நவீன கவிதை வாசிப்பு : பகுதி 4

sivaமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

தொ.பரமசிவம் அவர்களின் அறியப்படாத தமிழகம் எனும் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் ஒரு வரி சொல்கிறார். அக்காலத்தில் தமிழர்களுக்கு முக்கிய ஊதியமாக உப்பும் அரிசியும் இருந்துள்ளது. பின்னர் ஊதியமாகப் பணம் வழங்கும் நிலை வந்தபோது அரிசியின் சம்பா என்ற பெயரும் உப்பு விளையும் களமான ஆளம் என்ற சொல்லும் இணைந்து சம்பளம் என்ற சொல் உருவானது என்கிறார். இதை நான் என் இலக்கிய நண்பருடன் பகிர்ந்தபோது அவர் அதை முற்றிலுமாக மறுத்தார். உப்புக்கு அப்படி ஒரு செல்வாக்கு இருந்திருக்க முடியாது. அது மலிவானது எளிதில் கிடைக்கக் கூடியது என வாதாடினார். என்னாலும் உறுதியாகச் சொல்ல முடியாததால் மௌனம் காத்தேன். ஆனால் எனக்கு விடை ஒரு சங்கப்பாடலில் இருந்து கிடைத்தது.


   
உமணர் தந்த உப்புநொடை நெல்லின்
அயினி மாஇன்று அருந்த நீவீக்   என்றவரி நற்றிணைப்பாடலில் வருகிறது. இதன் மூலம் இரண்டு புதிய விடயங்களை என்னால் அறிய முடிந்தது. ஒன்றாவது  உப்பு விற்பவர்களை சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கிறார்கள். மற்றது, உப்பு விலையும் நெல் விலையும் சமமாக இருந்திருக்கிறது. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. இதை இன்னும் உறுதி செய்ய அம்மூவனாரின் அகநானூற்றுப்பாடலை ஆராய்ந்த போது இப்படி ஒரு வரி வருகிறது ‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’

இதுபோன்ற பாடல்களின் நோக்கம் வரலாற்றைச் சொல்வதல்ல. காதலையும் வீரத்தையும் பாடும் போது வாழ்வில் கலந்திருக்கின்ற இதுபோன்ற கூறுகளும் உவமைகளாக இணைந்துவிடுகின்றன. ஆக, கவிதைகள் என்பது ஒருமுறை வாசித்து ரசித்துப்போகும் வரிகள் மட்டுமா எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். கவிதையில் சொல்லப்படுகின்ற மையத்தைத் தவிர்த்து அந்த மையத்தை நோக்கி உயிர்ப்புடன் பயணிக்க கவிஞன் உருவாக்கித்தரும் சுற்றுச்சூழலை அவதானிப்பதும் கவிதையை இன்னும் ஆழமாக உள்வாங்க உதவும்.

பவித்ரன் தீக்குன்னி மலையாளத்தில் மிக முக்கியமான கவிஞர்.அவரது கவிதை ஒன்று:

அம்மாவும் அக்காவும் குடிசையும்
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது
மண்ணெண்ணை மணக்கின்ற
இருட்டிலிருந்து
எழுந்துவந்த குழந்தை
இறைவனிடம் கேட்டது
ஒருபோதும் தேயாத ஒரு பென்சில்
வேண்டுமென்று
இறைவனும் நல்ல ஒரு பென்சிலை
கொடுத்துவிட்டுச் சொன்னான்
பத்திரமாக வைத்துக்கொள்
ஒரு போதும் எழுதக்கூடாது

இந்தக் கவிதை வறுமையை மிகத்துள்ளியமாய் நாம் அறிய உதவுவது எது. கவிதையில் காட்சிப்படுத்தப்படுகின்ற குடிசை மட்டுமா? நம் கவனத்தில் படாமல் சட்டென ஒரு காட்சியாக வந்துபோகும் ‘மண்ணெண்ணை மணக்கின்ற இருட்டிலிருந்து’ என்ற வரியே நாம் இந்தச் சூழலின் அழகியலை உள்வாங்க உதவுகிறது. கவிதை வாசிப்பு என்பது அதன் இறுதி நிலையை நோக்கிய நகர்ச்சியல்ல. மாறாக நல்ல கவிதை தனது ஒவ்வொரு வரியிலும் ஒரு வரலாற்றை, ஒரு காட்சியை, ஒரு படிமத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

சிவா பெரியண்ணன் மலேசியாவில் கவனப்படுத்தப்பட வேண்டிய கவிஞர்.ரேணுகா என்ற பெயரின் ‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’ எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். ‘இன்னமும்’ என்ற இவரது கவிதை இவ்வாறு தொடங்குகிறது…

அம்மா மடிக்கும்
நீள்சதுர வடிவிலான
வெற்றிலை அளவில்
ஒரு முட்டைத்துண்டு

இந்த ஒரு வரியைக் கொண்டு மலேசியாவில் வெற்றிலை உண்ணும் பழக்கத்தையும் இன்று நாசிலெமாக் எனும் உணவில் முட்டை மடிக்கப்பட்ட விதமும் என பல்வேறு காட்சிகள் வந்து போகின்றன. கவிதை நாசி லெமாக் குறித்தோ வெற்றிலை குறித்தோ சொல்ல வராவிட்டாலும் அது வரலாற்றில் ஒரு துண்டைச் சுமந்து வைத்துள்ளது. வாசகன் துள்ளியமான வாசிப்பின் மூலமே அதை அடைய முடியும்.

கவிதை வாசிப்பு ஒட்டுமொத்த உணர்ச்சியை நோக்கிய நுண்ணிய வாசிப்பென்றாலும் அதன் சொல்லாடல்களையும் கவனத்தில் கொள்வதன் மூலம் ஒரு காலத்தின் வரலாற்றை அறிவதுடன் கவிஞர்களின் அரசியலையும் ஓரளவு அறிந்துகொள்ள துணைப்புரியும்.

கவிதை வாசிப்பு என்பது காட்டில் யானையைப் பார்க்க பயணிக்கும்போது பூச்சிகளின் சத்தத்தையும், இருளின்   பயங்கரத்தையும் சுமந்து செல்வதுபோலதான். யானைப்பார்க்கும் முன் அவையே நம்மை அதன் மொத்த சிலிர்ப்பிற்குத் தயார்ப்படுத்துகின்றன. வாசகன் கவிதையில் இறுதி அர்த்தத்தைத் தேடிப்போவது மிருகக்காட்சி சாலையில் ஒரு பாறையாக மட்டுமே நிர்க்கும் யானையைப் பார்ப்பது போலதான்.

(Visited 404 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *