எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 8

தைப்பிங் சந்திப்பின் வழி வாழ்வை இன்னும் கற்றுக்கொண்டேன் என்றுதான் கூற வேண்டும். வல்லினம் குழுவுக்குள் சின்ன சின்ன பிளவுகள் ஏற்பட்டதும் அங்குதான்.

கடைசிநாள் இரவில் அனைவரும், ஒரு சீனர் கடையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த நிகழ்வில் நான் அழைக்காமலேயே வந்திருந்த நண்பனின் நண்பன் ஏற்பாடுகளில் உள்ள குறைகள் குறித்து பேசத்தொடங்கினார். அதில் ஒரு நையாண்டி இருந்தது. உண்மையில் தங்கியிருந்த பங்களாவில் சில குறைகள் இருக்கவே செய்தது. குளிக்க நீர் வர தாமதமானது. முதல் சந்திப்பு என்பதால் கேளிக்கைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிவிட்டிருந்தோம். யாரையும் கட்டுப்படுத்தும் திறனும் என்னிடம் இல்லாமல் இருந்தது. மகிழ்ச்சியான ஒரு சூழலில் யாரையும் இலக்கிய உரையாடல் என்ற பெயரில் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

ஆனால், வல்லினம் உருவான காலம் தொட்டே அதன் அச்சு இதழுக்காக , நிகழ்வுகளுக்காக, நூல் பதிப்புக்காக யார் யாரையோ போய் சந்தித்து , நேரத்தை இழந்து, எவ்வித பொருளாதார தேடலும் இல்லாமல் சொர்ப்பமான  நண்பர்களின் துணையுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தபோதெல்லாம் எங்கோ ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கூலிக்கு மாரடித்துக்கொண்டிருந்த  இருந்த நீயெல்லாம் என்னிடம் என்னடா கருத்துச் சொல்லுவது என சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை எடுத்து முகத்தில் அடிக்க வேண்டும் போல இருந்தது. கொஞ்சம் பேச்சு தொடர்ந்திருந்தாலும் அன்று அந்த நண்பனின் நண்பன் முகத்தில் கோடு விழுந்திருக்கும் எனும் நிலையில் நண்பரும் அவருடன் இணைந்து குறைகளைக் கூற உடைந்தேன். வல்லினம் உருவாகி நான்கு ஆண்டுகளில் எத்தனையோ செயல்பாடுகளில் ‘நாமெல்லாம் வல்லினக் குழுதான்’ என இருக்கும் சொல்லாடல், அதன் சின்னஞ்சிறிய சறுக்கலில் ‘நீ’ ஆவதைக் கண்டேன். நான் தனியனாக நின்றேன். வெற்றிகளில் ‘நாம்’ என்றும் சறுக்கல்களில் ‘நீ’ என்றும் மாறும் பதங்கள் எத்தனை சுயநலமானவை எனச் சுட்டது. அந்த இரவு இன்று நினைத்தாலும் சுடுகிறது.

எதையும் நிதானமாக்கி பேசும் பக்குவம் அன்று இல்லை. கோலாலம்பூர் வந்ததும் நண்பரை அழைத்து அவர் பேசிய சொற்களைக் கோடிட்டுக் காட்டினேன். “பேசிட்டேன்…இப்ப என்ன செய்யுறது” எனும் தொணியில் சென்றது. செய்வதற்கு ஒன்றும் இல்லைதான். மனம் இறுகிப்போனது. யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது. சண்முகசிவாவை வீட்டில் சென்று கண்டேன். வழக்கம் போல சிரித்தார். “வல்லினம் மூலமா நவீன் மட்டும் வெளிய தெரியுறான் என்ற பொறாமைய நான் பலர்கிட்ட பார்க்கிறேன்.  தனிப்பட்ட முறையில் அவர்கள் என்னிடம் சொல்லும்போது நான் அமைதியா கேட்டுக்குவேன். அதன் உள்ளே பொறாமை கொதிப்பதை என்னால புரிஞ்சிக்க முடியும். இப்படி கொட்டியாவது அதை தீர்த்துக்கிடட்டும் என விட்டுடுவேன். அது மனிதனின் இயல்பான குணம். நீ ரொம்ப வேகமா வளந்துக்கிட்டு போற. நான் சொல்லுறத நம்பு… உன் அம்மா அப்பா  அப்புறம் என்னைத்தவிர அந்த வளர்ச்சிய அணு அணுவா வேறு யாரும் ரசிப்பாங்களான்னு எனக்குத் தெரியல. அப்படி ரசிக்கும் நண்பர்கள் உனக்கு இப்ப இருக்காங்களான்னும் எனக்கு தெரியல. ஆனா அப்படியான நண்பர்கள் உனக்கு கிடைப்பாங்க. அதுவரை பொறுமையா இரு. உன்னை அடையாளப்படுத்துவதை குறைச்சிக்கோ!” (இதை சண்முகசிவா சொன்னபோது 2010 டிசம்பர். அன்று நான் அவருக்குப் பதில் ஒன்றும் கூறவில்லை. அதற்குப்பின்பான நான்கு ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடியான காலக்கட்டங்களில் உடன்வந்து/ இணைந்திருக்கின்ற  சுயநலமற்ற நண்பர்களைப் பெற்றே இருக்கிறேன் என இன்று உறுதியாகக் கூற முடியும்.)

