இந்த நூல் குறித்து பல்வேறு ஆளுமைகள் மத்தியில் நல்ல பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில் இந்நூல் குறித்து கொஞ்சம் விளக்குங்கள்?
ம.நவீன் : கலை வெளிப்பாட்டுக்கான மனம் படைத்த ஓர் ஆசிரியர் தனது அத்தனை கலைத்தன்மைகளையும் மூட்டைக்கட்டி ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு நடப்பு சூழலில் உள்ள கல்வித்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்போது ஏற்படும் கட்டுக்கடங்காத மன உளைச்சலில் தனது கடந்த கால பணியின் பசுமையை நினைத்துப்பார்ப்பதாக இந்த நூலை எண்ணிக்கொள்ளலாம்.
நடப்புச்சூழலில் அப்படி என்ன கசப்பு உங்களுக்கு?
ம.நவீன் : கசப்பு என இல்லை. பொதுவாகவே எனக்கு தேர்வு பிடிக்காது. தேர்வு ஆளுமைகளை உருவாக்குவதில்லை என நம்புபவன் நான். ஆனால் காலமும் சூழலும் சந்தர்ப்பமும் என்னை ஓர் சராசரி ஆசிரியராக மாற்றும்போது மனநிலையில் ஒருவனாகவும் அறிவு நிலையில் வேறொருவனாகவும் மாறி மாறி என்னை உணர்கிறேன். இது என்னை கண்டிப்பான ஓர் ஆசிரியராக மாற்றுகிறது. எனக்கு அந்த ஆசிரியரைப் பிடிப்பதில்லை.
மெதுநிலை மாணவர்களின் சூழலை எழுத்தில் கொண்டுவந்துள்ள இந்நூல் தமிழ்ச்சூழலுக்குப் புதிது என பேசப்படுகிறது. இந்நூலை எழுத என்ன காரணம்?
ம.நவீன் : பள்ளியில் படிக்கும் போது நானும் ஒரு பின் தங்கிய மாணவன்தான். வார்த்தைக்கு வார்த்தை திக்குவேன். அதனால் நிறைய அவமானங்களைச் சந்தித்ததுண்டு. வேறு யாரைக்காட்டிலும் எதைக்குறித்து பேசும் , விவாதிக்கும் ஆற்றல் இருந்தும் மௌனமாக இருப்பது கொடுமையாக இருக்கும். நான் தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்கியே இருப்பேன். இன்று அவ்வாறு வகுப்பில் கடைசி நாற்காலியைத் தேர்வு செய்யும் ஒரு மாணவனின் நியாயத்தை என்னால் ஓரளவு உணர முடிகிறது. அப்போதெல்லாம் கடைசி நாற்காலியில் தொடை நடுங்க அமர்ந்திருக்கும் என் இறந்தகாலம் நினைவுக்கு வரும். இந்த நினைவுகளை எழுதத் தூண்டியவர் வழக்கறிஞர் பசுபதி. சிலர் கேட்டால் நாம் மறுக்கமாட்டோம். அவர் விழித்தெழு இதழுக்காகக் கேட்டார். நான் எழுதினேன். மற்றபடி ‘தமிழில் முதன் முறையாக’ என கூவி கூவி விற்கும் உத்தி இல்லை.
முன்னுரையில் உங்களைப் பின் தங்கிய ஆசிரியராக சுய விமர்சனம் செய்துள்ளீர்கள். ஏன்?
ம.நவீன் : உண்மையில் நான் பின் தங்கிய ஆசிரியர்தான். எனக்குக் கோப்பு வேலைகள் எல்லாம் முறையாகச் செய்யத் தெரியாது. பத்து வருடங்களுக்கு முன் பணியில் கையெழுத்திட்ட முதல் நாள் என் தலைமை ஆசிரியரிடம் “என்னிடம் இந்த கோப்பெல்லாம் தராதீர்கள். தலையைச் சுற்றும். மற்றபடி வாரத்தில் எத்தனை வகுப்புகள் வேண்டுமானாலும் தாருங்கள் ” என்று கூறிய வெகுளியான இளம் ஆசிரியர்தான் இன்னமும் எனக்குள் இருக்கிறான். எனக்குக் கோப்புகளைத் தெரியாது . ஆனால் மாணவர்களைத் தெரியும். இப்போது கோப்புகளையும் சுமப்பதால் எதுவுமே சரியாகத் தெரிவதில்லை.
இதற்கு யாரைக் குறை சொல்வது?
ம.நவீன் :யாரையும் சொல்ல முடியாது. உண்மையில் அவரவர் தத்தம் கடமைகளைச் செய்கிறார்கள். நான் ஆசிரியர் என்ற முறையில் அதற்கேற்ப மாற வேண்டியுள்ளது. ஆனால் நான் முழுமுற்றாக ஒர் எழுத்தாளனாகவே உணர்கிறேன். அப்படி இருக்க முடியாது என்ற நிதர்சனமே கொடுமையானது.
உண்மையில் பல ஆசிரியர்கள் இந்நாட்டில் எழுத்தாளர்களாக உள்ளனரே. அதிகம் இலக்கியத்தில் ஈடுபடுவதும் அவர்கள்தான்.
