2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
ரெங்கசாமி சொன்ன வார்த்தை மனதில் ஆழ தைத்திருந்தது. மலேசியாவில் ஒருவன் எழுத எவ்வித புறத்தூண்டுதல்களும் காரணமாய் இல்லாத வரண்ட நிலையில், போட்டி அவன் இயங்க ஒரு நெம்புகோலாக அமைகின்றது. ஆனால், போட்டியில் பங்கெடுக்கும் படைப்பாளன் அதன் பரிசுக்கு மட்டுமே குறியாய் இருந்து படைப்பில் சமரசம் செய்வானேயானால் அவன் ஒரு வணிகன் மட்டுமே. நல்ல மொழியும் சிந்தனையும் கொண்ட பல எழுத்தாளர்கள் போட்டிக்காக பொதுபுத்தியிலுள்ள நன்னெறிகளை போதிப்பதை வாசித்துள்ளேன். ரெங்கசாமியின் நாவல்கள் யாரையோ மகிழ்விக்க எழுதப்பட்டதல்ல. அதில் வாழ்வும் வரலாறும் இணைந்திருந்தன. ஒரு நாவலை எழுதிவிட்டு ஒன்றும் செய்யாமல் பலவருடம் பாதுகாத்து வைக்கும் பக்குவம் அவரின் வயதுக்கு இருந்ததை அவரது அனுபவப் பகிர்வில் அறிய முடிந்தது. எனக்கு அதெல்லாம் இயலாத வயது. எதிலும் அவசரம்.
பல்லி தன் வாலை துண்டிப்பது போல என்னால் எளிதில் எதிலிருந்தும் வெளியேற முடியும் என ஆழமான நம்பிக்கை எனக்குள் உண்டு. வால் துடித்துக்கொண்டே இருக்கும். அது ஒரு பாவனை மட்டுமே. எனக்கு நான் பல்லியா? வாலா? என்ற குழப்பம் எப்போதும் உண்டு. எவ்வளவு மன உளைச்சலிலும் நான் அறிவைக்கொண்டு என்னை கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். அது ஓஷோவிடம் கற்றது. மனதை கவனிப்பாளனாக மாற்றும் கலை. எது ஒன்று கவனிக்கப்படுகிறதோ அது சட்டென தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும். அழுகையின்போது ஒரு நிமிடம் கண்ணாடியைப் பார்த்தால் போதும் அழுகை நின்றுவிடுகிறது. மனம் எதை நினைத்து குழம்புகிறதோ அதை உற்றுப்பார்த்தால் போதும் மனம் அப்போது நினைப்பதை விட்டுவிட்டு வேறொன்றுக்குத் தாவி விடுகிறது. மனதை அடக்க முடியாது. சட்டென இடம் மாற்றலாம்.
தீவிரமாக இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் கடுமையான மன உழைச்சல் ஏற்பட்டது. இலக்கியம் என்பதை ஆணவத்திற்கு உரம் சேர்க்கும் ஒன்றாகவே ஒவ்வொரு இளம் எழுத்தாளர்களும் தொடக்கத்தில் கையில் எடுக்கிறார்கள். ஆனால், இலக்கியத்தை வாசிக்க வாசிக்க அது ஆணவமற்ற மனநிலைக்கே நம்மை எம்பித்தள்ளுகிறது. வாழ்வு எத்தனை விரிந்தது என்றும் எத்தனை சுருங்கியது ஒன்று ஒருசேர நாணயத்தின் இருபக்கங்கள் போல சுழற்றிக்காட்டுகிறது. அதன் ஓயாத சுழற்சி மனதிற்குள் அசூயை உணர்வை உந்திக்கொண்டே இருந்தது.
