2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
மீண்டும் 2005லேயே பேரவைக் கதை போட்டியில் பொதுப்பிரிவில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருந்தது. அந்த ஆண்டின் இரண்டாவது வெற்றி. நான் முதன்முதலாக அந்த ஆண்டுதான் பேரவை கதைப்போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். உடன் சிவம் இருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவருடன்தான் மோட்டாரின் வீடு திரும்பினேன். இன்னும் நாட்டில் என்னென்ன போட்டிகள் நடக்கிறதோ அதிலெல்லாம் பங்குபெற்று வெற்றி வாகைச்சூடுவதென்ற உற்சாகம் இருவரிடத்திலும் இருந்தது. எப்படியாவது எங்கள் அடையாளத்தை மலேசிய இலக்கியத்தில் ஆழப் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டாவது வெற்றியில் வேரூன்றியது.
இதே காலக்கட்டத்தில் ‘காதல்’ எனும் சிற்றிதழுக்குப் ஆசிரியர் ஆனேன். தகுதிக்கு மீறிய பொறுப்பு. உண்மையில் நான் அதுநாள்வரை வாசித்தவற்றின் புரிந்துகொண்டவற்றின் எண்ணிக்கை ஒரு சிற்றிதழுக்கு பொறுப்பேற்கும் அளவுக்கானதல்ல. வெளிப்படையாகச் சொல்வதென்றால் ‘அசலான’ சிந்தனை என ஒன்றுமே இல்லை. ‘காதல்’ இதழுக்கு நான் என்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள தீவிரமாக வாசிக்கத்தொடங்கிய காலக்கட்டத்தில் படைப்பு-படைப்பாளி- பரிசுகள் தொடர்பான மாறுபட்ட சிந்தனைகள் உதித்துக்கொண்டே இருக்கும். க.ந.சு, சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி என தொடங்கி ஜெயமோகன் ‘திண்ணை’ இணைய தளம் மூலம் அறிமுகமாகியிருந்தார். கிளினிக்கில் வேலையைக் கெடுக்கும் அளவுக்கு மருத்துவர் சண்முகசிவாவுடன் நெருக்கம் கூடியிருந்தது. இவர்கள் எல்லாம் எனக்கு வேறொன்றைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், வயதும் போட்டி மனப்பான்மையும் ஆணவமும் ஏதாவது ஓர் இலக்கியப் போட்டிக்கு மூர்க்கமாகக் காத்திருந்தன.
இந்தக் காலக்கட்டத்தில்தான், சிறப்பு பரிசு பெற்ற அ.ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரை’ எனும் நாவலும் முதல் பரிசு பெற்ற சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் எனும் நாவலும் எழுத்தாளர் சங்கம் மூலம் நூலாக்கப்பட்டு வெளியீடு கண்டது. நான் ரெங்கசாமியை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் வாடிய பயிரின் படிமம் ஒன்று மனதுக்குள் தோன்றி மறைந்தது. திலகவதி ஐ.பி.எஸ் நாவல்களை வெளியீடு செய்தார். 2005ல்தான் அவரது ‘கல்மரம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருந்தது. ‘தேராது’ என வாசித்து கிடாசிய நாவல் அது. எனவே திலகவதியின் பேச்சைக் கேட்பதைவிட ரெங்கசாமியின் உரைக்கே காத்திருந்தேன்.
ரெங்கசாமி பேசத்தொடங்கினார். தனது நாவல்களைப் பற்றி வரிசைப்படுத்த நான் வியந்தேன். பேச்சின் ஊடே அந்த வயதுக்கு மட்டுமே இருக்கும் நுட்பமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். எந்த இடத்திலும் மிகை இல்லை. இலக்கியத்தை ஒட்டிய பெரிய உபதேசங்கள் இல்லை. சமூக அக்கறை மட்டுமே மிகுந்திருந்தது. “சிறுகதை எனக்கு சரியா வரல” என்ற அவர் வெளிப்படையான பகிர்வு சட்டென கவர்ந்தது. ‘சமூக அக்கறை காரணமாக எனக்கு இது வருகிறது எனவே இதை செய்கிறேன் ‘ எனும் தொணிதான் பரவியிருந்தது. ரெங்கசாமி பேச்சில் ஒருவரி மட்டும் மனதில் அப்படியே ஒட்டிக்கொண்டது. “போட்டிகள் என்னை எழுத உசுப்புச்சி…ஆனா நான் போட்டிக்குனு எழுதலங்க…”
நிகழ்ச்சி முடிந்ததும் நான் அவரை அணுகி தொலைபேசி எண்ணை அவரது நாவல் பின் அட்டையிலேயே வாங்கி கொண்டேன். அவ்வளவு எளிதில் கடந்து போய்விடக்கூடியவர் அல்ல ரெங்கசாமி எனத்தோன்றியது. வாடிய பயிரல்ல, முற்றிய கதிர் வளைந்திருக்கிறது என்று படிமம் மாறியது. ரெங்கசாமியின் அந்த வாசகம் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்தது. போட்டியால் எழுதுவது ; போட்டிக்காக எழுதுவது என இரண்டுக்குமான பேதங்களை ஆராய்ந்து கொண்டே இருந்தேன்.
– தொடரும்