எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 13

012.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல், எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

கடகடவென உருவாகியது ரெங்கசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு. அவரது உழைப்பு அபாரமானது. அதில் ஒரு நேர்த்தி இருக்கும். இன்றைய இளம் தலைமுறையினர் கற்க வேண்டிய பல ஒழுங்குகளை ரெங்கசாமி கொண்டிருக்கிறார்.

முதலாவது, காலம் தவறாமை. சொன்ன நேரத்தில் ஒரு படைப்பை அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை ஓர் இளம் எழுத்தாளர் வல்லினத்தில் தொடர் ஒன்று எழுதிக்கொண்டிருந்தார். நூலாக வர வேண்டிய தொடர் அது. இன்னும் இரு கட்டுரைகள் கொடுத்துவிட்டால் நான் அதை நூலாகத்தொகுத்து இருப்பேன். கட்டுரையைக் கேட்கும் போதெல்லாம் “நான் கொஞ்சம் ஒழுங்கு இல்லாதவள் நவீன்.. கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பேன்” என சிரிப்பார். எனக்கு அதற்கு மேல் அவருடனான எவ்வித இலக்கியத் தொடர்பும் சாத்தியப்படாது என எண்ணி முற்றிலுமாய் விலகிவிட்டேன். ‘கலைஞன் ஒழுங்கில்லாமல் இருப்பான்’ என பொய்யான ஒரு தோற்றம் தொடர்ந்து சிலரால் பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையில் கலைஞன் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பான். ஆனால், அவன் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காமல் இருப்பதே தன் கலையின் தீவிரத்தால்தான். தன் கைவசப்பட்ட கலையிலும் தீவிரம் இல்லாதவன் கலைஞன் அல்ல. சோம்பேறி…

இரண்டாவது செய்யும் பணியில் நேர்த்தி. ‘காதல்’ இதழில் ஆசிரியராக இருந்தது தொடங்கி, இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் தங்கள் படைப்புகளை ஒரு துண்டுதாளில் எழுதிக்கொடுத்துள்ளனர். அவசரமான பணிகளில் இருக்கும் போது “தொ என் கவிதை” என கசங்கிய தாளை நீட்டுவார்கள். நான் அதை எடுத்துப்பத்திரப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நான் அவர்கள் படைப்புகளை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு வரும். உண்மையில் இவர்கள்தான் தங்கள் படைப்புகளை மதிக்கவில்லை. இதழ்கள் படைப்புகளைக் கொட்டும் குப்பைத்தொட்டி என்றும் இதழாசிரியர்கள் படைப்புக்காக கையேந்தும் பிச்சைக்காரர்கள் என்றும் இவர்களுக்கு நினைப்பு. ரெங்கசாமி நாவலின் கடைசி சில அத்தியாயங்களை தட்டச்சு செய்ய உதவிய நூலகவியலாளர் விஜயலட்சுமி உண்மையில் ஆச்சரியப்பட்டு போனார். “என்ன அவர் வேலை இவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. முறையாக கெட்டி அட்டை போடப்பட்டு, பக்க எண்கள் இடப்பட்டு, முறையாக பைண்டிங் செய்யப்பட்டு…” என அடுக்கினார். “இதுபோன்ற கையெழுத்துப்பிரதிகளை நூலகத்தில் சேமிக்க வேண்டும்” என்றார். பதிப்புக்கு எவ்வித சிக்கலும் தராததாக இருந்தது ரெங்கசாமியில் எழுத்து.

நேர நிர்வாகிப்பு ரெங்கசாமியிடம் இவ்வயதிலும் நான் பார்த்து வியக்கும் விசயம். பொதுவாகவே காலையிலேயே விழித்துவிடுவார். நடந்துசென்றுதான் நாளிதழ் வாங்குவார். மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித்தூக்கம். ஞாயிறுகளில் அவரது இயக்கம் சார்ந்த பொதுப்பணிகள். எஞ்சிய நேரங்களில் எல்லாம் எழுத்து வாசிப்பு இப்படி போகிறது அவர் வாழ்வு. இளம் தலைமுறையிடம் (நான் உட்பட) பார்க்கும் பலவீனமும் இதுதான். நேரம் இல்லை என்பதை மிக எளிதாகச் சொல்லத் தெரிகிறது நமக்கு. நமது முகங்கள் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்க வைக்கவும், திரையரங்குகளில் செலவிடவும்,  வெட்டிக்கதைகள் அடிக்கவும், தாராளப்படுத்துகிறோம். ஆனால், இலக்கியத்துக்கான காத்திரம் நம்மிடம் தணிந்து இருக்கிறது என்பதுதான் வருத்தம். அது குறித்தெல்லாம் நம்மிடையே கொஞ்சம் கூட வெட்கம் இருப்பதில்லை. அதையும் ஒரு ஸ்டேட்டஸ்டாக முகநூலில் போட்டு ‘லைக்குகள்’ வாங்கி விடுவோம்.

ஆய்வு மனமும் ரெங்கசாமியிடன் நான் பார்க்கும் மிகப்பெரிய ஆற்றல். எந்த ஒன்றையும் மிக விரிவாக ஆராய்ந்து, கள ஆய்வு செய்தப்பிறகே எழுத்தாக்குகிறார். அவரது கருத்தோடு நமக்கு மாற்றுக்கருத்து இருக்குமே தவிர, அவர் சொன்ன கருத்தில் அடிப்படை பிழை இருக்காது. அவரது அனைத்து நாவல்களுமே அவ்வாறு எழுதப்படுபவைதான். இதுவும் இளம் தலைமுறை கற்க வேண்டிய பாடம்தான். இன்று இணையம் நம் கைவசம் இருக்கிறது. எந்தத் தகவலையும் எளிதில் பெற முடியும். ஆனால், உழைப்பதில் மெத்தனப்போக்கு நம்மிடம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஓர் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் நம்மிடமே  தேடலும் உழைப்பும் சேகரிப்பும் இல்லையென்றால் யார் இச்சமூகத்தை முன்னெடுப்பார்கள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாத எழுத்தாளன்  காலத்தால் காணாமல் போய்விடுவான்.

02சமூக விழிப்புணர்வு. ரெங்கசாமியிடம் தொடக்கம் முதலே உள்ள குணம் இது. அவர் தான் சார்ந்த சமூகத்தை எப்போதும் உற்று கவனித்தபடி இருக்கிறார். அரசியல் சூழலைக் கணிக்கிறார். அரசு திட்டங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வகை விளைவுகளை ஏற்படுத்தும் என யோசிக்கிறார். யோசிப்பது மட்டுமல்லாமல் அதற்காக தன் இளமை காலம் தொட்டே உழைக்கவும் செய்திருக்கிறார். இந்தக் கவலையே நமது படைப்புகளை சமூகம் நோக்கி கொண்டுச் சேர்க்கும். அது எவ்வித கலை வடிவமாக இருந்தாலும் அதில் அழுத்தமான ஒரு சமூக பார்வை இழையோடியிருக்கும். உலக இலக்கியங்களில் முக்கியமான சிறுகதைகளாகச் சொல்லப்படுபவை சமூக சிக்கல்களையும் அதனுடன் பிணைந்த தனிமனித சிக்கல்களையும் சொல்பவைதான். வெற்று கற்பனாவாதமும் ‘ஜாலி இலக்கியமும்’ ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எப்போதுமே ஆபத்தானது.

நிதானம். இது அவரது வயதுக்கே உரியது . தொடக்கத்தில் நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவரது சுயவரலாற்றை வாசித்தப்பின் அதை அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆயுதமாகவே கடைப்பிடித்து வந்துள்ளார் என்பது புரிந்தது. வாழ்வில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் அவர் அதைதான் கடைப்பிடிக்கிறார். தன் படைப்புகளை முன்னிலை படுத்த அவர் எப்போதும் முயன்றதில்லை. அது இயல்பாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் என்னென்னவோ இலக்கிய மாநாடுகளும் , சுற்றுலா பயணங்களும், மேடைகளில் இலக்கிய ஆர்ப்பாட்டகளும் நடந்த காலக்கட்டத்தில் எல்லாம், ரெங்கசாமி எனும் ஒருவர் இருந்த இடம் தெரியாது. அவர் தன் பணியை அமைதியாவே செய்துக்கொண்டிருந்தார். முழுக்கவும் தனது ஆற்றலை தான் நம்பிய புனைவுக்கு மட்டுமே செலவு செய்தார். நாளை அவர் இல்லாத சூழலிலும் அவர் சிந்தனைகள் நூல் மூலமாக மக்களிடம் தொடர்ந்து இருக்கும். இன்னும் சொல்லப்போனால், ‘தமிழினி’ போன்ற பதிப்பகங்கள் தேடி வந்து நூல் பிரசுரித்த அனுபவம் எல்லாம் ரெங்கசாமி, முத்தம்மாள் பழனிசாமி போன்ற ஆளுமைகளுக்கே வாய்த்துள்ளது. இவர்கள் எந்த இயக்கங்களிலும் இல்லை. எந்த விருதின் பின்னாலும் ஓடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதனாலேயே உண்மையான இலக்கிய அங்கீகாரம் இவர்களைத் தேடி வருகிறது. பொய்மையிலிருந்து விலகி நின்றாலே உண்மையின் ஒளி நம்மீது படும் போல…

அ.ரெங்கசாமி என்பவர் உண்மையில் இன்றைய இளம் தலைமுறை பார்த்து, வாசித்து, உணர்ந்து கற்க வேண்டிய ஆளுமைதான். அவரது வாழ்வு நிறைவானது. அவர் விரும்பிய விடயங்களை அவர் தன் வாழ்நாளில் செய்து முடித்துள்ளார். ஓர் எழுத்தாளனுக்கு எத்தனை அமைச்சர்களைத் தெரியும், எத்தனை இடங்களுக்குச் சுற்றுப்பயணம் போயிருக்கிறான், எவ்வளவு பணம் சேமிப்பில் வைத்திருக்கிறான், யார் யாருடன் எல்லாம் நெருக்கம், எந்தெந்த மாநாடுகளில் எல்லாம் பேசியுள்ளான், என்னென்ன விருதுகளை வாங்கியுள்ளான் என்பதெல்லாம் தகுதிகள் அல்ல. அவன் தன் வாழ்நாளில் எழுத்தின் மூலம் செய்ய வேண்டிய பணிகளையும் அதற்கான உழைப்பையும் நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளானா? தான் இயங்கிய/ நம்பிய கலையை ஓரளவாவது தன் வாழ்நாளில் முன்நகர்த்த முயன்றானா ? என்பதே அடிப்படை கேள்வி. இந்தக்கேள்வியை இலக்கிய நீதிபதிகள் யாரும் நம்மை நோக்கி கேட்கப்போவதில்லை. நாமே நமக்குள் கேட்டுக்கொண்டு உண்மையாக பதில் தர வேண்டியுள்ளது.

இவ்வளவு ஆற்றல மிக எழுத்தாளராக இருந்தாலும் எனக்கும் ரெங்கசாமிக்கும் இடையில் சில மாற்றுக்கருத்துகளும் அரசியல் பார்வைகளில் பேதமும் இருக்கவே செய்கின்றன. அவை நாளை…

-தொடரும்

(Visited 78 times, 1 visits today)

