2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
‘வல்லினம்’ தொடங்கியப்பின்தான் நான் ரெங்கசாமி அவர்களை முதன்முறையாகத் தொலைப்பேசியில் அழைத்தேன். வல்லினத்தில் அவரது பத்திகள் வர வேண்டும் என்றும் அது அவரது வாழ்வின் அனுபவங்களைச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். உடனே சம்மதித்தார். ‘வல்லினம்’ அச்சு இதழாக வந்த நாள்களில் அவரது பத்திகள் இடம்பெற்றன. முதல் மூன்று பத்திகள் அனுபவங்களைச் சொல்வதாகவும் அடுத்த இரண்டு கொஞ்சம் பிரச்சாரத்தன்மையிலும் அமைந்திருந்தது. வல்லினம் அச்சு இதழ் நிர்க்கவும் இணையத்தில் நான் தொடர்ந்து அவரை எழுதச்சொல்ல சில மனத்தடைகள் இருந்தன. நவீன இலக்கியம் எனக்கு மனிதத்தைப் போதித்துக்கொண்டிருந்தது. அதில் தமிழன், தமிழனல்லாதவன் என்ற வேறுபாடே இல்லை. கலையின் மூலமாகவே மானுட அமைதி சாத்தியம் என இப்போது போலவே அப்போதும் நம்பினேன்.
இலக்கியம் தொகுப்பாக இருக்கும் மனிதக்கூட்டத்துக்குள் ஊடுறுவி தனி ஒருவனின் நியாயங்களைப் பேசுகிறது. புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் கருணை காட்டுகிறது. நியாயம், சரி, தர்மம் போன்ற சொல்லாடல்களின் அர்த்தங்களை ஆழமாகக் கேள்வி எழுப்புகிறது. பின் நவீனத்துவம் குறித்து எனக்கு அறிமுகமான காலத்திலெல்லாம் லட்சியங்களைத் தூண்டும் வாசகங்கள் நெருங்கிவராமல் தள்ளியே நின்றன. ரெங்கசாமி ஒரு லட்சியவாதி.
அவரது படைப்புகள் லட்சியவாததையே பேசுகின்றன. தமிழர் வாழ்வு குறித்தும், அவர்கள் நலன் குறித்தும் ஓயாத கவலை அவர் பேச்சிலும் எழுத்திலும் இருக்கும். என்னால் அவர் ஆளுமையை அறிய முடிந்தது. அவரது சிந்தனையில் தலையிடவோ வாதிடவோ எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அவரது அனுபவத்துக்கு முன் என் வாசிப்பு மிகச்சிறியது என்றே வாலை சுருட்டி வைத்திருந்தேன். ஆனாலும் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பங்கினை மறக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.
2011ஆம் ஆண்டு நானும் சிவாவும் தமிழகம் சென்றிருந்தோம். எங்கள் பயணத்தின் கடைசி நாளில் தமிழினி வசந்தகுமாரைச் சந்தித்தோம். வசந்தகுமார் மீதும் தமிழினி மீதும் எனக்கு மதிப்பு உண்டு. பேசிக்கொண்டிருந்தவர் ரெங்கசாமியை விசாரித்தார். அவரது லங்காட் நதிக்கரைக்குப் பின் இமையத்தியாகம் என்ற நாவலை தமிழினி பதிப்பித்துள்ள விசயத்தைச் சொன்னார். தமிழினி பதிப்பகத்தில் ஒரு நூல் வரும்போது இயல்பாகவே அதற்கு இலக்கியத்தகுதி கிடைத்துவிடும் என கேள்விப்பட்டுள்ளேன். ஒருவகையில் அவர்கள் வெளியீட்டில் வந்த நூல்கள் அதை உறுதி செய்யும் படியே இருந்தன. தமிழகத்தில் பல முன்னணி எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பிக்க மறுக்கும் வசந்தகுமார் ரெங்கசாமியின் நாவலைப் பதிப்பித்து அதை இலவசமாக அவருக்கு அனுப்பியும் வைத்தது நாவல் மேல் வசந்தகுமாருக்கு இருந்த பிடிப்புதான் என புரிந்தது.
நமக்குதான் பொதுவாகவே பக்கத்தில் உள்ளவர்களின் அருமை யாராவது சொன்னால்தானே தெரியும். மலேசியா வந்ததும் அந்த நாவலை வாசித்தேன். ரெங்கசாமியின் மேல் இருந்த மரியாதை கூடிவிட்டிருந்தது. அடுத்த வாரமே அவரைக் காணச் சென்றேன்.
வல்லினத்தில் அ.ரெங்கசாமி எழுதிய பத்திகள் :
http://www.vallinam.com.my/issue2/column4.html
http://vallinam.6te.net/index_dec.htm
http://www.vallinam.com.my/issue5/column7.html
http://www.vallinam.com.my/jan09/column4.html
http://www.vallinam.com.my/issue8/column2.html
– தொடரும்