நவீன கவிதை வாசிப்பு : பகுதி 10

kalapriyaநவீன கவிதைகளின் வாசகர் என ஒருவர் தன்னைச் சொல்லிக்கொண்டால், நான் அவர் சில கவிஞர்களை வாசித்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதுண்டு. உண்மையில் தமிழ் இலக்கியத்தில் அதிகமாகக் கவிதைகள்தான் எழுதப்படுகின்றன. எளிய வடிவம் என  நம்பி இலக்கியத்தில் நுழையும் பலர் கையாள நினைப்பது கவிதையாக உள்ளது. இவ்வாறான சிறுபிள்ளைதனமான முயற்சியில் ஒவ்வொருநாளும் பல கவிதை தொகுப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. ஒரு வாசகன் இவ்வாறு குவியும் அனைத்து கவிதை நூல்களையும் வாசித்து முடிப்பதென்பது சாத்தியமில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகத் தொன்மையான கவிதை மரபைக் கொண்ட தமிழ் மொழியில் ஒருவன் கவிதைகள் வழி தன்னை தனித்து அடையாளம் காட்டுவதை சாதனை என்றே சொல்வேன். அத்தகையச் சாதனைக்குறியவர் கவிஞர் கலாப்ரியா.

நாம் அனுமதிக்காவிட்டாலும் எந்த உறுத்தலையும் தராமல் நமது நாசிக்குள் நுழையும் மெல்லிய மணம் போலதான் கலாப்ரியா கவிதைகள். நீங்கள் அதை வாசிக்கத் தொடங்கும்போதே அது உங்களுள் வந்து வசதியாக அமர்ந்துகொள்ளும். 2005ல் கலாப்ரியா மலேசியா வந்திருந்தபோதுதான் அவரது கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. ‘ஸ்ரீபத்மனாபம்’ என்ற கவிதை அந்த வயதில் பெரும் திடுக்கிடலைக் கொடுத்தது. பல ஆண்டுகள் கடந்து இன்றும் அக்கவிதை அதே சுவாரசியத்தைக் கொடுப்பது ஆச்சரியம்.

தவத்தை விற்று
வரம் வாங்கினோம்
’அப்பாவின் பிணம் அழுகக்கூடாது
அழுகவே கூடாது.’

பட்டுப்பழகின
கடவுள் தந்தான்
’ஆனால் நாற்றமெடுக்கும்’ எனச்
சொல்லி மறைந்தான்.

குடும்பத்தில் சிலர்
பிணத்தை தொடுவதில்லை
அம்மாவுக்கு சௌகரியமாப் போச்சு
’விற்று வந்த’ காசுகளை
பிணத்தின் மடியில்
ஒளித்து வைப்பாள்.

ஒரு நாள் மட்டும்
பிணத்தினருகே படுக்க
யாருக்கும் விருப்பமின்றி போக
அதை தூங்கி
உத்திரத்தில் கட்டிவைத்தோம்
(ஒற்றுமையாய்).

நெஞ்சில் ஆறாமலே போன
புண்ணொன்றில்
ஊது பத்தி குத்தி வைக்க மட்டும்
நான் அருகே போவேன்.

எட்டாத ஸ்விட்சைப் போட
தம்பி
அப்பாவின் மேல் ஏறுவது
வழக்கமாபோச்சு.

யாரும்
எதுவும் வீட்டுப்பக்கம்
வருவதேயில்லை.
(போஸ்ட்மேனுக்கு – இந்த
அவசியமில்லாமல் போச்சு)
ஆனாலும் சில
பிணந்தூக்கிகளும்
சாஸ்திரிகளும்
அடிக்கடி
வந்து போகிறார்கள்
இன்னும் நம்பிக்கையாய்

இந்தக் கவிதை பல்வேறு உணர்வலைகளை எழுப்பக்கூடியது. மேலோட்டமாக வாசிக்கும்போது அன்பு என்பதை கேள்விக்குட்படுத்தும் போக்குப்போல இருந்தாலும் உடல் என்பது பெரிய அர்த்தமில்லாமல் போவதை துள்ளியமாக உணரவைக்கும் கவிதை இது. மொத்த தவத்தினையும் விற்று அப்பாவின் இறந்த உடல் அழுகாமல் பாதுகாக்க நினைக்கும் குடும்பம், அவ்வாறு நடந்தும் பிணமான அழுகாத உடலை காலப்போக்கில் ஒரு சுமையாகவும் இறுதியில் அதை தளவாடப்பொருள்களில் ஒன்றுபோலவும் உபயோகிக்கத் தொடங்குவது, வெறும் உடலுக்கு எப்போதுமே மதிப்பில்லை என்பதையும் ஆனால் நமது மொத்த சிந்தனையும் அது குறித்து மட்டுமே வாழும் காலத்தில் வட்டமடிப்பதையும் எள்ளல் செய்வதாய் உள்ளது.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு  ஒழிந்தார்களே.

எனக்குப் பிடித்த திருமந்திரத்தில் ஒன்று இது. வாழ்வையும் வாழ்வைச் சுமந்து செல்வதாக நம்பப்படும் உடலையும் ஒருகணம் அர்த்தமற்றதாக மாற்றும் பாடல். கலாப்ரியா கவிதை அங்கதம் தொணிக்க அதீதமான கற்பனையில்  சொல்லப்படுவதே வாசிப்பு சுவாரசியத்தைக் கூட்டுகிறது.  புறநிலையில் காட்டப்படும் அவ்வதீதத்தின் மூலம் அகநிலையிலும்  ஆழ பயணிக்கிறார். மலேசியாவில் அகிலன் அவ்வாறு எழுதிய கவிதை மிக பிரபலமானது. ‘எனக்கான முகம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட அக்கவிதை மலேசியாவில் நான் முதல் நவீன கவிதை தொகுப்பாக நம்பும் ‘மீட்பு’ எனும் கவிதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

எல்லோரும்agilan
நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
சிந்திய என் முகத்தை
அவரவர் பாத்திரங்களில்

எனக்கான முகத்தை
தற்காலிகமாக தருகிறார்கள்
அவரவர் தாகம் தணியும் வரை

உதட்டில் கொஞ்சம்
மேசையில் கொஞ்சம்
பாத்திரத்தின் விளிம்புகளில் கொஞ்சம்
தெரித்து விழும் எச்சிலில் கொஞ்சம்
தரையில் கொஞ்சமென
சிந்திய பகுதிகளிலிருந்து
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கான முகத்தை

அகிலன் போல நவீனக் கவிஞர்கள் பெரும்பாலோர் தங்கள் கவிதைகளில் ஏற்படுத்தும் அதீத கற்பனைகள் மூலம் ததும்பும் மன உணர்வுகளையே சொற்களாக்க விளைகின்றனர். இந்தப் பூடகமான உணர்வுகளை  ஆரம்பகால வாசகன் உள்வாங்குவதில் சிக்கலை எதிர்க்கொள்வது இயல்புதான். ஆனால், கலாப்ரியா தொடக்க கால வாசகர்களுக்கும் ஏற்ற கவிஞராக இருப்பதுதான் ஆச்சரியம்.

நவீன கவிதைகள் சிக்கலானவை என்ற மனப்பதிவு உள்ளவர்கள் கலாப்ரியா கவிதைகளைப் படிக்கும் போது எதுவும் தெரியாமல் குழம்ப நேரலாம். அவரது நேரடியான எளிய வரிகளுக்குள் வேறொரு அர்த்தம் இருப்பதாகத் தேடி தேடி  அலுத்துப்போகலாம். அல்லது புதிய அர்த்தங்களையும் கண்டடையலாம். அது கலாப்ரியாவின் சிக்கல் அல்ல. அவர் ஒரு புகைப்படக் கலைஞன் போல கவிதைகளைக் காட்சிகளாக்குகிறார். ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்து செல்வதை மட்டும் புகைப்படமாக்காமல் அதன் மெல்லிய இறகின் அசைவில் உருவாகும் சின்னஞ்சிறிய  காற்றின் மோதலையும் அவரால் தன் கவிதைகள் மூலம் புகைப்படமாக காட்சிப்படுத்த முடிகிறது.

‘அந்திக் கருக்கலில்’ எனும் கவிதை பலராலும் சிலாகிக்கப்படுவது.

அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை

நவீன கவிதைக்கே உரிய உணர்வெழுச்சியும் அதே சமயம் அதிராத மொழியையும் இணைந்த கச்சிதமான அம்சம் கொண்ட வரிகளாகவே இதை மீண்டும் மீண்டும் வாசிக்க முடிகின்றது. ஒருபுறம் துயரத்தின் தவிப்பு மற்றுமொரு புறம் இயலாமையில் பதற்றம். ஆனால் அழுதுமுடித்தப்பின் வெளிபடும் கரகரத்த குரல்போல கவிதை. கலாப்ரியா இன்றளவும் தீவிரத்துடன் எழுதிவரும் கவிஞர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குள் அவர் கவிதைகளின் போக்கை தீர்மாணிக்க இயலாவிட்டாலும் அவர் கவிதைகள் பெரும்பாலும் வாழ்வை ஒரு பார்வையாளனாகப் பார்ப்பதில் உருவாகுபவை எனக்கூறலாம்.

கொலு வைக்கும்
வீடுகளில்
ஒரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கையைத்
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்

கலாப்ரியா தமிழகத்தில் உள்ளவராக இருந்தாலும் அவர் காட்சிப்படுத்தும் இந்தச்சூழல் நமக்கும் பொருந்தியே போகிறது. ஒருவகையில் இது நமது அனுபவமாகவும் இருக்கிறது. ஆச்சரியமாகச் சில கவிதைகளில் இவ்வாறு நேர்கிறது. சக மனிதனின் வாழ்வையும் வலியையும் உணர்பவரால் மட்டுமே இதுபோன்ற காட்சிகளை கவிதையாக்க முடிகிறது. கவிதையாகும் ஆழத்தில் அது கவிஞர்கள் மனதில் பதிகிறது. கலாப்ரியா மனிதர்களை நேசிப்பவர். அவரிடம் கவிதைகள் வற்றுவதில்லை.

(Visited 2,728 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *