2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
அ.ரெங்கசாமியைச் சந்தித்தபோதுதான் அவர் புதிதாக ஒரு நூல் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. அப்போது உச்சத்தில் இருந்த ஈழபோர் குறித்த நிகழ்கால சம்பவங்கள் மலேசிய இளைஞர்களுக்குத் தெரிந்திருந்ததே தவிர, அதன் தொடக்கக் கட்ட வரலாறை அறியாமல் இருந்தனர். இளைஞர்கள் படித்து ஓரளவு புரிந்துகொள்ளும் வகையில் சின்னஞ்சிறிய நூல் ஒன்றை கையெழுத்துப்பிரதியாக தானே எழுதி வைத்திருந்தார். நான் அதை நூலாக்கித் தருவதென முடிவெடுத்தேன்.
நூலின் அடிப்படை வேலைகள் முடிந்தபின்பு வழக்கறிஞர் பசுபதி அவர்களைச் சந்தித்தேன். நூலைக் கொடுத்தேன். சில நாள்களில் என்னை அழைத்தவர் செம்பருத்தி பதிப்பகத்திலேயே அந்த நூலை இலவச பதிப்பாகப் போடலாம் என்றார். ‘விடிந்தது ஈழம்’ எனும் தலைப்பில் அந்த 64 பக்க நூல் அச்சானது. ரெங்கசாமி அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தன் நூலை வழக்கறிஞர் பசுபதியே வெளியீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். என் திட்டம் இன்னும் விரிவடையத்தொடங்கியது.
அவ்வருடத்துக்கான கலை இலக்கிய விழாவை வரலாறை முன்வைத்தே நடத்தலாம் என தோன்றியது. ‘விடிந்தது ஈழம்’ புத்தகம் மட்டுமல்லாமல் தமிழினி பதிப்பில் வந்து வெளியீடு காணாமல் இருந்த ‘இமையத்தியாகம்’ நாவலையும் வெளியிட திட்டமிட்டேன். ‘கலை இலக்கிய விழா 3’ 2011ல் வரலாற்றை மீட்டுணர்தல் எனும் தலைப்பின் கீழ் நடந்தது. அதில் ‘இமையத்தியாகம்’ மற்றும் ‘விடிந்தது ஈழம்’ ஆகிய இரு நூல்களும் வெளியீடு கண்டன. இதே நிகழ்வில்தான் முத்தம்மாள் பழனிசாமியும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ‘நாடு விட்டு நாடு’ என்ற அவரின் சுயவரலாற்று நூல் விரிவான பார்வைக்குச் சென்றது. ஏற்கனவே இவர்கள் மலேசியப் புனைவு உலகில் சஞ்சரித்தாலும் இளம் தலைமுறையின் மூலமாக மீண்டும் மறுகண்டெடுப்பு செய்யப்படுவதும் அவர்கள் ஆளுமை/ படைப்பு குறித்து பேசுவதும் அபூர்வமாக நடக்கக் கூடியதே. வல்லினம் அதை செய்தது.
தமிழகத்தில் இவ்வாறு சில ஆளுமைகள் மறுகண்டெடுப்பு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்வதானால், ப.சிங்காரத்தைச் சொல்லலாம். அவரது ‘புயலிலே ஒரு தோணி’ இன்று தமிழினி பதிப்பகம் மூலம் பரந்த வாசிப்புக்குச் செல்ல ஒரு படைப்பு குறித்த அடுத்தடுத்த தலைமுறையின் உரையாடலும் விவாதங்களுமே வழிவகுக்கும். மலேசியாவில் பிறர் படைப்புகள் குறித்து பேசுபவர்கள் குறைவு. குறிப்பாக மலேசியாவின் மூத்தப்படைப்பாளிகளின் ஆக்கங்கள் இளம் தலைமுறையாலும் , இளம் தலைமுறையினரின் படைப்புகள் மூத்தவர்களாலும் எவ்வித விவாதம்/ விமர்சனம் இன்றியே மௌனம் காக்கப்படுகிறது. முதலில் இங்கு மலேசியப் படைப்புகளை ஒட்டிய வாசிப்பு குறைவு.
‘தமிழ்நாட்டவிட என்னத்த பெரிசா எழுதிடப்போறாங்க’ என்ற மனநிலையிலேயே இங்கு பாதி எழுத்தாளர்களும் வாசகர்களும் உள்ளனர். சினிமாவிலும் இதே நிலைதான். ‘மலேசிய படமெல்லாம் சும்மா’ என எதையும் பார்க்காமல் புறக்கணித்துவிட்டு படுகேவலமான தமிழ்நாட்டு திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கும் கூட்டமும் இங்கு உண்டு. நான் இங்கு மலேசியப்படங்கள் தரமானவை என சொல்லவரவில்லை. அதைவிட ஆபாசமும், வன்மமும் கொண்ட தமிழ்நாட்டுப் படங்களை உங்களால் பார்க்க முடிகிறபோது, ஏன் மலேசிய படங்களைப் பார்க்காமலேயே புறக்கணிக்கவும் விமர்சிக்கவும் வேண்டும் என்பதுதான் கேள்வி.
குப்பை என்றாலே எல்லாமே குப்பைதான். அது என்ன அந்நிய நாட்டு குப்பையை மட்டும் உங்கள் உணவுத்தட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்?
தொடரும்
சினிமா புறக்கணிப்பு மற்றும் இலக்கிய வாசிப்பு என்பது தனிநபர் கலாரசனை சம்பந்தப்பட்டது. ஏன் அதைக் கட்டிக்கொண்டீர்கள்.? இதுவும் குப்பைதான், இதை ஏன் இஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கூப்பாடு தேவையற்ற வினா.! நான் ரசித்தேன். எனக்குப் பிடித்துள்ளது, அதை நீங்களும் வாசித்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற நிபந்தனையே தவறுதான்.