எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 10

00002.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

அ.ரெங்கசாமியின் வாழ்வை அவர் வாய் வழியாகவே ஆவணப்படுத்தும் நடவடிக்கைக்காக முதன் முறையாக சிவாவுடன் பந்திங் போன அனுபவம் இனிமையானது. சில தொழில்நுட்ப கோளாறினால், அந்த ஆவணப்படத்தை பயன்படுத்த முடியாமல் போயிருந்தாலும் முதல் அனுபவம் என்பதால் ஆர்வமாகவே இருந்தது. கூடுதலாக எங்களுடன் சிங்கை இளங்கோவனும் வந்திருந்தார்.

சிங்கை இளங்கோவன் மாற்று வரலாறுகளை ஆழமாக ஆராய்பவர். அவரும் ரெங்கசாமியும் மேற்கொண்ட உரையாடல் இரசிக்கத்தக்கதாய் இருந்தது. இளங்கோவன், ரெங்கசாமியை அதிகம் இரசித்து உரையாடினார். ஆவணப்படம் முடிவுற்றதும் அவர் சொன்ன / வாழ்ந்த இடங்களைப் பார்க்கப் புறப்பட்டோம். தோட்டங்களில் புகுந்தோம். அவர் அனுபவத்தில் சொன்ன கோயில்களை நேரில் கண்டோம். ஒரு சுவாரியமான அனுபவத்தில் பங்குபெற்றுள்ளது என்பதைத்தவிர அந்தக்கோயிலில் தனிச்சிறப்பு எதுவும் இல்லை.

அனுபவத்துடன் உடன் வந்த எளிய ஒன்று எப்படியோ வரலாற்றில் ஒரு காதாபாத்திரமாக மாறிவிடுகிறது. சாதாரண கல்லில் செதுக்கப்படும் எழுத்து பல ஆண்டுகள் கழித்து ,  வரலாற்று பொக்கிஷமாக மாறும் அதிசயம் போல. ஓர் ஆளுமை விளையாடிய, அடிவாங்கிய, குளித்த, படுத்துறங்கிய ஒவ்வொன்றும் பின்னர் காட்சிப்பொருளாகிவிடுகிறது. வரலாற்றில் தோய்ந்த ஒவ்வொரு அசைவும் வருங்காலத்தில் ஓர் உயிருள்ள கனவாகிவிடுகிறது. ரெங்கசாமியின் வாழ்வில் புகுந்துவிட்ட மண்சாலை கூட அவ்வாறானதொரு உணர்வைதான் கொடுத்தது.

புகைப்படங்கள் எடுத்தப்பின்னர் ரெங்கசாமி தனது உறவினர் வைத்துள்ள கள் கடையைச் சுட்டிக்காட்டினார். அவருக்குக் கள் அருந்தும் பழக்கம் இல்லை. ஆனால் அழைத்ததும் உடன் வந்தார். நான் கம்பத்தில் இருந்தபோது கள் அருந்தியதுண்டு. ஒரு மரத்துக்கள் குறைவான அளவில் கிடைத்தாலும் புளிக்கும். கொஞ்சமாய் இனிப்பிருக்கும். கோலாலம்பூருக்கு வந்ததிலிருந்து அது குறித்து யோசித்ததில்லை. ஆனால் பந்திங் கள்ளுக்கு பேர் போன இடம் என்பதால் அமர்ந்தோம்.

அவ்விடத்தை இன்றும் மறக்க முடியாது. விஸ்தாரமான பகுதி. ஆங்காங்கு மரங்கள். மரங்களுக்குக் கீழ் மேசைகள். கள் அருந்த ஏகாந்தமான இடம். ஆனால், அது ஒரு மரத்துக்கள் இல்லை என சுவையில் புரிந்தது. இருந்தாலும் கொஞ்சம் குடித்தேன். மற்றபடி எனக்கு விருப்பமான உடும்பிறைச்சியைக் காலி செய்தேன். அந்த மாலைவேளையில் வெட்டவெளியில் கள்ளின் மிதமான போதையுடன் இளங்கோவன், ரெங்கசாமி போன்ற ஆளுமைகளுடன் அமர்ந்து இலக்கியம் பேசிய கணம் மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

ஆனால், ரெங்கசாமி போன்ற ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கும் ஒருவர் எவ்வித மனத்தடைகளும் இல்லாமல் , வயது பேதம் பாராமல் உடனிருந்து உரையாடும் பக்குவம் ஆச்சரியமானது!

– தொடரும்

(Visited 47 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *