கொஞ்ச காலமாக முக நூலிலும் புலனத்திலும் கழுகு குறித்த ஒரு வீடியோ பதிவு தமிழில் பகிரப்பட்டு வருகிறது. அதில் சொல்லப்படும் அதி முக்கியமான விடயங்களைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கலாம்.
கழுகு நாற்பது வருடங்களில் இறக்கக்கூடியது. எனவே அது தன்னைத்தானே புதுப்பிக்க சில காரியங்களில் ஈடுபடுகிறது. முதலாவது, அது தன் அலகை உடைத்துக்கொள்கிறது. இரண்டாவது அது தன் நகங்களை சுயமாக கலற்றி எறிகிறது. அடுத்து தனது இறக்கைகளை பிய்த்து வீசிவிடுகிறது. பின்னர் இவை அனைத்தும் சுயமாக முளைக்கின்றனவாம். அதன் பின்னர் புது உற்சாகத்தோடு அது வானில் பறக்குமாம். கேட்குறவன் கேனையனா இருந்தா குதிரை கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்து தூங்குமுன்னு சொல்லிடுவாங்க போல.
கழுகு குறித்த முதலில் சில அறிவியல் பூர்வமான உண்மைகளைப் பார்ப்போம்.
1. கழுகு 30 வருடங்கள் மட்டுமே வாழும். உணவு மற்றும் வாழும் இடம் அடிப்படையில் அதன் ஆயுள் கொஞ்சம் நீளலாம்.
2. பறவைகள் அனைத்திற்கும் இரு பக்க இறக்கைகளும் ஒரே அளவில்தான் இருக்கும். அதே போல கழுகுக்கு இறக்கை உதிரும்போது (நமக்கு முடி உதிர்வதுபோல இயல்பாக உதிர்வது) சமமாகவே இரு பக்கமும் உதிரும். இந்தப் பக்கம் இரண்டு இறகு என்றால் அந்தப்பக்கமும் இரண்டுதான். ஆனால் அது தன் இறகுகளை பிய்த்துப் போடுவதில்லை. காரணம் அதன் இரத்த நாளங்களோடு இணைந்திருந்தும் இறகுகளைப் பிய்த்தால் இரத்தப் போக்கு ஏற்பட்டு கழுகு இறக்க நேரும். அதன் இரத்த நாளங்கள் பெரியவை.
3. கழுகு ஒரு வேட்டை விலங்கு. வேட்டை விலங்குகள் வேட்டையாடியே உணவை தேடும். பழம் தின்று வாழாது. நகங்களும் அலகும் கழுகின் உடலில் இருந்து நீக்கப்பட்டால் அது மீண்டும் முளைத்துவர அதிக நாள்கள் ஆகலாம். அத்தனைக் காலம் ஒரு விலங்கு உண்ணாமல் இருந்தால் அது இறந்துவிடும் என்பது மிகச்சாதாரண அறிவு. ஆக, கழுகு தன் நகங்களையும் அலகையும் உடைத்துக்கொள்வதெல்லாம் கற்பனை மட்டுமே. (ஒருவேளை கருடனை கடவுளோடு சம்பந்தப்படுத்தி அது விரதம் எடுக்கிறது என நீங்கள் நம்பினால் நான் அந்த விவாதத்திற்குள் வரவில்லை.)
4. பொதுவாகவே கழுகு கரடு முரடான கல்லில் தன் அலகைத் தீட்டி கூர் செய்யும். மாமிசம் உண்டப்பின்பும் அவ்வாறு தீட்டுவது உண்டு. உடைத்துக்கொள்ளும் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
கழுகு குறித்த அந்தக் காணொலியெல்லாம் நமது கற்பனைகளால் சுயமாக தன்முனைப்பை எற்றிக்கொள்ள செய்யும் மூட நம்பிக்கை மட்டுமே. இந்த மூட நம்பிக்கையை நமது பள்ளிகளில் ஒளிபரப்புவதும் பிறருக்குப் பகிர்ந்து உற்சாகப்படுவதெல்லாம் அறிவுடமையா என யோசிக்க வேண்டியுள்ளது. அதுவும் ஆசிரியர்கள் இதுபோன்ற போலி வீடியோகாட்சியைப் பள்ளிகளில் ஓட்டிக்காட்டுவது எவ்வாறான சமூகத்தை உருவாக்கும் என யோசிக்க வேண்டியுள்ளது.