மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…
கவிதையில் இடைவெளி நவீனக் கவிதை தனக்குப் புரிவதில்லை எனச்சொல்பவர்களை நான் பல இடங்களில் சந்தித்துள்ளேன். அவர்களின் குற்றச்சாட்டு சங்க இலக்கியப் பாடல்கள் தங்களுக்குப் புரிகிறதென்றும் ஆனால் நவீன கவிதைகள் புரிவதில்லை என்பதாக இருக்கும். உண்மையில் அவர்கள் தங்களுக்குச் சங்கப்பாடல்கள் புரிவதாக நம்புவது அதன் விளக்க உரையின் துணையால்தான். அல்லது தொடர்ச்சியான மேடைப்பேச்சில் உதிரியாக வந்துவிழும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் நினைவில் வைத்து பொருள் அறிந்திருக்கலாம்.
திருக்குறளை வாசித்து சுயமாகப் பொருள் அறிந்து கூறும் தமிழ் ஆர்வலர்களை நான் சந்தித்தது குறைவு. இன்னும் சொல்லப்போனால் கவிதையை அறிய தமிழ் அறிவு மட்டும் உதவுவதில்லை. அதோடு கொஞ்சம் மௌனங்களை நிரப்பிப் பார்க்கும் கற்பனையும் தேவைப்படுகிறது.
இதற்கு,
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பிச்
காமம்செப்பாது கண்டது மொழிமோ
நறியியது செறிந்த செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீ அறியும் பூவே’ என்னும் இறையனாரின் கவிதையைக்கொண்டே விளக்க வேண்டியுள்ளது. இக்கவிதையை ஒட்டி நக்கீரரின் அறிவு ஆராய்ந்தது ஓர் புறவய உண்மை. அதாவது அவர் கவிதையை நேரடியாகப் புரிந்துகொண்டு பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மணம் உண்டா என வாதாடத்தொடங்குகிறார். அதை ஆராய்கிறார். பின்னர் அதை மறுக்கவும் செய்கிறார். ஆனால் கவிஞன் தும்பியிடம் கேட்டது கவித்துவ உண்மை. அகம் மட்டுமே அறியும் உண்மை அது. கவிதைக்கும் ஆய்வுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். பிற அறிதல்கள் அனைத்தும் புறவயமானவை. இலக்கியம் அகவயமானது.
அந்தக் காதலன் தன் காதலியின் கூந்தலை அள்ளி முகர்ந்து அடைந்த மனஎழுச்சியின் கணத்தில் அவன் அடையும் உச்சநிலையைக் கவிதை சென்று தொடுகிறது. அந்த உச்ச நிலைக்கு தர்க்கங்கள் இல்லை. ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது,
‘கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி’ இந்தக் கவிதையை நேரடியாக அர்த்தம் கொள்ள முனைந்தால் அதில் உள்ள கவித்துவத்தை அறிய முடியாமலேயே போய்விடும்.
இங்கு கடவுள் எனச் சொல்லப்படுவது ஒரு உன்னதமான கனம். அந்த கனத்தை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கலாம். நாம் வாழ்க்கை முழுவதும் காத்திருந்த ஒரு கனமாக அது இருக்கலாம். ஆனால் அந்த கனம் நிகழும் போது நாம் என்னவாக இருக்கிறோம் என்றே இக்கவிதை பேசுகிறது. நாம் காத்திருக்கும் கனம் நிகழும் போது அசைவற்றப் பார்வையாளனாக மட்டுமே இருக்கும் அனுபவத்தை நம்மிலிருந்து மீட்டுப்பார்க்க இக்கவிதை உதவுகிறது. ஆனால், கடவுள் எப்படி முன்னே தோன்றுவார்? அப்படி தோன்றினால் ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என தர்க்கம் செய்யத்தொடங்கினால் கவிதை வாசிப்புக்கொடுக்கும் அனுபவம் இல்லாமல் போய்விடும்.
கவிஞர் பா.அ.சிவத்தின் ஒரு கவிதை :
‘வாழ்க்கையென்று
பிரத்தியேகமாய் ஏதுண்டு?
கவிதைகளினூடே வாழ்ந்துகொண்டிருக்கிற
இறந்த கால நிமித்தங்கள் தவிர…’ சிவத்தின் இந்த வரிகள் லட்சியவாதிகளுக்கு பெரும் சினத்தை மூட்டலாம். வாழ்க்கை என்பது வெறும் கவிதையில் நினைத்துப்பார்க்கும் இறந்தகாலம் மட்டுமல்ல என தன்முனைப்பு உரை ஆற்றத்தொடங்கலாம். அவர்களால் கவித்துவம் என்பதை எப்போதுமே நெருங்க முடியாது. சிவத்தின் சொற்களின் ஆழத்தில் உள்ள வெறுமையையும் நிகழ்காலத்தின் மீதான அவநம்பிக்கையையும் கவிதை மட்டுமே அவருக்கு எல்லாமுமாகியுள்ளதையும் ஒரு கவிதை வாசகன் மட்டுமே அடைய முடியும். அவ்வாறு அடையும் போது அவன் தர்க்கம் செய்யப்போவதில்லை. காரணம் கவிதை சொற்களில் இல்லை. அதன் இடைவெளியில் உள்ளது. வாசகன் கவிதையுடன் தர்க்கம் செய்ய தொடங்கும் அந்த நிமிடமே அது அவர்களை விட்டு அகன்றுவிடுகிறது.
ஒரு மலரை ஆராய நினைத்து அதன் இதழ்களை வன்மமாக பிரிக்கத்தொடங்கினால் அதன் அழகு அகன்றுவிடுவதுபோல கவிதையை நேரடியாக அணுகத்தொடங்கினால் அதன் கவித்துவமும் கடைசிவரை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.
எக்காக்கு ஹக்குயின் எழுதிய ஒரு ஜென் கவிதையை இங்கு நினைவு கூறலாம்.
‘நீரில் மிதக்கும் நிலவைப்
பிடிக்க முயல்கிறது குரங்கு
முயற்சியை விடாது அது,
மரணம் தன்னைத் தாண்டிப்
போகும் வரை. தான்
தொற்றிய கிளையை
விட்டு விட்டு
ஆழக் குளத்தில் அமிழுமானால்
பரிசுத்தமான பளபளப்பில்
மின்னும்
முழு உலகமும்’ குரங்கினால் நிலவின் அழகை ரசிக்க முடியவில்லை. ஆனால் அது அதனை ஆராய நினைக்கிறது. ஆராய முயலும்வரை அதனால் அதை ரசிக்க முடியாது. தொற்றிய கிளையை விட்டு குழத்தில் தானும் நிலவுடன் ஜொலிப்பதே ரசனையின் உச்சம். கவிதை எதிர்ப்பார்ப்பதும் அதைதான்.