சுவாமி பிரமானந்தா தன் முடிவை பின்னர் பொதுவில் சொன்னார். ஒவ்வொரு வருடமும் சுவாமியின் தியான ஆசிரமம் மூலம் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதை இம்முறை இலக்கியத்துக்காக அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படும் என்பதுதான் அது. ரெங்கசாமியின் முகத்தில் பெரிதாக சலனம் இல்லை. அவை முகத்தின் அனுபவம் சொல்லும் கோடுகளிலும் மடிப்புகளிலும் மறைந்து கிடந்தது.
குறிப்பிட்ட நாளில் நானும் விருது வழங்கும் நிகழ்வுக்கு நண்பர்களுடன் சென்றேன். ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ எனும் நாவல் அந்த நிகழ்வில் வெளியீடு கண்டது. அந்த நாவல் குறித்து பேசும் பொறுப்பு சுவாமியால் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. நான் அந்நாவல் குறித்து விரிவாகவே பேசினேன். அதன் எழுத்து வடிவம்: http://vallinam.com.my/navin/?p=706
விருதுகள் ஒரு கலைஞனை ஊக்கமூட்டுபவைதான். ஆனால் யார்? எதற்கு? எதனால்? ஒரு விருதை வழங்குகிறார்கள் என்பதே முக்கியம். விருதுகள் பொதுவாக நிறுவனமயமாக்கப் பட்டுள்ளன.
மலேசியாவில் எனக்குத் தெரிந்து தமிழ் இயக்கங்கள் எதுவும் நேர்மையான முறையில் அல்லது தெளிவான முறையில் விருதுகள் வழங்குவதாக நினைவில் இல்லை. விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பும் கூடுகிறது. சில சமயம் தொடர்ச்சியாக யார் பெருகிறார்கள் என்பதும் அதன் தகுதியை அதிகரிக்கிறது.
சில விருதுகள் தேவையா இல்லையா என்று தீர்மாணிக்கவே முடிவதில்லை. உதாரணமாக சாகித்திய அகாதமி விருதை சொல்லலாம். 60களில் மு.வ , அகிலன் எனக்கொடுத்தார்கள். 90களில் லா. ச. ராமாமிர்தம், சு. சமுத்திரம், கி. ராஜநாராயணன் என பல நல்ல படைப்பாளர்களுக்குக் கிடைத்துள்ளது. 2003- 2006 வரை வைரமுத்து, திலகவதி, மு.மேத்தா என ஒரு வருத்தமான பட்டியல். 2010 தொடங்கி நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், ஜோ டி குரூஸ் என மீண்டும் உற்சாகமான பட்டியல். இப்படி ஒவ்வொரு காலத்திலும் ஆழமான வாசக பின்புலம் உள்ளவர்கள் நடுவர் குழுவில் இருக்கும் போது பட்டியலிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுவாமி நல்ல ரசிகர், வாசகர் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் அதற்குமுன் விருது பெற்றவர்கள் முக்கியமான இசைக்கலைஞர்கள் உட்பட பெரிய ஆளுமைகளே. 5 பவுன் தங்க சங்கிலியுடன் ரெங்கசாமி விருது பெற்றார். இலக்கியத்துக்கு ரெங்கசாமிக்கு விருது வழங்கப்பட்டபோது பெரும் திருப்தி. ரெங்கசாமியால் விருதும் விருதால் ரெங்கசாமியும் மதிப்படைந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
அதுதான் அ.ரெங்கசாமி அவர்களுக்குக் கிடைத்த முதல் விருது. அப்போது அவருக்கு வயது 80-ஜை நெருங்குகிறது.
சுவாமி மிக நேர்த்தியாக விருது நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். சண்முகசிவாவிடமும் சுவாமியிடமும் பேசும்போது பல சமயங்களில் ஒரு குழப்பம் வரும். சண்முகசிவா ஆன்மிகமும் சுவாமி இலக்கியமும் பேசுவார்கள். இருவர் பேச்சுக்கு நடுவிலும் நுட்பமாக இழையோடி இருப்பது பேரன்பாக இருக்கும்.
– தொடரும்
ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கின்றபோது, நீங்கள் இன்ன படத்தில் நடித்ததிற்கு உங்களுக்கு இன்னன்ன விருதுகள் கிடைத்துள்ளன. எண்பதுகளில் கொடிக்கட்டி பறந்தீர்கள். அந்த விருதுகளின் முன் நில்லுங்கள் நான் உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என்று நிருபர் சொல்ல, அதற்கு அந்த நடிகை, தோ அங்கே இருக்கு. புகைப்படம் எடுத்துவிட்டு, வேண்டுமானால் கூடவே எடுத்துச்செல்லுங்கள் அவைகளை, என்றாராம். விருதுகள் என்பது, தனியொரு இயக்கம் வெற்றிபெறுகிறது என்பதனைப் பறைசாற்றுவதற்காகவே கொடுக்கப்படும் சான்று. மற்றபடி தனிநபருக்கு எந்த அளவிற்கு அது உதவும் அல்லது உதவிவருகிறது என்பது கேள்விக்குறியே..