தெளிவாகச் சொல்வதென்றால், ஒரு பக்கம் போட்டிகளும் பரிசுகளும் மாலைகளும் பொன்னாடைகளும் மேடைகளும் நிரம்பி இருக்கின்ற ஜனரஞ்சக உலகம். அது என் கைக்கு மிக அருகில் இருந்தது. எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனுடன் நல்ல உறவும் நட்பும் இருந்தது. எந்தப் போட்டிக்கு எப்படிக் கதை எழுதினால் முதல் பரிசைத் தட்டிச்செல்லலாம் என்றும் , யார் யாரையெல்லாம் கைக்குள் போட்டு வைத்துக்கொண்டால் காலம் முழுதும் மலேசிய இலக்கியத்தின் பிரநிதியாக பாவனை காட்டலாம் என்றும் , இன்னும் சொல்லப்போனால் மிக எளிதாக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் நட்பு கரத்தை ஆனந்தக் கண்ணீரால் நனைக்கலாம் என்றும் மிகத் தெளிவான பட்டியலே இருந்தது.
மற்றொரு பக்கம் கரடுமுரடானது. அதற்கு யாரையும் சந்திக்கத் தேவையில்லை. நாம் நம்மையே வாசிப்பு, எழுத்து, சிந்தனை என சந்திக்க வேண்டும். உடன்படவும் முரண்படவும் உடைக்கவும் மீள் உருவாக்கம் செய்யவும் பயிற்சி வேண்டும். புறக்கணிப்புக்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த மேடையும், எந்த விருதும் வாழ்நாள் முழுக்க கிடைக்காமல் போகும் வாய்ப்பு பிரகாசமாய் உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அதில் ஆழமான உண்மை இருக்கும். சுய , அசலான சிந்தனை இருக்கும். பொதுபுத்திக்கு ஏற்றதை மட்டும் பேசாமல் எதையும் முழு சுதந்திரமாய் பேசும் ஆற்றல் இருக்கும்.
இரண்டு போட்டிகளுக்குப் பின்னர் நான் எதை தேர்வு செய்வதென்ற நிலையில் இருந்தேன். இள வயதில் கிடைத்திருக்கும் எல்லா அணுகூலங்களையும் பயன்படுத்திக்கொள்வதா? அல்லது எழுத்தில் உண்மைகளைப் பதிப்பதன் மூலம் சுற்றியுள்ளவர்களை தவற விடுவதா என்பது மட்டுமே தேர்வு. ரெங்கசாமி சொன்னது மீண்டும் ஒலித்தது.
“போட்டிக்காக எழுதுவது…” உண்மையில் இலக்கியத்தில் இயங்கத்தொடங்கும் புதிதில் இதுபோன்ற குழப்பங்கள் கொஞ்சம் ஆபத்தானவை. முழுமையாய் எழுதாமல் போகும் சூழலும் ஏற்படலாம். இது குறித்தெல்லாம் கேள்வியே இல்லாதவர்கள்தான் அமைச்சர்கள் கையால் நூல்களை வெளியிட்டு சுயஇன்பம் கண்டுக்கொள்கிறார்கள். அதுவே அவர்கள் வாழ்வின் இலக்காக்கிக் கொள்கிறார்கள்.
சண்முகசிவாவிடம்தான் இவற்றுக்கான பதில் இருக்கும் எனத்தெரியும். கேட்டேன். ” ஒரு பரிசுக்காகத்தான் படைப்பாளன் பேனாவைத் தூக்குகிறான் என்றால், அவன் எவ்வளவு பலவீனமானவன்… நீ பேனாவைத் தூக்க இன்னொருவனின் பணமும் பரிசும் முடிவெடுக்கிறது என்றால் அது என்ன கலை?” என்றார்.
முகத்தில் அறைந்தது போல இருந்தது. வீட்டிற்குச் சென்று குளித்தேன். குளித்துக்கொண்டே இருந்தேன். வெளியில் வந்தபோது முடிவெடுத்தேன். இனி இலக்கியத்துக்கான எந்தப் போட்டியிலும் கலந்துகொள்வதில்லை.
– தொடரும்
கட்டுரை அருமை. நான்காவது பகுதிக்கும் வந்தாச்சு. அ.ரெங்கசாமி இன்னும் வரல. !