நவீன கவிதை வாசிப்பு : பகுதி 9

hqdefault

மா.சண்முகசிவா

நவீன கவிதைகள் போக்கில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தலித் கவிதைகள். தலித் என்பது மராட்டிய சொல். மராட்டியத்தில் உருவான தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி தலித் இயக்கமென்று பெயர் சூட்டிக் கொண்டது. இதன் பாதிப்பு ‘தலித் இலக்கியத்தை’ உருவாக்கியது. தங்கள் ஒடுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களைக் கண்டடைதல், போராட்டத்திற்காக தங்கள் உணர்வுகளை ஒருங்கிணைத்தல், தங்கள் பண்பாட்டுச் சிக்கல்களை ஆராய்தல் ஆகியவை தலித் இலக்கியத்தின் அடிப்படை நோக்கங்கள் எனலாம். தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றவை வாசக வகைப்படுத்தல்களுக்கும் அல்லது திறனாய்வுக்கும் தேவைப்படுகின்றன. என்னளவில் முதலில் அவை கவிதைகள். ஆனால் அவற்றுக்கென்று தனித்தனி அழகியல் உள்ளது.

தலித் அழகியல் தன்னைத்தானே நிறுவிக்கொள்கிறது. ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இலக்கியத் தரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனக்கென புதிய மொழியாடலை உண்டாக்கிக்கொள்கிறது. தலித் இலக்கியங்களை வாசிக்கும் போது தங்களுக்கு ஏற்படும் இழிவுகளையும், அவமானங்களை, எடுத்துப் பேசுகிற கலகமே அதன் அழகியலை உருவாக்குவதாகத் தோன்றுகிறது. கடந்த எட்டு வாரங்களாக நான் இந்த நிகழ்ச்சியில் சொல்லிக்கொண்டிருக்கும் கவிதைக்கான அத்தனை அம்சங்களையும் போட்டுடைக்கிறது தலித் இலக்கியம். மௌனம், நாசுக்காகக் கூறுதல், உணர்த்த விளைதல் என எந்த நுணுக்கமும் இல்லாமல் முகத்துக்கு நேரில் நின்று அது தனது கசப்பை சமூகத்தை நோக்கி வீசுகிறது. ஒரு தலித், தனது வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பிணமாக்கிப் புதைத்துவிட்டு, புதைக்கப்பட்ட பிணத்தின் மேட்டில் ரோஜா செடியை நட்டுவைத்து உலகுக்கு அழகு காட்ட முயல்வதே இல்லை.

இதற்கு ராஜ முருகுபாண்டியனின் கவிதை ஒன்று எப்போதும் உதாரணம் காட்டும் வலி மிகுந்த வரிகளைக் கொண்டது.

முதலாளியம்மாவின்
பழம் புடவை
அம்மாவிற்குப் புதுப்புடவை

அம்மாவின்
பழம்புடவை
அக்காவிற்குப் புதுப்பாவாடை

அக்காவின்
கிழிந்த பாவாடை
தங்கைக்குப் புதுத்தாவணி

தங்கையின்
கிழிந்த தாவணி
தம்பிக்குப் புதுக்கோவணம்.

இந்தக் கவிதையில் வறுமை மட்டும் தொய்ந்திருக்கவில்லை. ஒரு முதலாளியம்மாவில் பழைய புடவை தம்பியின் கோவணம் வரை ஒரு நீண்ட பயணம் செய்யும் தகுதி கொண்டுள்ளதையும் ஒரு கோவணத்துக்கு ஒரு முதலாளியம்மாவின் புடவை பழமையாக வேண்டியுள்ளதையும் பார்க்க முடிகிறது. இதை மீறி சில சமயம் ரௌத்திரத்தில் சீற்றம் கொள்ளும் கவிதைகளும் உள்ளன. தாங்கள் அழுத்தப்படும்போதும் தங்கள் அடையாளம் தகர்க்கப்படும் போதும் எழும் ரௌத்திரம் அது. என்.டி.ராஜ்குமாரின் ஒரு கவிதை அத்தகையது. வீரமும் யுத்தமும் திராவிடர்களின் ஆதி கலை என்கிறபோது அதை போதிக்க துரோணர் யார் என கேட்கும் ஒரு கலகக் குரல் அவருடையது.

