை. முதலில் அதை நோக்கி ஓட வைக்கிறது. பின்னர் அதை தக்க வைக்க தொடர்ந்து அதன்பின்னே ஓட வைக்கிறது. புகழ்போதை ஒரு கலைஞனை பந்தயக்குதிரையாக்கிவிடுகின்றது. எதிர்ப்பார்க்கவே இயலாத எனது வெற்றி காதல் தோல்வியின் வடுவைக்கூட மறக்கடிக்கும் புகை மூட்டத்தை உருவாக்கியிருந்தது. புகை மூட்டங்களின் ஆயுள் மிகக் குறைவு.
ஒருவாரம் முடியும் முன்பாகவே வெற்றியின் கதகதப்பு முற்றிலுமாக நீங்கியிருந்தது. வீட்டில்கூட அதுகுறித்த பேச்சு இல்லை. எல்லாருக்கும் அவரவர் வாழ்வு இருந்தது. “இலக்கியம் என்பது போட்டி இல்ல…” என முத்துசாமி சொன்னது அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்தது. ஓஷோவை வாசித்திருந்ததால், வெற்றியடைவதுதான் மகிழ்ச்சி என நம்புவது எவ்வளவு பொய்யானது என மிக இளம் வயதியேலே எனக்கு அந்தச் சம்பவம் வழி புரியத்தொடங்கியது. மகிழ்ச்சியாக இருப்பதுதான் வெற்றிபோல…
– தொடரும்
புரிந்தும் புரியாமலும்.. 🙂