‘ஜகாட்’ திரைப்படத்தை ஏன் திரையரங்கில் பார்க்க வேண்டும்… 3

சஞ்சை

சஞ்சை

கல்விச்சூழலை விமர்சிப்பதாக இதுவரை தமிழில் சில படங்கள் வந்துள்ளன. இதில் ‘சாட்டை’ மற்றும் ‘தங்கமீன்’ திரைப்படங்கள் மீண்டும் ‘வெற்றி’ எனும் போதை குறித்தே பேசுகின்றன. கெட்டிக்காரன் என்பவன் ஏதோ ஒன்றில் வெற்றிப்பெறுபவன் எனும் பழைய சூத்திரத்தைப் புதிய அம்மியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கும் படங்கள் அவை. அமீர் கானின் ‘taare zameen par’ மற்றும் ‘3 idiots’ இரண்டும் முக்கியமான திரைப்படங்கள். மிக கவனமாகக் கல்விச்சூழலின் மீது விமர்சனத்தை வைப்பவை. அமீர் கான் போன்ற கலைஞர்களால்தான் அது சாத்தியமாகிறது. அதற்கு மிக முக்கியக்காரணம் அரசியல் தெளிவுதான்.

மலேசியாவில் உள்ள இந்திய இயக்குனர்களிடம் சுத்தமாக அரசியல் சிந்தனை இல்லை என்பதை அவர்கள் திரைப்படங்கள் மூலமே அறியலாம். சிலரிடம் பேசும்போது ம.இ.காவைத்தவிர வேறு அரசியல் பிரச்னையே தமிழர்கள் மத்தியில் இல்லாதது போல பேசுவார்கள். இத்தனை அறிவு வரட்சியான மலேசியக் கலை உலகிலிருந்துதான் சஞ்சை போன்ற இயக்குனர்கள் உதயமாகியுள்ளனர். தமிழகத்தில் கல்விச்சூழலை விமர்சிப்பதாக எடுக்கப்பட்ட ‘சாட்டை’ மற்றும் ‘தங்க மீன்’ திரைப்படங்களில் இல்லாத தெளிவை இப்படம் கொண்டுள்ளது. மலேசிய இந்தியச் சமுதாயம் எந்த நேரமும் பென்ஸில் பயணம் செய்வதுபோன்று பாவலா காட்டும் மலேசிய இயக்குனர்களுக்கு மத்தியில் ஓர் அசலான வாழ்வை சஞ்சை காட்ட முயன்றுள்ளார்.

சஞ்சையை மிக முக்கியமான இயக்குனராக நான் கருத தனிப்பட்ட  உரையாடல்மூலம் கண்டடைந்த விடயங்கள் பல இருந்தாலும்,  அவர் பார்வை மலேசிய இந்தியத் திரைத்துறையின் வளர்ச்சியை ஒட்டி இருப்பது முக்கியக் காரணம். மலேசியாவில் இயக்கப்படும் திரைப்படங்கள் மலேசியப் படங்களாக இருக்க வேண்டுமே தவிர , அது தமிழகத்து சினிமா நகல்களாக இருப்பதை சஞ்சை முற்றாகத் தவிர்க்கிறார். வசனம், இசை, காட்சியமைப்பு என அத்தனையும் எவ்விதத்திலும் தமிழகப் படங்களை நினைவு படுத்தாவண்ணம் அவர் உருவாக்கிய விதம் முக்கியமானது. தன்னை மலேசிய கலைஞராக மட்டுமே அடையாளம் காட்ட விரும்பும் ஒரு தலைமுறையின் அழுத்தமான அடையாளமாக அவர் இருக்கிறார். அதை முன்னெடுக்கவும் இயக்க ரீதியாக (MICCAF – Malaysian Indian Creative Content Action Force) முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரத்திடம் குனிந்துகொண்டே கலை வெளிப்பாட்டில் புடுங்கிவிடுவேன் எனும் குரல்கள் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை. கலை என்பது ஓர் ஆயுதம் என்றால் அதை ஏந்தும் கலைஞன் மேல் எனக்கு எப்போதுமே அபரிதமான எதிர்ப்பார்ப்பு உண்டு.  சஞ்சை தனது முதல் திரைப்படத்தின் மூலம் அதை நிரூபித்துள்ளார். கற்றல் என்பதன் பொருள் தெரியாமல், தேர்வை நோக்கி ஓடும் கற்றல் முறையும் அதனால் புறக்கணிக்கப்படும் மாணவன் தன்னை நிரூபிக்க தேடிச்செல்லும் வன்முறை வழியின் மூலம் இன்றையக் கற்றல் முறையை விமர்சிக்கும் இயக்குனர், குண்டர் கும்பல் கலாச்சாரத்தில் நாம் யாராக இருக்கிறோம் ; யார் நம்மை பயன்படுத்துகிறார்கள் என்பதை மற்றுமொரு பகுதியில் விமர்சனமாக முன்வைக்கிறார்.

உண்மையில் தமிழ்ப்படங்களையும் அதன் சொல்முறையையும் மட்டுமே பார்த்துப் பார்த்து பழகியவர்களுக்கு ஓர் அசலான முயற்சி கொஞ்சம் ஏற்றுக்கொள்ள சிரமமாக இருக்கலாம். கமர்ஷியல் தன்மை குறைந்த (இல்லை என்று சொல்ல மாட்டேன்) காட்சிகள் மூலம் பார்வையாளனை ஒரு சாட்சியாக மாற்றும் போக்குக்கு ரசிகர்கள்தான் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

பொதுவாக திரைப்படத்தில் நான் அதிகம் கவனிப்பது அதன் அரசியல் நிலைபாட்டைதான். இசை, ஒளிப்பதிவு போன்றவை குறித்து பேச எனக்கு பயிற்சி இல்லை. ஆனால் பெரும்பாலும் அறிமுக நடிகர்களை மட்டுமே வைத்து இத்தனைச் சிறப்பான படத்தை உருவாக்கியது பாராட்டுக்குறியது.

வாழ்த்துகள் சஞ்சை குமார் மற்றும் குழுவினருக்கு…

17.12.2015 – ஜகாட் திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒளிபரப்பாகிறது.

(Visited 208 times, 1 visits today)

One thought on “‘ஜகாட்’ திரைப்படத்தை ஏன் திரையரங்கில் பார்க்க வேண்டும்… 3

  1. வெகு நாள் கழித்து மலேசியாவில் வெளியாகும் நல்ல தரமான படம்.. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

Leave a Reply to Kavikaadhali from Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *