2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
ரெங்கசாமி அவர்களை மீண்டும் ஆவணப்படத்துக்காகப் பதிவு செய்யலாம் என முடிவானது. இம்முறை சிவா பெரியண்ணன் கொஞ்சம் யோசித்தே திட்டமிட்டார். “செம்பருத்தியில் பணியாற்றும் பிரசன்னாவின் உதவியை நாடினால் என்ன?” என்றுக் கேட்டார்.
பிரசன்னா தெளிவானவர். வேலைகள் நேர்த்தி. ஈழ இளைஞரான அவருக்கு தனித்த அரசியல் பார்வை இருந்தது. அரசியல் பார்வை இல்லாமல் கூலிக்காக வேலை செய்பவர்களிடம் இணைந்து செயல்படுவது சிரமம். அவர்களுக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியாது. கலை, இலக்கிய விழாவில் வெளியீடு காணப்போகும் ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் பிரசன்னாவின் கைவண்ணம்தான். இந்தச் சிரமமான பணியைச் செய்தவருக்கு அப்போது தருவதற்கு என்னிடம் பணம் இல்லை. அவரும் அதைப்பற்றி ஒருவார்த்தைக் கூட கேட்டுக்கொள்ளாமல் சண்முகசிவாவினுடைய ஆவணப்படத்தையும் நேர்த்தியாகப் பதிவு செய்தார். கடைசியில் அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க அவசரமாக 300 ரிங்கிட் கொடுத்து வழியனுப்பி வைத்தேன். அதையும் முதலில் வாங்க மறுத்தார். வாங்குவதற்கு மனமில்லாத நண்பர்களும் கொடுப்பதற்குப் பணமில்லாத சூழலையும் இயற்கை தேவை கருதி எப்படியோ இணைத்துவிடுகிறது.
இரண்டாவது முறை ரெங்கசாமியை நேர்காணல் செய்தபோதுதான் அவர் தன் வாழ்வை எழுத்தாக மாற்றினால் என்ன என்ற கேள்வியை மீண்டும் முன்வைத்தேன். அப்போது அவருக்கும் அந்தத்திட்டம் இருந்தது. நூல் எப்படி வரவேண்டும் என சில முன் திட்டங்களைக் கூறினேன். நாவல் வடிவில் செல்லக்கூடிய சுயவரலாறு ஒரு காலகட்டத்தின் சமூக வரலாறையும் விளக்கவேண்டும் என்றேன். ரெங்கசாமிக்கு எல்லாம் புரிந்தது. தான் எழுதுவதாகக் கூறினார். அச்சு செலவுகள் பற்றி விசாரித்தார். வல்லினம் பதிப்பிக்கும் என்றேன்.
அவருக்கு அதில் குழப்பம் இருந்திருக்க வேண்டும். அவர் சுயவரலாறு உருபெற நான் காட்டிய தீவிரத்தில் ஒருநாள் அமரவைத்து, “முன்னமே எல்லாத்தையும் பேசி முடிவு செஞ்சிக்குவோம்” என்றார். நான் “என்ன?” என்பதுபோல பார்த்தேன். “இந்த நூலுக்கு நான் எவ்வளவு பணம் தரணும்?” என்றார். நீங்கள் பணம் தர வேண்டாம். “நாங்கள் உங்களுக்குப் பணம் கொடுப்போம்” என்றேன். அவருக்கு மேலும் குழம்பியிருக்க வேண்டும். “எல்லா செலவுகளையும் நீங்களே ஏத்துக்குவீங்களா?” என்றார். “ஒரு பதிப்பகத்தின் வேலை செலவை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல… விற்ற நூலுக்கு ராயல்டி தருவதும்தான் ” என்றேன். அவருக்கு மகிழ்ச்சி. தன்வாழ்நாளில் நிச்சயம் எழுத்துக்காக ராயல்டி வாங்கியிருக்கவே மாட்டார்.
ரெங்கசாமி மட்டுமல்ல, நமது நாட்டில் காலா காலமாக ராயல்டி கிடைக்காமல் ஏமாறும் பல எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எழுத்து எப்படி வணிகமாக்கப்படுகிறது என்பது புரிவதில்லை. இன்னும் சில எழுத்தாளர்கள், “நான் பணத்துக்கு எழுதல” என கௌரவமாகச் சொல்வதுண்டு. முற்றிலும் உண்மை. ஆனால், எழுத்து என்பது தனிநபர் சார்ந்த விடயம். ஓர் எழுத்தாளர் ஒன்றை எழுத/ அல்லது எழுதாமல் இருக்க பொருளாதாரம் சார்ந்த புறக்காரணிகள்தான் தடை என்றால் அவன் ஒரு வணிகன் மட்டுமே. எழுத்து உருவாக பணம் காரணமாக இருக்கக் கூடாது. ஆனால் அதன் பின் அவ்வெழுத்து நூலாகத்தொகுக்கப்பட்டு வெளியீடு காணும்போது எழுத்து அங்கு வணிக பொருளாக்கப்படுகிறது.
எழுத்தாளர் சங்கம் போன்ற இயக்கங்கள் பலகாலமாகச் செய்துவந்த சுரண்டல் இதுதான். தமிழையும் இலக்கியத்தையும் வளர்க்கிறோம் என்ற கோஷத்தில் அத்தனை கண்களிலும் புகையை விட்டுவிடுகிறார்கள். எத்தனை நூல் அடிக்கப்பட்டு வெளியீடு கண்டு அதன் தொகை எங்கு சென்று சேர்ந்தது என்பது ஒரு புறம் இருக்க, அந்நூலை எழுதிய படைப்பாளிக்கு உரிய ராயல்டி தொகையைத்தராமல் இருட்டடிப்பு செய்து வந்தனர். இதற்கு அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் சொல்லும் காரணம் எளிமையானது. “கொஞ்ச நூல்கள்தான் விற்கின்றன . அதில் வரும் பணமும் கொஞ்சம். அதுக்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?”
இந்த இடத்தில் நாமும் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கலாம். நீங்கள் ஒரு வணிகம் செய்கிறீர்கள். உங்களிடம் ஒருவன் பொருள் வாங்கி , அது விலை மலிவானதாக இருந்து, அதைக் கொடுக்காமல் போனால் சொற்பப்பணம் என ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது நீங்கள் கடையில் ஒரு பொருள் வாங்கி பணம் கொடுத்து மீதப்பணம் சொற்பம் என்பதால் கடைக்காரன் தராமல் போனால் விட்டுவிடுவீர்களா? வணிகம் என வரும்போது அங்கே நேர்மை முக்கியம். நூலை அச்சடித்து எழுத்தாளர் சங்கம் இலவசமாகக் கொடுத்தால் நாம் கேட்க ஒன்றும் இல்லை. ஆனால், எப்போது வெளியீடு என விற்பனை செய்கிறதோ அது நேர்மையாக நடைப்பெற வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம். என்ன… அந்த விருப்பத்தை கொஞ்சம் குரலை உயர்த்தி கடந்த ஆண்டில் சொல்லும்படி ஆகிவிட்டது.
இன்னொரு பக்கம் பேராசை கொண்ட எழுத்தாளர்களாலும் நூல்களை பொதுவெளியில் பரப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் , “பிள்ளை கல்யாணம் அதான் புக்கு போடுறேன்” எனும் ரீதியில் பேசுவதுண்டு. அவர்கள் நோக்கம் இலக்கியமல்ல. அவர்களிடம் சில செல்வந்தர்களின் / அரசியல்வாதிகளின் தொடர்பு உண்டு. அவர்களிடம் உள்ள பணம் இவர்கள் பாக்கெட்டு வர எளிதான ஒரு வழி தேவை. உடனே ஒரு நூலைத் தொகுத்துவிடுவார்கள். 64 பக்கங்கள் கொண்ட நூல் 1000 பிரதிகள் அச்சடித்தால் அதிக பட்சம் ஒரு நூல் 1.80 ஐ- தாண்டாது. ஆனால் இந்த நூல் மேடையில் 20 வெள்ளி தொடங்கி நூறு, ஆயிரம் விலை போகும். பணக்காரர்களும் மேடையில் பொன்னாடையெல்லாம் போர்த்தப்பட்டு குஷிபடுத்தப்படுவார்கள். இலக்கியம் அறியாத அரசியல் தலைவர்கள் ஆஹா ஓஹோ என நூலைப் பாராட்டுவார்கள். மறுநாள் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் நூலைப்பாராட்டி பேசிய அரசியல் பிரமுகரின் படமும் பக்கத்தில் குஜாலாக நிர்க்கும் எழுத்தாளர் படமும் வரும். முடிந்தது.
ஓர் இலக்கிய சாகசம் இந்நாட்டில் நடந்து முடிந்திருக்கும். அதன்பின்னர் அந்நூல் குறித்து யாரும் பேச மாட்டார்கள். மலேசிய இலக்கிய வரலாற்றில் அந்நூல் இடம்பிடித்திருக்கும். அதன் பிறகு அவர்கள் யாரிடம் நட்பு வைத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து இன்னபிற சலுகைகள் கிடைக்கும். பத்திரிகையாளர்களிடம் நட்பு வைத்துக்கொண்டால் , வண்ணப்படங்களுடன் முதல் பக்கத்தில் பிரசுரமாகி நாட்டில் அவர் முன்னணி எழுத்தாளராக வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளிடம் நட்பு வைத்துக்கொண்டால் , இன்னபிற ஊர்களிலும் நூலை வெளியீடு செய்து அதற்கும் வசூல் செய்யும் பாக்கியம் வாய்க்கும். எழுத்தாளர் சங்க தலைவரிடம் நட்பு வைத்துக்கொண்டால், அவர் கைவசம் உள்ள எட்டு விருதுகளில் ஏதாவது ஒன்று எலும்புத்துண்டாகக் கிடைக்கும்.
இப்படி காலம் முழுவது அதிகாரத்தின் பாதங்களை நக்கி வலுவிழந்த எழுத்தாளனின் நாக்கு… அதிகாரத்தின் முன் உண்மையைப் பேச எப்போதுமே வலுவிழந்து நிர்க்கிறது.
இந்த இடத்திலும் நான் சண்முகசிவாவை அவர் விரும்பாத போதும் முதன்மைப்படுத்த வேண்டியுள்ளது. தன் சுய தேவைக்காக எல்லாவித அணுகூலங்கள் இருந்தும் இலக்கிய அடையாளத்தைப் பூசிக்கொண்டு அவர் யாரையும் நாடிச்சென்று பணம்/ உதவி கேட்டதில்லை. ஆனால், தனி மனிதனாக இல்லாம சமூகப்பணி செய்யும் இயக்கங்களுக்குப் பணம் தேவை என்றால் எவ்வித கூச்சமும் இல்லாமல் யாரையும் அணுகி பணம் கேட்பார். “சமூகத்தால் பலன் அடையும் வணிகர்கள் மீண்டும் சமூகத்துக் கொடுக்க வேண்டும். அது அவர்கள் கடமை. அதை அவர்கள் மறந்தாலும் நாம் நினைவுறுத்த வேண்டும். எனவே நாம் சமூகத்திடம் கேட்பது உதவியல்ல. உன் கடமையைச் செய் என்கிறேன்” என வழக்கறிஞர் பசுபதி ஒருமுறை கூறியது அப்படியே மனதில் பதிந்துவிட்டது.
வல்லினம் அச்சு இதழாகத் தொடங்கப்பட்ட புதிதில் ஒவ்வொருவரிடமும் பணம் பெற்றே இதழை நடத்தினோம். அப்போதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூச்ச உணர்வாக இருக்கும். அதை அறிந்துகொண்டு அப்போது சண்முக சிவா சொன்னார். “வாங்கும் பணம் உன் சட்டைப் பாக்கெட்டில் விழாமல் மீண்டும் மக்களிடம் சென்று சேரும் வரை வாங்குவது அவமானமல்ல.”
– தொடரும்
உண்மை