ம.நவீன் : சமூகத்தில் நடக்கும் அத்தனைச் சூழலையும் ஒப்புக்கொண்டு அதை பதிவாக்குவதற்கும் அதில் உள்ள அத்தனை உள் அரசியல்களையும் கலைத்துப்போட்டு எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் சொல்வதுபோல நம் நாட்டில் நிறைய ஆசிரியர்கள் எழுத்தாளர்களாகத் தங்கள் பணிகளைத் திறம்பட செய்கிறார்கள். ஏற்கனவே சமூகத்தில் நிறுவப்பட்டுவிட்ட ஒழுக்கம், அறம், வாழ்வியல் நீதி என அவர்கள் தங்கள் படைப்புகளில் மீள் பதிவு செய்கிறார்கள். அதை தவறென்று கூறவில்லை. ஆனால் நான் அவற்றை எழுதுபவன் அல்ல. என் பணி அதுவல்ல. என்னை ஏற்றுக்கொள்பவர்கள் மிகக்குறைவு என எனக்கு நன்றாகவே தெரியும். எல்லாவற்றை ஒட்டியும் எனக்கு இன்னொரு பார்வை உண்டு. அது பொதுபரப்பில் சகித்துக்கொள்ள முடியாதது.
மெதுநிலை மாணவர்களைப் பற்றிய உங்கள் தனிப்பட்டக் கருத்தென்ன?
ம.நவீன் : இந்த நூல் முழுக்க அதைப்பற்றிதான் பேசியுள்ளேன். உண்மையில் மெதுநிலை மாணவர்கள் என ஒரு சமூகம் இல்லை என்பதே என் வாதம். மட்டுப்படுத்தப்பட்ட நமது கல்விச்சூழலில் அவர்களின் திறனை அளக்கும் கருவி இல்லை என்பதே இங்கு குறைபாடு. ஆனால் தேர்வும் கல்வித்திட்டமும் அவர்களை எவ்வாறு புரக்கணிக்கிறது என்றும் என்னைப்போன்ற ஆசிரியர்கள் எவ்வாறு இறுக்கமாகி வருகிறார்கள் என்பதற்கும் இந்நூல் ஒரு சாட்சியாக இருக்கும்.
மை ஸ்கிலுடன் இணைந்து இந்நூலை வெளியிடக் காரணம் என்ன?
ம.நவீன் : சமகாலத்தில் மிக தேவையான ஓர் அமைப்பாக நான் மை ஸ்கீல் அறவாரியத்தைக் கருதுகிறேன். அவர்களோடு பயணிக்க விரும்புகிறேன். இந்நூலில் வரும் விற்பனை தொகை முழுக்கவும் அவர்கள் உருவாக்கப்போகும் கல்லூரிக்குத் தர எண்ணுகிறேன். இது உதவியல்ல. சமூகத்துக்கு ஒரு குழுவினர் மிக உண்மையாகச் செய்யும் சேவைக்கு நாமும் உடன் இருக்கிறோம் என்ற திருப்திதான். அதோடு என்னைப்போன்ற ஆசிரியர்களால்தானே ஒரு மாணவனின் திறன் கண்டுப்பிடிக்கப்படாமல் அமிழ்ந்து போகிறது. ஒரு விதத்தில் அந்தக் குற்ற உணர்ச்சியும்கூட காரணமாக இருக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் உள்ளடங்கியுள்ள வேறு சிறப்பு அம்சங்களைக் கூறுங்கள்.
ம.நவீன் : இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இரு பேராசிரியர்கள் வருகிறார்கள். பேராசிரியர் நுஃமான் மற்றும் பேரசிரியர் வீ.அரசு ஆகியோர் உலகச் சூழலில் இன்றையக் கல்வியின் நிலை குறித்து பேசுவார்கள். அதே சமயம் கவிஞர் கலாப்ரியா இந்நிகழ்ச்சியில் எனது நூல் குறித்து விமர்சனம் செய்கிறார். சிறப்பங்கமாக இயக்குனர் சஞ்சை குமார் பெருமாளின் முதல் திரைப்படமான ‘ஜகாட்’ முன்னோட்டம் இந்நிகழ்வில் அறிமுகம் காண்கிறது. கல்விச்சூழலின் சிக்கல்களை விமர்சனப்பூர்வமாக அணுகியுள்ள இப்படம் மலேசியத் திரைப்படச் சூழலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுக்கும் என்பது உறுதி.
நிகழ்ச்சி விபரங்கள்:
சிறப்புரை
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை
பேராசிரியர் வீ.அரசு, தமிழ்நாடு
ம.நவீன் நூல் வெளியீடு
நூல் விமர்சனம்
கவிஞர் கலாப்ரியா, தமிழ்நாடு
திரைப்படத்தின் முன்னோட்டம்
சஞ்சை குமார் பெருமாளின்
‘ஜகாட்’
இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி
திகதி : 11.10.2015 (ஞாயிறு)
நேரம் : 3.30 – 5.30
சந்திப்பு : தயாஜி