வல்லினம் தொடங்கப்பட்ட நாள்களிலும் நான் இதுகுறித்து அதிகம் யோசித்ததுண்டு. புதுமையைச் செய்யக் கிளம்பும் பல இயக்கங்கள் தடம் தெரியாமல் அழிந்த காரணம் பொறாமைதான். பொறாமை ஒரு கொடிய நோய். அது நம்மை இயல்பாக இருக்கவிடாது. வல்லினம் போன்ற லாபநோக்கம் இல்லாமல் இயங்கும் இளைஞர் குழு உருவாவது சிரமம். Hierarchy முறை மூலம் அது சிதையக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். அதிகாரம் எந்த ரூபத்தில் எல்லாம் வரலாம் என மட்டுமே என்னால் யோசிக்க முடிந்தது. நிகழ்வுகளில் முன்னே சென்று அமர்ந்து முதன்மை படுத்துவது, குழு முறையில் அல்லாமல் தனிப்பட்ட நூல் வெளியீடுகளை இயக்கத்தின் பலம் கொண்டு நடத்துவது, இயக்கம் நடத்தும் ஊடகங்களில் தன் படைப்புகளை முதன்மைப்படுத்துவது, பணம் சார்ந்த விடயங்களில் ரகசியம் காப்பது இப்படி பல காரணங்களுக்காக பல இயங்கள் சிதைந்துள்ளன.  இதுவெல்லாம் ‘எனக்கு அதிகாரம் உண்டு’ என்பதை காட்டும் வெவ்வேறு செயல்பாடுகள்தான்.

நான் தொடக்கம் முதலே இதிலெல்லாம் கவனமாக இருந்தே செயல்பட்டேன். குறிப்பாக வல்லினம் மூலம் பெற்ற நட்பைக்கொண்டு என் தனி ஒருவனின் பணப்பையை நிரப்பும் நூல் வெளியீடுகளைச் செய்வதில்லை என்பதில் உறுதியாகவே இருந்தேன். (மன்னிக்கவும்! இந்த இடத்தில் என்னால் இராஜேந்திரனை உதாரணம் காட்டாமல் இருக்க முடியவில்லை. எழுத்தாளர் சங்கம் மூலம் தொடர்புகளைப் பெற்று , சங்கம் வெளியிடும் நூல்களை எளிமையாக நடத்தி, ஆனால் தனது நூலை மட்டும் நாடு முழுக்க வெளியிட்டு பணம் பண்ணும் வணிக புத்தியே ஒரு இயக்கத்தை முன்னின்று நடத்துபவருக்கு இருக்கக் கூடாதது) இவ்வளவு கட்டுப்பாடுகளை எனக்குள் விதித்திருந்தும் , இன்னும் ஏதோ ஒன்று சிலர் கண்களைத் துருத்துவது சோர்வைக் கொடுத்தது. இன்னும் என் அடையாளத்தை எப்படி அழித்துக்கொள்வது என்றும் புரியாமல் இருந்தேன்.

அன்று இரவு மீண்டும் சண்முகசிவா அழைத்தார். “நீ கொஞ்ச நாளைக்கு யாரையும் சந்திக்காம இரேன்…” என்றார். அது என்னை அமைதியாக்கும் என்பதும் வல்லினத்தில் சிக்கல் வராது என்பதும் அவர் நம்பிக்கை. “இருக்கேன் அப்படினா ஒரு வீடியோ காமிரா வாங்கி தாங்க என்றேன்…”. வரம் கொடுக்கும் சாமியின் தலையில் கைவைப்பது நமது பழக்கம் அல்லாவா? “ஏன்” என்றார்.

“ரெங்கசாமி தைப்பிங்கில் பேசிய விதம் ரொம்ப நல்லா இருந்துச்சி… மீண்டும் அவர பேச வச்சி ஆவணப்படுத்தப்போறேன்… அதுக்கு கூட்டம்வேண்டாம். சிவா பெரியண்ணன் இருக்காரு. ரெண்டு பேரு செஞ்சிடுவோம்…” சண்முகசிவா சிரித்தார். “செயல்படாம உன்னால வாழ முடியாது… நீ சோர்வா இருந்தா என்னாலயும் பார்க்க முடியாது… எவ்வளவு வேணும்” என்றார்.

“1500 வெள்ளி…”

உண்மையில் ஆளுமைகளை ஆவணப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு பெரும் மனச்சோர்விலிருந்து துளிர்த்ததுதான். மனச்சோர்வினை நான் மௌனித்தோ, தனிமைபடுத்தியோ எதிர்க்கொள்வதில்லை. இன்னும் தீவிரமாக இயங்குவதே சோர்வை நீக்கும் ஆயுதம்.

– தொடரும்

(Visited 73 times, 1 visits today)

One thought on “எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 8

  1. தொடர்ந்து எழுத்தும் வாழ்வும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டே வருகிறேன். என் மனதில் ஐயா ரெங்காசாமியும் உங்களையும் கடந்து ஐயா மருத்துவர் சண்முகசிவா முன்னிலையில் வந்து நிற்கிறார். உங்களை சுற்றி யார் யார் இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இருக்க வேண்டியவர் உங்கள் பக்கத்திலேயே இருந்திருக்கிறார் ஒரு நல்ல வழிகாட்டியாக. இந்த கட்டுரைகளைப் படிக்கும்போது எனக்கு ஐயா மருத்துவர் சண்முகசிவா மீதான மரியாதை மேலும் கூடுகிறது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *