நவீன கவிதை வாசிப்பு : பகுதி 3

manushyaputhiranமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

மிகை உணர்ச்சி, உணர்வெழுச்சி இவை இரண்டுக்கும் அடிப்படையான வித்தியாசம் தெரியாமல் நம்மால் ஒரு கவிதையை அறிவது சாத்தியமில்லை. மிகை உணர்ச்சி என்பது ஓர் உணர்ச்சி மனநிலையை ஒரு படைப்பு மிகைப்படுத்திக் காட்டுவதிலிருந்து அறியலாம். அதாவது ஒரு துக்கமான காட்சியைச் சொல்லும்போது அக்காட்சியை விளக்குபவன் வாசகனை அழவைக்க மிகவும் மெனக்கெடுவான். வாசகனை அழச்சொல்லி உழுக்குவான். ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால் சீரியல்களை ஓர் எடுத்துக்காட்டாக்கலாம். அவை ரசிகனின் உணர்ச்சியை சீண்ட திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் அழுது அழுது நம்மையும் அழவைக்கும்.

உணர்வெழுச்சி அப்படியானதல்ல. அப்படைப்பில் ஒரு சமநிலை இருக்கும். மொழியில் நிதானம் இருக்கும். சொற்களில் கதறி அழும் தொணியோ கத்திச் சிரிக்கும் தொணியோ இருக்காது. ஆனால் படிப்பவரை கலங்கடிக்கும். நல்ல படைப்புகளுக்கு பொதுவாக இருக்கும் அம்சம் இது. அவ்வாறு என்னைக் கலங்கவைத்த ஒரு புறநானூறு பாடல் உண்டு.

‘கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!’

இந்தப்பாடலில் ஒரு பெண் முதுமக்கள் தாழி செய்பவரிடம் செய்யும் தாழியைக் கொஞ்சம் பெரிதாகச் செய்யச் சொல்கிறார். அக்காலத்தமிழர்கள் இறந்தால் தாழியில் போட்டு புதைப்பார்கள். ஆனால் இவள் பெரிதாகச் செய்யச் சொல்ல காரணம் என்ன என்று யோசிக்க வைக்கின்றன அடுத்தடுத்த வரிகள்.

ஓயாமல் சுழன்ற வண்டிச் சக்கரத்தின் அச்சில் ஒட்டிக் கொண்ட வெண்ணிற பல்லி போல தன் வாழ்க்கையும் இவனுடைய வாழ்க்கையுடன் ஓடி விட்டது. அதாவது அவள் அவனுடன் வாழ்க்கை முழுவதும் பயணித்துள்ளாள். ஆனால் அவளுக்கு அதனால் சோர்வில்லை. காரணம் நிலத்தில் ஊர்ந்தவன் அவன். அவள் அவனுடன் சக்கரத்தில் ஒட்டியப்பல்லிபோல பவனி வந்தாள். அவளுக்கென்று பிரத்தியேகமான வாழ்கை இல்லை. அப்படியானால் அவள் தாழியைப் பெரிதாகச் செய்ய சொன்ன காரணம் இப்போது புரிந்துவிடுகிறது. அவளும் அவனுடன் ஒரே தாழியில் சங்கமமாக அவ்வாறு சொல்கிறாள் எனத்தெரிந்தவுடன் வாசகனுக்கு ஆழமான மன உறுக்கம் ஏற்படுகிறது. உண்மையில் அப்பாடலில் காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் வாசகன் ஊகித்தறிய போதுமான காட்சிகளும் மௌனமும் இடைவெளியும் வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் அற்புதமான கவிதை என்பேன்.

இப்பாடலில் நம்மால் தலைவன் தலைவியின் நெருக்கத்தை அந்த உவமையால் மட்டுமே அறிய முடிகிறது. முழு ஓய்வுடன் அவனை மட்டுமே நம்பி, அவனை மட்டுமே சுற்றி சுற்றி, ஆனால் அவனது எல்லா அனுபவங்களையும் கவனித்தப்படி வரும் அவள் தனக்குக் கொடுக்கும் உவமை ‘சக்கரத்தில் ஒட்டிய பல்லி’ என்பதுதான். இதுபோன்ற உவமைகளே சில சமயம் கவித்துவத்தை வாசகனுக்குள் ஏற்றிப்பார்க்கின்றன.

நவீன கவிஞர்களில் ஒருவரான மனுஷ்ய புத்திரனின் கவிதைகளில் சமநிலை குழையாத இதுபோன்ற உவமைகளை வாசித்ததுண்டு.

‘ஒரு பென்சிலைச் சீவுவதுபோல
ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில் நகர்த்துவதுபோல
ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை மடிப்பதுபோல
ஒரு பழைய பயணச் சீட்டைக் கசக்கி எறிவதுபோல
ஒரு தீக்குச்சியை வெறுமனே கொளுத்துவதுபோல
ஒரு அலைவரிசையிலிருந்து இன்னொரு அலைவரிசைக்கு மாறுவதுபோல
நிகழ்கிறது
உன் நீங்குதல்’

இந்தக்கவிதையே முழுக்க முழுக்க உவமைகளால் ஆனது. ஒரு உறவின் நீங்குதல் எப்படியெல்லாம் இருக்கிறது என கவிஞர் உவமைப்படுத்துகிறார். அதில் உள்ள வலி வாசகனை சன்னஞ்சன்னமாக பாதிக்கக்கூடியது ஆனால் கவிஞர் அதை ஒரு தகவல் பாணியில் சொல்லிச் செல்கிறார்.

கவிதையில் ஒவ்வொரு வாக்கியம் அவசியமானது. மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதையில் ஒரு தீக்குச்சியை வெறுமனே கொளுத்துவது என்ற வரி என்னை அதிகம் பாதித்தது. காரணமின்றி அழிக்கும் மனநிலையை இதைவிட வேறெப்படி சொல்வதென தெரியவில்லை. சில சமயம் உவமையை சரியாக உணராமல் போனாலும் படைப்பு கொடுக்கும் உணர்வெழுச்சியை நம்மால் அடையவே முடியாது.

‘தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து தூறும் அறிவு’

என்ற திருக்குறளுக்கு தோண்டிய அளவே மணல்கேணியில் நீர் ஊறும். அதுபோல கற்கும் அளவே மாந்தர்க்கு அறிவு ஊறும் என பொருள் சொல்லப்படுகிறது. என்னைக் கேட்டால் வள்ளுவர் மாபெரும் கவிஞர். திருக்குறள் மிகச்சிறந்த கவித்துவம் அடங்கிய தொகுப்பு. ஆனால் நாம் அதை அறநெறிகளைச் சொல்லும் இலக்கியமாக மட்டுமே பார்க்கிறோம். இந்தத் திருக்குறளில் வள்ளுவர் எந்த இடத்திலும் நீர் என்று சொல்லவே இல்லை. நாமாக அதைப்பற்றி பேசுகிறோம். ஆனால் இந்தக் குறளில் மணற்கேணி என்ற வார்த்தை மிக முக்கியமானது.

நிலத்தில் தோண்டப்படும் கிணறுக்கும் ஆற்று மணலில் தோண்டப்படும் கிணறுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. மணல்கிணறு மிக விரைவாக மூடிக்கொண்டு விடும். அதை அடிக்கடி தோண்டிக்கொண்டே இருந்தால் தான் ஆழமாகவே இருக்கும். எனவே வள்ளுவர் அங்கு மணற்கேணி என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். வாசித்துக்கொண்டே இரு. இல்லாவிட்டால் அறிவின் ஆற்றல் மூடப்பட்டுவிடும். அதற்கு மேல் அது பயன்படாது என எச்சரிக்கும் தொணி அது. ஒரு உவமையைத் தவறவிடுவதால் ஓர் ஆழ்ந்த பொருளையே நாம் தவறவிட்டுவிடுகிறோம். அதில் உள்ள கவித்துவத்தையும் இழந்துவிடுகிறோம்.

கவிதை வாசகர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புவது ஒன்றுதான். ஒரு நல்ல கவிதையில் உள்ள ஒவ்வொரு சொற்களும் அவசியமானது. அவை கூட்டாகச் சேர்ந்து உங்களிடம் ஓர் உணர்வை புகுத்த விரும்புகின்றன. அதை நீங்கள் அறிவு கொண்டு ஆராய முனைந்தால் அதை கடைசி வரை நீங்கள் அடையவே முடியாது.

ஆனந்தின் வேடிக்கையான கவிதை ஒன்று…

‘பறந்து செல்லும் பறவையிடம்
நிறுத்திக் கேட்டான்;
பறப்பதெப்படி?
அமர்ந்திருக்கையில் சொல்லத்
தெரியாது கூடப்
பறந்து வா சொல்கிறேன் என்றது
கூடப் பறந்து கேட்டான்;
எப்படி?
சிரித்து
உன்போலத்தான் என்றது
அட ஆமாம்
எனக் கீழே கிடந்தான்
பறவை மேலே சென்றது.’

பறவைக்கு பறக்கத் தெரியும். பறப்பதெப்படி எனச் சொல்லத் தெரியாது. அது அதை ஆராயத்தொடங்கினால் அதுவும் கீழே விழலாம். கேட்டவனுக்கு தான் பறக்கிறோம் என்ற எண்ணம் எழுந்ததும் கீழே விழுகிறான். காரணம் அங்கே ஓர் இறுக்கம் வந்துவிடுகிறது.

கவிதை எழுதப்படும் காரணம் என்னவாக இருந்தாலும் அதை வாசிக்கும் வாசகன் அதன் மையத்தைச் சென்றடைய திறந்த நெகிழ்வான வாசிப்பு மனம் தேவைப்படுகிறது. அதுவே நம்மை கவித்துவத்திடம் அழைத்துச்செல்லும்.

(Visited 301 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *