மூன்றாவது பாகத்தில் ஒரு தகவலைத் தவறாகக் கொடுத்துவிட்டேன். திலகவதி ஐ.பி.எஸ் மூலம் மீண்டும் வெளியீடு கண்ட நாவல் ‘புதியதோர் உலகம்’. நான் தவறாக ‘லங்காட் நதிக்கரை’ என எழுதியிருந்தேன். தவறுக்கு மன்னிக்கவும்.
***
இதற்கிடையில் ரங்கசாமியின் ஆளுமையை எவ்வாறு பயன்படுத்துவது , இன்னும் அவரின் உண்மையான சமூகப் பணியைப் பொதுவில் அறிய எப்படிப் பகர்வது என்ற குழப்பம் இருந்தது. அதற்கான வாய்ப்பை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன். வல்லினம் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் லுனாஸில் சுவாமி பிரம்மானந்தாவை மையமாக வைத்து இயங்கும் ‘நவீன கள’ நண்பர்களும் தைப்பிங்கில் சந்திக்கலாம் என 2010 நவம்பரில் முடிவெடுத்து பயணமானோம். நான் அந்த நிகழ்வில் ரெங்கசாமி அவர்களையும் பேச வைக்கலாம் என விரும்பினேன். எங்களுடன் வர அனுமதி கேட்டேன்.
கோலாலம்பூரில் இருந்து 4 மணி நேர பயணம். முற்றிலும் இளைஞர் கூட்டம். எந்த நேரமும் குதூகலம் ததும்பும் பேச்சுகள். வருவாரா என சந்தேகமாகவே இருந்தது. மறுநாள் எங்களுடன் வருவதாகச் சம்மதம் கொடுத்தார். இரண்டு காரில் எங்கள் தைப்பிங் பயணம் தொடங்கியது. பல்வேறு குதூகல நடவடிக்கைகளுடன் இலக்கியமும் பேசினோம். இருநாள் தங்குவதென முடிவானதில் இரண்டாவது நாள் காலையில் தைப்பிங்கில் இருந்த முருகன் ஆலயத்தில் ரெங்கசாமியைப் பேச வைத்தோம். பேசினார். விரிவாகப் பேசினார். அவரது ஒவ்வொரு நாவல் உருவான பின்னணியை விளக்கிக் கூறினார். புதிதாக ரெங்கசாமியை அறிந்தவர்கள் அவர் ஆளுமையைக் கண்டு வியந்தனர். எனக்கும் மகிழ்ச்சி.
அப்போது அவருக்கு 79 வயது இருக்கும். எல்லா அமர்வுகளிலும் ஆர்வமாகக் கலந்துகொண்டார். எங்கள் குதூகலங்களை இரசித்தார். உணவில் அதிகக் கட்டுப்பாடு. அவர் துணைவியாரும் அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து அவர் நலம் விசாரித்தார். முதுமை காதல்தான் எத்தனை அழகானது…
ரெங்கசாமி போன்ற எழுத்தாளர்கள் வாழ்வின் அனுபவம் மட்டும் அல்லாமல் சமூக வரலாற்றையும் நுணுக்கமாகப் பேசக்கூடியவர்கள். சமூகத்தை நுட்பமாக கவனிக்கக்கூடியவர்கள் . அதன் மாற்றத்துக்குச் செயல்படக்கூடியவர்கள். எஸ்.பி.எம் பாடத்தில் தமிழ் இலக்கியம் எடுப்பதில் சிக்கல் என தெரிந்தவுடன் 79ஆவது வயதிலும் வீடு வீடாகச் சென்று தமிழ்ப்பிள்ளைகளை தமிழ் இலக்கியம் எடுத்து கற்க ஊக்குவித்தவர். அவர் செயல்பாடுகளை கவனமாக அவதானிக்கும் நான் பல தருணங்களில் வெட்கியுள்ளேன். எழுத்துடன் முடித்துக்கொள்ளும் அறச்சீற்றங்கள் பல சமயம் அரைச்சீற்றங்களாகிவிடும் கலைஞர்கள் மத்தியில் ரெங்கசாமி அமைதியாகத் தன் பணிகளைச் செய்கிறார். ‘தமிழ், இனம்’ என பேசும் போலிகளுக்கு மத்தியில் ரெங்கசாமி உண்மையான சமூகப்பணியாளராகவே என் முன் நின்றார்.
ரெங்கசாமியின் உரைக்குப் பின்னர் , அவ்வப்போதைய எனது சில விளக்கங்களுக்குப் பின்னர் சுவாமி பிரம்மானந்தா மெதுவாக என்னிடம் ஒன்றைக் கூறினார். அவர் பேச்சு தாளமுடியாத மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தது. ரெங்கசாமியை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது வீண் போகவில்லை என நிம்மதியடைந்தேன்.
தொடரும்