தெரச்சிமீன் வாலெடுத்துச் சுழற்றும் அப்பன்
மான்கொம்பெடுத்து அப்பனுக்க அப்பன் வீசிய
அடவு முறையைச் சொல்லித்தருவான்
அப்பனுக்க அப்பனுக்க அப்பன்
ஆடுகளத்தில் மல்லுபிடிப்பான்
முன்னங்காலைத்தூக்கிமுட்டவரும்
வெள்ளைக்கிடாவின்
கழுத்தைக் கடித்தெடுத்துவீசிய கடுவாப்புலி
கம்புகளால்அம்புகள்செய்து
படைநடத்தியகதைகளைச்சொல்லுவான்
இன்னமும் மிஞ்சியிருக்கிறதிந்த
போர்க் குணமும் மானமும்
எங்களுக்குச்சொல்லித்தர அடவும்
தகுதியும் இல்லாத
துரோணா
மீள்முள் வாளெடுத்து
ஆமைத்தோடுகேடயம்செய்து
செறுத்தடிக்கும்
ஆயுதம்பிடிக்கத்தெரியாதவன் நீ.

மலேசியாவிலும் இவ்வாறான முயற்சிகள் நடந்துள்ளன. குறிப்பாக டாக்டர் சண்முகசிவாவின் கவிதைகளைக் கூறலாம். ‘பத்தாங்கட்டை பத்துமலை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைகள் பலவும் தலித் இலக்கியத்தின் வீச்சு கொண்டவை.

நெனவு தெரிஞ்ச நாளா
எங்க குடும்பமே
கும்பிட்டு வர்ற
எங்க குலசாமி … முனிசாமி
முண்டாசு, முறுக்கிய மீச
கையில அருவா
கம்பீரமா இருக்கும்
எங்க காவல் தெய்வம்
துடியான தெய்வம்னு
தாத்தா சொல்வாரு
காய்ச்சல்ல கிடந்த என்ன
காப்பாத்துன தெய்வத்த
கடப்பாறையில இடிச்சி
லோரியில தூக்கிப்போட்டு
போனானுங்க
ஊரே
“எங்க கடவுள காப்பாத்துங்களே”னு கத்த
முனி சாமி கம்பீரம் குறையாம
கண்ணிலிருந்து மறைஞ்சாரு…

வாசிப்புக்குத் தடை இல்லாத நேரடி கவிதையையாக இருந்தாலும் முனியாண்டி என்ற கம்பீரமான தங்களைப் பாதுகாக்கும் கடவுள் கோயில் உடைப்பில் எவ்வாறு அடையாளம் இல்லாமல் போகிறார் என்றும் அவரோடு தங்கள் அடையாளமும் எப்படி தகர்க்கப்படுகிறது என்றும் இக்கவிதை உணர்த்திவிடுகிறது.

கருப்பின கவிதைகளும் இவ்வாறானவைதான். தாங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக எழும் அவர்களின் கலகக் குரல்கள் இலக்கிய உலகில் கூர்மையாக அவதானிக்கப்படுபவை. “உங்கள் கருப்புத் தோல்களை உங்கள் உடம்பை மூடும் ஓர் அங்கியைப்போல் அணிந்து கொள்ளாதீர்கள். அதை ஓர் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்.” என்ற அவர்களின் பிரகடனத்தை அதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

கருப்பின கவிஞர்களில் மாயா ஏஞ்சிலோவை அறியாதவர்கள் குறைவு. இலக்கியம் மூலம் அரசியல் தளத்தில் இயங்கியவர். தனது சுயசரிதையின் மூலம் கறுப்பின மக்களின், ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். அவரது படைப்புகள் பரவலாக உலகம் முழுவதும் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவர் கவிதைகளில் ஒரு பகுதி இவ்வாறு ஒலிக்கிறது.
வரலாற்றின் அவமதிப்புக் குடில்களில் இருந்து

நான் உதித்தெழுவேன்.
வேதனை வேரூன்றிய இறந்தகாலத்தில் இருந்து மேலே
நான் உதித்து எழுவேன்.

நான் பரந்து அலைமோதும் ஒரு கரிய கடல்,
தாங்கியும் வீங்கியும் நான் அலையினில் பெறுவேன்.
பயங்கரத்தையும் பயத்தையும் கொண்ட
இரவுகளைப் பின்னுக்குத்தள்ளி
நான் உதித்தெழுவேன்.
அபூர்வமாய்த் தெளிந்த ஒரு வைகறைவேளையில்
நான் உதித்து எழுவேன்.
என் முன்னோர்கள் தந்த கொடைகளை அள்ளிக்கொண்டு,
நான் ஒரு கனவாகவும்
அடிமையின் நம்பிக்கையாகவும் இருக்கிறேன்.
நான் உதித்து எழுவேன்

ஒருவன் வலி ஏற்படும் போது ராகத்துடன் அழ முடியாது. வலியின் கூச்சல் எவ்வாறு குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டிருக்காதோ அதேபோல வலியில் உதிரும் தலித் கவிதைகள் வடிவமைதியையோ படிமங்களையோ கொண்டிருப்பதில்லை. ஆனால் அந்த வலியின் பேரழுகை நம்மையும் அழ வைக்கிறது. உண்மை எந்த கலையின் உத்தியைவிடவும் மேலனது.

(Visited 766 times, 3 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *