‘விஷ்ணுபுரம் விருது’ ஞானக்கூத்தனுக்குக் கிடைக்கின்றது என அறிந்த அன்று அவர் கவிதைகள் அறிமுகமான தினம் ஒரு மந்தமான நினைவாய் முறையற்று ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. ஒரு கவிதை வாசகனுக்கு அவனது ஆரம்பகால கவிதை ரசனையைக் கூர்மை செய்தவர்கள் இலக்கிய வாழ்வில் ஒரு பகுதியாகி விடுகின்றனர். எங்கு எப்போது கவிதை குறித்து பேசினாலும் அந்த ஆளுமையை வலிந்து இழுத்து,துணைக்கு வைத்துக்கொள்கிறது நினைவு .
ஞானக்கூத்தனை முதலில் வாசிக்க எனக்குத் தடையாக இருந்தது எது என இப்போது யோசித்துப்பார்க்கிறேன். அவர் பெயராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கவிதைகள் வாசிப்பதில் ஏற்பட்ட அலாதி விருப்பத்தில் ‘தக்கதை’ தேடி அலைந்தபோது முக்கியமான கவிஞர்கள் பட்டியலில் அவர் பெயர் எப்போதும் இருக்கும். “அதென்ன ‘ஞானம்’ ! நமக்கெல்லாம் இல்லையா என்ன?” என்று ‘தொழில்முறை’ போட்டியால் அவரை விலக்கியே வைத்திருந்தேன்.
எனக்கு இப்போது போல அப்போதும் உவப்பானவராக ஆத்மாநாம் இருந்தார். வாழ்வில் எதிர்க்கொள்ளும் உக்கிரமான ஒவ்வொரு தாக்குதலின் தலையையும் வருடி விட்டு, அதை ஒரு பழகிய நாயாய் காலைச் சுற்ற வைக்கிறாரோ எனத்தோன்ற வைக்கும் அவர் கவிதைகள். ஆத்மாநாமைப்பற்றிய தகவல்களைத் தேடி தேடி சேகரித்து அவர் ஆளுமையை எனக்குள் முழுமை செய்துப்பார்க்க முனைப்புக்கொண்டிருந்த நேரம் ஞானக்கூத்தனின் ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. அது ஆத்மாநாம் பற்றியது.
அவர்கள் சந்திப்பு குறித்தும் ஆத்மாநாம் உடல் தோற்றம் குறித்தும் ஓரளவு அக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையைத் தவிர இதுவரை நான் வேறு எங்கும் அவர் தோற்றத்தை வர்ணனை செய்யப்பட்டு வாசித்ததில்லை. ஞானக்கூத்தன் எழுத்திய அக்கட்டுரையில் ‘நண்பர்களிடம் ஒரு நொடிப்பொழுதும் முரணான பாவனைக் காட்டமாட்டார்’ என்ற வரி இருந்தது இப்போதுவரை நல்ல ஞாபகம் . என்னை அந்த வரி மிகுந்த நம்பிக்கைக்குள்ளாக்கியது. கவிதைகள் மூலம் ஓர் கவிஞனை எத்தனை நெருக்கமாக ஒரு வாசகனால் உணர்ந்துகொள்ள முடிகிறது என நிரூபித்தது. என மனதில் உருவகித்து வைத்திருந்த கவிஞரின் ஆளுமை ஞானக்கூத்தனின் வரிகளோடு ஒத்துப்போனது. அதே சமயம் பக்கம் பக்கமாகப் பிரசாரங்களை எழுதியவர்கள் கவியரசாகவும் கவிப்பேரரசாகவும் கவிசிப்பாயாகவும் வேறு எந்த பட்டத்தை தோளில் சுமந்து திரிந்தாலும் சொற்கள் கொடுக்கும் சந்தங்களின் அதிர்வை மீறி வாழ்வை அறிய முடியாமலேயே மிஞ்சியது.
ஆத்மாநாமை நெருக்கமாக அறிமுகம் செய்தவரை அதற்கு மேலும் வாசிக்காமல் இருக்க முடியவில்லை. முதலில் அவர் கவிதையை ‘கொங்குதேர் வாழ்க்கை’ தொகுப்பில் தேடினேன். அவரது மொத்தக் கவிதைகளையும் வாசித்தேன். சில கவிதைகள் என்னைக் கவரவில்லை; அல்லது அதுபோன்ற கவிதைகளை வாசித்து எனக்குப் பழக்கமாகவில்லை. ‘அம்மாவின் பொய்கள்’ எனும் கவிதையெல்லாம் எனக்குச் சாதாரணமாய் இருந்தது. ஆனால் ‘பெயரும் தொழிலாளிகள்’ எனும் கவிதை மட்டும் அன்று இரவு முழுவதும் நினைவில் ஊர்ந்துகொண்டே இருந்தது.
‘அவர்கள் விட்டுச்சென்ற பூனை
இன்னும் அங்கே திரிகிறது
நாய்போல் அதற்கு மோப்பம்
கொடுக்கவில்லை கடவுள்’
வேறெதற்காக இல்லாவிட்டாலும் அதிகம் குட்டிகள் போடுவதால் குடும்பத்தோடு மலாய் கம்பத்தில் பூனைகளை விட்டு வந்தபோது எப்போதும் இல்லாத ஏக்கத்தோடு தொண்டை அடைப்பு போல தாய்ப்பூனை என்னைப்பார்த்து கத்தியது அன்று இரவு எங்கோ தொலைவிலிருந்து கேட்டது. கவிதை கொடுக்கும் மொத்த உணர்வு வேறென்றாலும் ஒரு வளர்ப்பு பிராணியை நிராகரிப்பது பற்றியே அன்று இரவு நினைத்துக்கொண்டிருந்தேன்.
பின்னர், பலவகையாக அந்தக் கவிதையை வாசித்தேன். கட்டடத் தொழிலாளிகள் தற்காலிகமாக வாழ்ந்து அகலும் இடைவெளியையும் அந்த இடைப்பட்ட நிழலில் உருவாகும் உறவுகளுக்கு எவ்வித அர்த்தமும் இல்லாத வெறுமையையும் கவிதை சொல்லிக்கொண்டே இருந்தது. சமைத்த இடத்தின் சுவடு ஒரு படிமமாகி ‘எல்லாமே இந்த வயிற்றுக்குதான்’ என்பது போன்ற அபத்தக்குரலை எழுப்பிக்கொண்டிருக்க, சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிட்ட தொழிலாளர்களால் தனிமையாகிவிட்ட கவிஞரும் பூனையும் ஒன்றோ என ஒரு கணம் தோன்றியது. அந்த கணம்தான். அந்த ஒரே கணம் . கவிதை தன்னைத்தானே எனக்கு திறந்து காட்டியது. உடல் தளர்ந்து கண்களில் கண்ணீர். வாழ்வின் குரூரங்களை பாசங்கில்லாமல் சந்திக்கும் தருணம் உதிரும் கண்ணீர் அது.
அதன்பின்னர் ஞானக்கூத்தனை கவனமாக வாசிக்க ஆரம்பித்தேன். ‘எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும்’ என்ற கவிதையின்
‘எதையும் ஒருநாள் ஏற்றுக் கொள்ளலாம்
அதனின் பிசுக்கைத் துடைத்த கையுடன்
திரும்பும் பொழுது எதிர்பாராமல்
இருளில் மழைக்குளத்தில்
இறங்கினாற் போல் இருக்கும் பொழுது ‘ என்ற வரியில் பொதிந்திருக்கும் ஒவ்வொரு சொல்லையும் எவ்வாறு கவிஞன் கவனம் கொள்கிறான் என்பதற்கும் வாசகன் தவறினால் கவிதை தப்பிப்போகும் என்பதற்கும் நல்ல உதாரணம்.
‘மழைக்குளம்’ என்பதை நான் பலநாள்கள் கற்பனை செய்துப்பார்த்தேன். அங்கு குளம் இல்லை. ஆனால் மழை பெய்ததால் ஒரு குளம் உருவாகியிருக்கிறது. இருளில் தன்னை வெளிக்காட்டாத திடீர் குளம். இந்தக்குளங்கள் எங்காவது விரிந்திருக்கும் என்றே வாழ்வு முழுவதும் நம் கண்கள் தேடுகின்றன. ஆனால் நாம் அதில் ஒவ்வொரு முறையும் தவறிதான் விழுகிறோம். நாம் கழுவப்படுகிறோம். அதற்கு முன் நடந்த ஒரு கோடுரத்தின் பிசுபிசுப்பு கழுவப்பட்டதாக நம்பிக்கொள்கிறோம். முடியவே முடியாது என இருந்த ஓர் இழப்பை ஏற்றுக்கொள்கிறோம். இப்படியே முடிந்து போகிறது வாழ்க்கை.
வாழ்நாள் முழுவதும் நிகழ்ந்துவிட்ட அவமானங்களும், ஏமாற்றங்களும், தவறுகளும், துன்பங்களும் உள்ளிருந்து தீண்டும் என பாவனை செய்துக்கொண்டே வாழ்வின் இன்னொரு ருசியான பக்கங்களை நீங்காமல் சுவைக்க, நாம் வழுக்கிவிழும் இந்த மழைக்குளங்களே ஊன்றுகோளாகிவிடுகின்றன.
மொத்த வாழ்வு குறித்தும் ஒரு எளிய எள்ளலை கலைஞர்களால் மட்டுமே உருவாக்க முடிகின்றது. இறந்து கொண்டிருக்கும் ஒரு கரப்பான் பூச்சியின் உணர்வுக்கொம்பின் இறுதி அசைவு போல கவிஞன் வாழ்வை இறுதிவரை அலைந்து அலைந்து அறிகிறான். அவற்றை தொகுத்துப் படிமமாக்கிக் கொள்கிறான். பல நல்ல கவிஞர்களிடம் இந்த அம்சத்தைக் காணலாம். தேவதேவன், தேவதச்சன், பிரமிள், மனுஷ்யபுத்திரன் என நீண்ட வரிசையில் யாரின் கவிதைகளிலும் வாழ்வை அபகரிக்கும் பேராசையும் தள்ளி நின்று பார்க்கும் துறவு மனமும் வியாபித்துள்ளது.
ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களால் சமகால வாழ்வின் அவசரத்தையும் தனிமையின்மையையும் அங்கதங்களினால் மட்டுமே கடக்க முடியும். அவர் சமகாலத்தில் வாழும் மிக முக்கியக் கவிஞர். விருது பெறும் அவரை வாழ்த்துவோம்.
‘இருந்தாலும் மூலை
எல்லோருக்கும்
சரிசமமாகக்
கிடைப்பது கிடையாது
தனக்கொரு மூலை
கிடைக்கப் பெறாமல்
இங்கும் அங்குமாய்ப்
பலபேர் அலைகிறார்’
– மூலை கவிதையிலிருந்து…