One thought on “எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 13

  1. நவீன் உங்களின் பணி ஆசிரியர் தொழில். புத்தக வாசிப்பு, போதனை,எழுத்து,மொழி ஆதிக்கம் என தொடர் தேடல், கற்றல் உங்களின் திறனை வளர்த்து இலக்கியத்தின் பால் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டே இருக்கிறது. அது உங்களின் நிஜமான தேடலாகவும் பரிணமித்துள்ளது பாராட்டுக்குரியதே. இப்பாணி உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் பல ஆசிரியர்கள், எனக்குத்தெரிந்த வரையில், நான் சந்தித்தவரையில், இலக்கியத்தின் பால் தீவிரம் காட்டுபவர்கள் முன்னால் இன்னால் தமிழாசிரியர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அவர்களின் கைகளில் இலக்கிய உலகம் இயங்குவதாகவும் ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. அவர்கள்தான் பெரும்பாலும் எழுத்தாளர்கள் இங்கே. அவர்களும், அடுத்தவர் எழுத்துகளில் இலக்கணம் இல்லை, பிழை உள்ளது, சந்தப்பிழைகள் உள்ளன, சரியான வாக்கிய அமைப்புகள் இல்லை, இலக்கியம் தெரியவில்லை என நேராகவும், மறைமுகமாகவும் எங்களைப் போன்ற வளரும் எழுத்தாள வாசகர்களை தூர்வாருகிறார்கள். நாங்கள் என்ன யூனிவர்சிட்டிவரையிலா தமிழ் பயின்றோம். தமிழ் கற்றலிலா எங்களின் பணி சம்பந்தப்பட்டுள்ளது.? நேரமெடுத்து, சொந்தமாகக் கற்று, மனதில் தோன்றுவதை முகநூல் மற்றும் ப்ளாக் வாயிலாக பதிவேற்றி அங்கே வரும் ஒரு சிறிய கூட்டத்தின் விமர்சனங்களின் வழி எங்களை நாங்களே செம்மைப்படுத்தி; தொடர் வாசிப்பு, இலக்கியம், எழுத்து, நல்ல படைப்பாளிகள், நல்ல சினிமா என அடையாளங்கண்டு, ரசனை உணர்வுடன் வாழ்க்கையை ஓட்டுகிறோம். அதை இப்படி போகிற போக்கில் இடித்துரைத்து விளாசு விளாசு என்று விளாசினால் என்ன செய்ய.?
    நீங்கள் மட்டுமல்ல நவீன், பல எழுத்துத்தாளார்களுக்கு இப்படி சாதா நிலையில் உள்ள சக வாசக எழுத்தாளர்களை நண்பர்களை வெறுப்பேற்றுவது ஒரு வேலையாகவே மாறிவிட்டது. எப்போதுபார்த்தாலும் சாதா நிலையில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதே கிடையாது.
    //இளம் தலைமுறையிடம் (நான் உட்பட) பார்க்கும் பலவீனமும் இதுதான். நேரம் இல்லை என்பதை மிக எளிதாகச் சொல்லத் தெரிகிறது நமக்கு. நமது முகங்கள் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்க வைக்கவும், திரையரங்குகளில் செலவிடவும், வெட்டிக்கதைகள் அடிக்கவும், தாராளப்படுத்துகிறோம். ஆனால், இலக்கியத்துக்கான காத்திரம் நம்மிடம் தணிந்து இருக்கிறது என்பதுதான் வருத்தம். அது குறித்தெல்லாம் நம்மிடையே கொஞ்சம் கூட வெட்கம் இருப்பதில்லை. அதையும் ஒரு ஸ்டேட்டஸ்டாக முகநூலில் போட்டு ‘லைக்குகள்’ வாங்கி விடுவோம்.// இங்கே நீங்கள் //நான் உட்பட// என்கிற வாசகத்தை தப்பித்தலுக்காக பயன்படுத்தியதாகவே எமக்குப்படுகிறது. நீங்கள் அப்படி இருந்தால் எப்படி உங்களின் ஆழ்மனதிலிருந்து இதுபோன்ற வாசகங்கள் உதிக்கும். ?

Leave a Reply to ஸ்ரீவிஜி from Japan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *