மலேசியா போன்ற நாட்டில் வாழும் நமக்கு போர் என்பது ஒரு செய்தி மட்டுமே. ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றுவதன் மூலமாக நம்மால் சட்டென அவ்வுணர்வில் அழவும் விடுபடவும் முடிகின்றது. ஆனால் பல ஆண்டுகள் போரைச் சுமந்து நின்ற ஒரு நிலத்தில் வாழ்கின்ற கலைஞர்கள் மொழியும் அதன் வெளிபாடும் என்னவாக இருக்கும் என வாசிப்பதும் உள்வாங்குவதும் ஒரு வாசகனின் முக்கிய பரிணாமம். தமிழ் இலக்கியத்தில் அத்தகைய முக்கிய நிலமாக ஈழம் உள்ளது. தமிழகத்தைப் போலவே நீண்ட நெடிய இலக்கிய வரலாறு இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு இருந்தாலும் போர் அந்தத் தொடர்ச்சியை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை அறிய வேண்டியுள்ளது.
போர் போன்ற வாழ்வின் உக்கிரமான நிகழ்வுகளில் கலைஞர்கள் வரலாற்றின் ஒரு சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களது அழுகையும் கண்ணீரும் திரளான சனங்களின் ஓலத்தின் வெடிப்பில் அவ்வளவு எளிதில் ஓய்வதில்லை. அது வேறொன்றாகப் பரிணாமம் எடுக்கிறது. சில சமயம் அது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. சில சமயம் அது அவர்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது. சில சமயம் அது அவர்களின் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடாய் இருக்கிறது.
ஈழப்போரில் யாழ் பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டது மிக முக்கியமான ஓர் வரலாற்று அழிப்பு. ஈழத்தில் மிக முக்கிய ஆளுமையான பேரசியர் எம்.ஏ.நுஃமான் அந்தச் சம்பவம் குறித்து எழுதிய ‘புத்தரின் படுகொலை’ என்ற கவிதை மீண்டும் மீண்டும் தமிழ்ச்சூழலில் வாசிக்கப்பட்டு வருகிறது.
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.
‘இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்…
என்றனர் அவர்கள்.
‘சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை‘
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.ச்
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பலானது.
பொதுவாகவே இலக்கிய வாசகர்கள் புரட்சிக்கவிதைகளைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தில் வானம்பாடி என்ற கவிதை மரபினரின் போலியான புரட்சி கவிதைகள் ஏற்படுத்திய திகட்டல் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் உலக அளவில் புகழ்ப்பெற்ற கலீல் கிப்ரான், பாப்லோ நெருதா போன்றவர்கள் நிறையவே புரட்சிக் கவிதைகளை எழுதியுள்ளனர். தமிழில் கவித்துவத்துடன் மிக முக்கியமான புரட்சிக்கவிதைகளை எழுதியவராக கவிஞர் சேரனைக் கூறலாம். போர் கொடுக்கும் உக்கிர அனுபவம் புரட்சியின் எழுச்சியை ஏற்படுத்தும் அதே வேளை கவித்துவத்தையும் இறுக்கப்பிடித்துள்ளது.
அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.
மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.
இம்முறை தெற்கிலே –
என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.
கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
எரிந்து சாம்பலான தெருக்கலில் இருந்து எழுந்து வாருங்கள் என்ற புரட்சியின் குரல் அப்போதையச் சூழலில் எவ்வாறான உணச்சி அலையை ஏற்படுத்தியிருக்கும் என கற்பனை செய்வது சாத்தியம் அற்றது. சேரனைப் போலவே ஈழ கவிதை உலகில் தவிர்க்க முடியாதவர் வ.ஐ.ச ஜெயபாலன். ‘ஓர் அகதியில் பாடல்’ என்ற அவரது கவிதை இழப்பின் வலியில் தொடங்கி இருத்தலுக்கான அழைப்போடு முடிகிறது. போர் மண்ணில் மட்டுமே கேட்கக்கூடிய குரல் இது.
எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இல்லம் மீழ்தலாய்
மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்
சுதந்திர விருப்பாய்
தொடருமெம் பாடல்.
புரட்சி மனநிலையில் கவித்துவம் இணைவது பற்றி பலருக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால் சூழலும் அந்தச் சூழலில் ததும்பும் மனநிலையில் வசமாகக்கூடிய சொற்களுமே அவ்வாறான கவிதைகளின் அழகியலை தீர்மாணிக்கிறது. ஈழ கவிஞர்களில் கருணாகரனின் பல கவிதைகளை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போரின் வலி சட்டென மனதில் அப்பச்செய்யும் வல்லமை அவர் சொற்களுக்கு உண்டு. ‘பலி’ என்ற கவிதையில் அவரின் சொல்லாடல்கள் எளிதெனினும் அது வாசகனைக் கதிகலங்க வைப்பது அதன் உண்மைத் தன்மையால்தான்.
இப்போது
ஒரு சொல்லுக்கும் மதிப்பில்லை
கண்ணீர் மிக்க ஒளியுடையதாகக் கண்டேன்
மண்டியிட்டழுகின்றேன் பீரங்கியின் முன்னே
வெட்கம்தான் என்றபோது
யாரையும் காப்பாற்ற முடியவில்லை
யாருடைய கண்ணீரையும் துடைக்கவும் முடியவில்லை
கண்முன்னே
பலியிடப்படுகின்றன கனவுகளும் நம்பிக்கைகளும்
கவிதையில் இருக்கும் இந்த உண்மைத்தன்மையை அறிய ஒரு வாசகனால் எப்படி முடியும் என்ற கேள்வி எழலாம். வாசகனாக இருந்தால் நிச்சயம் முடியும் என்பதே பதில்.