2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
ரெங்கசாமி அவர்களின் நேர்காணலுக்குப் பிறகு மனதில் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. இது வெறும் 40 நிமிட ஒளிப்படமாக மட்டும் வர தகுதி கொண்ட நேர்காணல் அல்ல என தோன்றியது. ரெங்கசாமி அவர்களிடம் அவர் பேசியதை எழுத்தாகக் கொடுத்தால் என்ன என்றுக்கேட்டேன். அவர் சிரிக்கும் போது வாய் திறக்காது. உதடுகள் மட்டும் இடவலம் நகரும். மூக்கிலிருந்து கொஞ்சம் அதிகம் காற்று வரும். கண்கள் ஒளிரும். அன்றும் அப்படித்தான் செய்தார். தான் ‘ஹிண்ட்ராப்’ வரலாற்றை நாவல் வடிவில் எழுத ஆவல்கொண்டுள்ளதாகவும் அதற்கான தரவுகள் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் கேட்டுக்கொண்டதற்காக ‘ஹிண்ட்ராப்’ உதயகுமாரைத் தொடர்புகொண்டேன்.
சில அரசியல் தெளிவுக்காக அடிக்கடி அவரிடம் உரையாடுவதுண்டு. அதோடு நான் எழுதிய அவரது நேர்காணல் ‘தமிழ் நேசன்’ நாளிதழில் வந்தபின் உதயகுமார் மீது மக்களுக்குப் புதிய தெளிவு ஏற்பட்டிருந்தது. எனவே உதயகுமார் கொஞ்சம் பிரியமாகவே பேசுவார். ரெங்கசாமி எனும் எழுத்தாளர் குறித்தும் அவர் ஆவல் குறித்தும் கூறினேன். “அதுதான் ஹிண்ட்ராப் வரலாற்றை நான் எழுதிவிட்டேனே நவீன். இன்னும் ஏன் எழுத வேண்டும்” என்றார். அவரிடம் புனைவின் தேவையைப் புரியவைப்பது சிரமம். ரெங்கசாமி எனும் நாவல் ஆசிரியர் குறித்து எவ்வளவு விளக்கியும் அவர் தன் உலகில் இருந்து பேசிகொண்டிருந்தார். நான் தொடர்ந்து பேசாமல் ரெங்கசாமியிடம் உதயகுமாருடனான உரையாடலின் சுருக்கத்தை மட்டும் கூறினேன்.
உண்மையில் உதயகுமாரின் தோல்விக்கு அவரின் இந்தக் குணம்தான் காரணம். அவரிடம் மிகத்திட்டவட்டமான முடிவும் அதையொட்டிய பிடிவாதமும் இருந்தது. பொதுவாழ்வில் நான் உற்று வாசிக்கும் ஆளுமை காந்தி. எந்த ஒரு இயக்கத்தையும் வழிநடத்த சில முன்தயார் நிலை தேவைப்படுகிறது. அது இல்லாத பட்சத்தில் அவ்வியக்கம் தோல்வியில் முடியும். உதயகுமார் தன் முதல் ஹிண்ட்ராப் போராட்டத்தில் அகிம்சைக்காகக் காந்தியின் உருவத்தைப் பயன்படுத்தினாரே தவிர அவரை வாசிக்கவில்லை என்பதும் ஆழமான அரசியல் அறிவைப் பெறவில்லை என்பதும் அடுக்கடுக்கான அவரது செயல்பாடுகளே காட்டியது.
ஜெயமோகன் எழுதிய ‘காந்தி’ எனும் நூலில் காந்தி காலம் முழுவதும் கையாண்ட சில நுட்பங்களை மிக விரிவாகவே விளக்குகிறார். ‘தவிர்க்க முடியாத போதுமட்டுமே எதிர்த்து நிர்ப்பது’ தலைமைத்துவத்துக்கு அவசியமானது. அதை காந்தி தன் வாழ்நாள் முழுவதும் செய்துள்ளதாகவே ஜெயமோகன் சொல்கிறார். அதைவிட முக்கியமாய் ‘தற்காலிகமான தோல்விகளை ஒத்துக்கொள்ளுவதும்’ அரசியலில் முக்கியமானது. ‘பதுங்குவதும் பின்வாங்குவதும் தோல்வி அல்ல. போரில் அதுவும் ஒரு பகுதிதான்.’ கடந்த ஆண்டு இக்கட்டான நிலையின் சண்முகசிவா எனக்குச் சொன்னது இது. உதயகுமாரிடம் இந்தக் குணங்கள் இல்லை. அவர் எந்த ஆயுதத்தின் முன்பும் தலையை நீட்டலாம் என்பதில் தீவிரமாக இருந்தார். அதை ஒரு செய்தியாகப் படிக்க சுவாரசியம் இருக்குமே தவிர , ஒரு இயக்கம் தன் இறுதி இலக்கை இதனால் அடைய சாத்தியமே இல்லை.
வேதமூர்த்தி உண்ணாவிரதம் எடுக்கும் சீரியல் மலேசியாவில் ஓடிக்கொண்டிருந்தபோதுகூட நான் அவரை அழைத்து , “வேதமூர்த்தி பாரிசானின் சேர்ந்துவிடுவார் ” என்றேன். உதயகுமாருக்குக் கடுமையான கோபம் வந்தது. இத்தனைக்கும் அவருக்கும் வேதமூர்த்திக்கும் அப்போது பிளவு இருந்தது. அப்படியெல்லாம் இருக்கச் சாத்தியமே இல்லை என்றார். அதன் பின்னர் நான் ஹிண்ட்ராப்பை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினேன். http://vallinam.com.my/navin/?p=1339
‘பல்லி இறந்துவிட்டது வால் மட்டும் துடிக்கிறது’ என்ற அந்தக்கட்டுரையை வாசித்து எதிர்ப்பாராத இடத்தில் இருந்தெல்லாம் அழைப்பு வந்தது. முக்கியமாக துணையமைச்சர் சரவணன் தன்னை அக்கட்டுரை வெகுவாகக் கவர்ந்தது என காலையிலேயே அழைத்துக் கூறினார். மாலையில் உதயகுமார் அழைத்தார். “உங்களால இவ்வளவு விசயம் சொல்ல முடியும்னா அதை இயக்கத்துக்குள்ள வந்து சொல்லியிருக்கலாம். அது எங்களுக்கும் நமக்கும் பயனா இருக்கும். சில கருத்துகளை நான் எத்துக்கிறேன்… ஆனா….” என ஆரம்பித்து இன ரீதியான ஒடுக்குமுறை குறித்து பேசினார். அதுதான் நான் அவரிடம் தொலைபேசியில் கடைசியாகப் பேசியது. அதோடு அவர் தேர்தலில் போட்டியிட்ட அன்று நண்பர் ஆசிரியர் சரவணன் மற்றும் யோகனுடன் சென்றேன்.
“எப்படி நவீன் உங்களுக்கு வேதமூர்த்தி பாரிசான்ல சேர்வாருன்னு முன்னமே தெரிஞ்சது?” என்றார். நான் அமைதியாகச் சொன்னேன்… “சார்… நீங்க மலேசிய அரசியல மட்டும்தான் பாக்குறீங்க… நாங்க காலா காலமா தமிழ்நாட்டு அரசியல் நாடகத்தைப் பார்க்கிறோம்ல…” உதயகுமார் சிரித்தார். அவரால் சிரிக்க முடியும் என அன்று தெரிந்தது.
– தொடரும்