தமிழ் இலக்கியம் வாழும் நாடுகளில் சிங்கப்பூர் சற்று வித்தியாசமான பின்னணியைக் கொண்டது. சிங்கப்பூரை ஒரு ‘டிரான்ஸிஸ்ட் சிட்டி’ அதாவது பயணத்தின் இடையில் தங்கிச் செல்லும் ஒரு நகரம் எனச் சொல்லலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துப் போய்க் கொண்டிருக்கும் அந்த நகரத்தில் அவரவர் தங்களால் ஆன பங்களிப்பைச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குத் தருகின்றனர். அதேபோல சிங்கையில் பிறந்து அந்நாட்டு கலை இலக்கியத்தில் இயங்கும் தீவிரமான படைப்பாளர்களும் உள்ளனர். சிங்கப்பூரிலேயே பிறந்து அந்நாட்டிலேயே வளர்ந்து எழுதத் தொடங்கிய தலைமுறையினரில் இளங்கோவன், ரெ.பாண்டியன் இருவரையும் குறிப்பிடலாம்
மலேசியா மற்றும் சிங்கைச் சூழலில் தனித்த ஆளுமை கொண்டவர் சிங்கை இளங்கோவன். இவ்விரு நாடுகளிலும் புதுக்கவிதைக்கான முன்னோடி. உலக அளவில் மிக முக்கியமான நாடக இயக்குனராக இருக்கும் இவரின் ஆற்றல் இன்று அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய கடப்பாடு கலை இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு உள்ளது.
என்றுமே ஒரு நிலத்தில் இலக்கியம் வளர ஒரு தொடக்கம் அவசியம். இளங்கோவன் ஒரு தொடக்கம். 1979ல் வெளிவந்த அவரது ‘விழி சன்னல்களின் பின்னாலிருந்து’ என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் பலவும் புறவயமானவை. வாசகனிடம் நேரடியாய் பேசுபவை. புரட்சியை விதைப்பவை. உஷ்ணத்தைக் கக்குபவை. இன்று நவீன கவிதை வாசகன் ஒருவன் அதில் உள்ள சத்தம் சங்கடத்தைக் கொடுக்கலாம். அதில் ஒட்டியுள்ள படிமமும் உவமையும் இன்றைய வாசிப்புக்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால் இளங்கோவன் கவிதைகளில் நான் அதிகம் விரும்புவது அதில் எப்போதுமே தொணிக்கும் அங்கதம். எதிராளியைப் பார்த்தது அடிவயிற்றிலிருந்து காற்றை நாசிக்குத் தள்ளி உதட்டோரம் கிண்டலாய் சிரித்து பலவீனமாக்கும் தொணிதான் இளங்கோவனுடையது.
என் வீட்டுக் கூரைக்கும்
எனக்குமிடையே
இருக்குந்தூரம்
எனக்கென்ன தெரியும்?
உச்சிப் பருந்தும் நானும்
உச்சு கொட்டிக் கொள்வது
மட்டும்
காற்று
கறக்கும் – என்கிறார் ‘மௌன வதம்’ கவிதையில்
ரெ.பாண்டியனின் கவிதைகள் தனித்துவமானவை. ஒருவாசகனாக மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய கவிதைகள் என அவற்றைச் சொல்வேன். நவீன கவிதையின் மொழியும் நுட்பமும் அவர் கவிதைகளில் ஒருங்கே இணைந்திருக்கின்றன.
பிடிமானம்
ரயிலில் உட்கார இடமில்லாமல்
கைப்பிடி புரம் நின்றிருந்தார்
கதவு திறந்ததும் மூட்டைகளோடு
உள்நுழைந்த அந்நிய ‘பங்களா’ ளைஞன்
பத்திரமாக ஒதுங்க இடம்தேடி
கிழவரின் மூலையில் ஒதுங்கினான்.
என் இடத்தை பிடிக்கிறாயே முட்டாள் என ஆங்கிலத்தில் திட்டி
இன்னொரு பிடி தேடி ஒதுங்கினான் கிழவன்
எதிர்வினையை எதிர்பார்த்து
திரும்பி பார்த்தான்
எந்த நிறுத்தத்தில் இறங்குவதென
அறிவிப்பு பலகையை பதட்டதுடன்
பார்த்தபடி இருந்தான் இளைஞன்
‘நல்ல புரம்’ கிடைத்த ஆறுதலுடன்
ஆங்கில பரிச்சயமோ வசையின் பரிச்சயமோ அற்ற முகத்துடன்
யாருடைய முகமும் பார்க்காமல்
புகுந்து இடம் பிடிப்பதுதான் சமர்த்து
என்பது
அவன் அனுபவமாய் தெரிந்தது
என் பக்கம் வசதியான பிடி ஒருப்பதை பார்த்து
அருகே நகர்ந்தான் கிழவன்
இயலாமையோடு.
வழிவிட்டதற்கு நன்றி சொன்னான்
இது ஒருவகையில் அரசியல் கவிதை. சிங்கை வாசிகளின் உரிமை அந்நியத்தொழிலாளர்களால் நாசுக்காக பிடுங்கப்படுவதை ஆழ்ந்து கவிதையை வாசிப்பதன் வழி அறியலாம்.
இன்று வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் அதிக அளவில் சிங்கப்பூரின் கவிதை உலகுக்கு உரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களது படைப்புகளே அதிக அளவில் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளிவருகின்றன. அதிக அளவில் நூல்களும் வெளியிடுகின்றனர். இந்த வரிசை நீளம் என்றாலும் குறிப்பிட்டு சொல்லும் படைப்பாளிகளாக லதா மற்றும் இந்திரஜித்தைச் சொல்லலாம்.
தன் கவிதைகள் மூலம் தன் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் லதா. ஈழத்தைப் பின்புலமாகக் கொண்ட இவர் இப்போது 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கையில் வசித்து வருவதால் இவரது பல கவிதைகளும் அந்த நிலத்தை மையப்படுத்தியவையாகவே உள்ளன. அதே சமயம் நவீன கவிதைக்கே உரிய வடிவமைதியும் நுட்பமான இடைவெளியும் லதாவின் கவிதையில் தொய்ந்துள்ளது.
சிங்கை போன்ற அசுர வளர்ச்சி அடைந்த ஒரு நகரத்தில் மனிதத் தன்மை தக்க வைத்துக்கொள்ள அவர் போடும் பட்டியல் கவித்துவமானவை.
ஓய்ந்துபோன மழையின்
தேங்கி நிற்கும் சில
இலை நீர்த் துளிகள்
புல்வெட்டி மிஷினுக்குத் தப்பி
கண்சிமிட்டி நிற்கும் ஒரு
பொன்னாங்கண்ணி
பதினேழாம் மாடிச் சாடியில்
ஒற்றை மொட்டைச்
சுற்றி வரும் வண்ணத்தி
தவறும் போதெல்லாம் லேசாய்
பயமுறுத்தும்
பாட்டி சொன்ன
நரகலோகத் தண்டனைகள்
துக்கமான இரவிலும்
சிரிக்க வைக்கும்
சிறுவயதுத் தவறுகள்
பயங்கள் குட்டிச் சண்டைகள்
இப்படி ஒரு சின்னப் பட்டியல்
முன்பே நான் சொன்னது போல சிங்கப்பூர் ஒரு வேடந்தாங்கல். பல கவிஞர்கள் அந்த நாட்டில் இலக்கியம் படைத்துவிட்டு பின்னர் ஊர் திரும்பியுள்ளனர். ராமேஷ் சுப்ரமணியம், கனிமொழி போன்றவர்கள் அதில் முக்கியமானவர்கள்.
நமது அண்டை நாட்டில் தமிழ் என்ற ஒரு பொதுமொழியில் இயங்கும் இவர்களின் ஆக்கங்களை வாசிப்பதும் அது குறித்துப் பேசுவதும் விவாதிப்பதும் நமது கடமையாகிறது. அதன் மூலமே ஊடகங்கள் சொல்லாத வாழ்வை நாம் அறிய முடிகின்றது. ஒரு தேசத்தை அறிவதென்பது தகவலை அறிவது மட்டுமல்ல கவிதைகளில் தொய்ந்திருக்கும் மனதினை அறிவதும்தான்.