உதயசங்கரின் நேர்காணல்; எதிர்வினை

Uthaya-Sankar-SB_webஉதயசங்கர் எஸ்.பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து கூறிய அவதூறுகளுக்கு இன்னும் அவர் மன்னிப்பு எதுவும் கேட்காத சூழலில் தொடர்ந்து தனது முகநூலில் இப்பிரச்சனை குறித்து பேசுபவர்களை நக்கல் அடித்து வருகிறார். பொதுவாகவே உதயசங்கர் போன்ற அற்பமான அடையாளத்தேடிகளின் பாணி அது. இந்நிலையில் அவரது நேர்க்காணல் ஒன்றை வாரப்பத்திரிகை ஒன்று தன் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளது. நடப்பு சூழல் குறித்து உதயசங்கர் சொல்லும் பதில்கள் அனைத்துமே பசப்பலானவையாக உள்ளது. உதயசங்கர் பதில்களின் அடிப்படையில் இடைக்கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டியது நேர்காணல் செய்தவரின் பொறுப்பு. ஆனால், நேர்காணல் இன்னும் அச்சுக்கு வராத சூழலில் முகநூலில் அவர் பகிர்ந்திருந்த பதில்களைக் கொண்டு நாம் சில எதிர்க்கேள்விகளைக் கேட்கவேண்டியுள்ளது.

பசப்பல் 1 :

முதலில் இந்த நேர்க்காணலில் தான் எல்லாத் தமிழ்ப்பள்ளிகளையும் அவதூறாகக் குறிப்பிடவில்லை என்றும் தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி கருத்துகளை வெளியிட்டதாகவும் கூறுகிறார். தொடக்கதிலிருந்தே உதயசங்கர் சொல்லிவரும் வாசகம் ‘எனக்குக் கிடைத்தத் தகவல்’ என்பதாகத்தான் இருக்கும்.

யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கலாம். ஆனால் கிடைக்கப்பெற்ற தகவலின் நம்பகத்தன்மை, உண்மை நிலவரம், தகவலுக்குப் பின் உள்ள உள் நோக்கம் என அனைத்தையும் ஆராய்ந்தப் பின்னரே அத்தகவலை ஒரு சமூக கருத்தாக்கி ஊடகங்களில் பதிவிட வேண்டியது பொறுப்பானவர்களின் செயல். உதாரணமாக, உதயசங்கர் தேசிய இலக்கியவாதி சமாட் சைட் அவர்களை ஒரு கருவாடு போல தமிழ்ப்பள்ளிகளின் கவனத்தைக் கவர பயன்படுத்தி அவர் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் நுழைந்து, தமிழ்ப்பள்ளிகளிடம் பெறும் சில நூறு ரிங்கிட்டை சமாட் சைட் அவர்களுக்கு இந்தப்பக்கம் கொடுத்துவிட்டு; அந்தப்பக்கம் தான் இலக்கியச் சேவை செய்வதாக அரசாங்கத்திடம் பணம் வாங்கிக்கொள்கிறார் என்ற தகவல் எனக்கும் கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தகவல் கிடைத்ததாலேயே அதை நான் செய்தியாக்குவதும் கட்டுரையாக்குவதும் வெறும் அவதூறு மட்டுமே. இந்தத் தகவலை ஆராய நான் சில பள்ளிகளை அணுகுவதும் , அவரை நேர்க்காணல் செய்வதும், தகவல் சொன்னவரிடம் தொடர் உரையாடல் நடத்துவது அவசியமாகிறது. ஆக, யாரோ சொன்ன தகவலின் அடிப்படையில் ஒரு கருத்தை சமூகத்தின் முன் வைக்கும் உதயசங்கர் எல்லா தகவலையும் அப்படிச் செய்யப்போவதில்லை. எந்தத் தகவலைக் கட்டுரையாக்குவது என்பது அவரது தேர்வு. இந்தத் தேர்வுக்கான காரணம் தமிழ்ப்பள்ளிகளின் மீது அவருக்கு உள்ள கசப்பன்றி வேறில்லை.

பசப்பல் 2 :

இரண்டாவதாக, தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் அனைத்தும், பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் இருந்து கிடைக்கப்பெற்றவை என்றும் பள்ளி பெயரை தான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், சிலாங்கூர் மாநிலத்திலும், பேராக் மாநிலத்திலும் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் கூறுகிறார். உதயசங்கர் எஸ்.பி மீண்டும் மீண்டும் தான் அரைவேக்காடு என்பதை இப்படித்தான் பேசி நிரூபிக்க வேண்டியுள்ளது. ஏதோ டீக்கடையில் அமர்ந்திருப்பவர் பேசுவதுபோலவே உதயசங்கரின் உளரல்கள் உள்ளன.

ஒரு பள்ளியைப் பற்றிய குற்றச்சாட்டை அப்பள்ளியின் பெற்றோர்கள் அவர்களுக்கு என்று இருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் தெரிவிக்க வேண்டும். யாரும் ஒரு இயக்கத்தைப், பள்ளியை, அல்லது தனிநபரைக் குறைச்சொல்ல / விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் அவையெல்லாம் செய்திகளாகும் என்றால் அதன் தரம்தான் என்ன? அவர் சொற்களைப் பாருங்கள். மாணவர்கள், பெற்றோர்கள் தன்னிடம் சொன்னார்கள் என்கிறார். சரி, இந்த மாணவர்களும் பெற்றோர்களும் தங்கள் குற்றச்சாட்டை எழுத்துப்பூர்வமாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமோ பள்ளி நிர்வாகம் மூலமோ தங்களுக்கு நடந்த அநீதியை தெரிவித்துள்ளார்களா? குறைந்தபட்சம் நாளிதழ்களில் எழுதியுள்ளார்களா? அப்படி ஏதேனும் ஆதாரம் உண்டா? அல்லது அந்த பெற்றோர்கள் தங்கள் புகார்களை மேலிடத்திற்கு முறைப்படி கொண்டுசெல்ல உதயசங்கர் உதவியிருக்கிறாரா? இல்லாத ஆதரத்தைக் காட்ட விரும்பவில்லை எனச்சொல்வதெல்லாம் மிக பழைய உத்தி என உதயசங்கருக்குப் புரியவில்லை. ஏதோ மொட்டைக்கடிதத்தை வைத்துக்கொண்டு அடையும் அற்பர்களின் பதற்றம் போலவே உள்ளது உதயசங்கர் பேச்சு.

பசப்பல் 3 :

மூன்றாவதாக இதே நேர்காணலில் கல்வி அமைச்சின் கீழ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலாய் புலமையை மேம்படச் செய்ய தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார். மேலும் மலாய் மொழியில் நம் மாணவர்கள் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள் என்றும் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

நல்லது, அப்படியானால் தேசியப்பள்ளியில் பயிலும் தமிழ்மாணவர்கள் அனைவரும் மலாய் மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெறுகின்றனரா? சரி தமிழ்மாணவர்களை விடுவோம், மலாய் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே மலாய் மொழிப்பாடத்தில் முழுத்தேர்ச்சி அடைந்துள்ளனரா? சீனப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களின் மலாய் மொழி தேர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறதா? ஆதாரம் உள்ளதா அவரிடம்? கடந்த மூன்றாண்டுகளில் வெளியான யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சி அறிக்கையில் தேசியப்பள்ளியில் மலாய் பாடத்தின் தேர்ச்சி விகிதத்தை ஆராய்ந்திருக்கிறாரா? இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் போது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் சிற்சில பின்னடைவுகளை பூதாகரமாகக் காட்டும் அவர் நோக்கம் என்ன? இரு காரணங்கள் இருக்க முடியும். ஒன்றாவது, அதன் மூலம் தமிழ்ப்பள்ளியை மட்டம் தட்டுவது. இரண்டாவது, தாங்கள் மட்டமானவர்கள் என சமூகத்தை நம்பவைத்து சமூகத்திற்குள் தான் நுழைந்து பணம் பண்ணுவது. அவரே ஒப்புக்கொண்டப்படி கல்வி அமைச்சின் மூலம் அவருக்குப் பணம் கிடைப்பது உறுதியாகிறது.

பசப்பல் 4 :

உதயசங்கர் என்ற மேதாவி நேர்க்காணலில் கூறியுள்ள மற்றுமொரு கருத்துதான் கூர்ந்து கவனிக்க வேண்டியது. தமிழ்ப்பள்ளி என்பது தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கும் ஒரு கல்விக்கூடமாம். அங்கு இந்து மதம் மட்டுமல்ல, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் படிக்கும் சூழல் உண்டு. ஆகையால் தமிழ்ப்பள்ளியைக் கல்விக்கூடமாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அங்கு எதிர்பார்க்கக்கூடாது என்கிறார்.

அப்படியானால் இதே கருத்தை உதயசங்கர் தேசியப்பள்ளிகளிலும் சொல்வாரா? இன்னும் சொல்லப்போனால் தமிழ்ப்பள்ளிகளில் இன்னமும் நன்னெறி என்ற மதசார்பற்ற பாடம் நடக்க தேசியப்பள்ளிகளில் மதபோதனை நடக்கிறது. அது எனக்கு தவறாகவும் படவில்லை. நெறியை வளர்க்கும் என்றால் மதத்தை முறையாகவே பயிலட்டும். ஆனால் அந்த வசதிகூட தமிழ்ப்பள்ளிகளில் இல்லை. தேசியப்பள்ளிகளிலும் பல்லின மாணவர்கள் பயில்கின்றனர். பல சமய மாணவர்கள் பயில்கின்றனர், ஆயினும் பாடத்திலேயே மதத்தைப் போதிக்க தேசியப்பள்ளியில் அனுமதி உண்டு. ஆனால், கூடுதலாக கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சொல்லிக்கொடுக்க தமிழ்ப்பள்ளிகள் கோயிலுக்குச் செல்லவேண்டும். என்னங்கடா உங்க நியாயம்?

பசப்பல் 5 :

மிக உத்தமாகராகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பும் அவர் நேர்க்காணலில், தான் தமிழ்ப்பள்ளிகளைப் புறக்கணிக்கவோ, ஒழித்துக்கட்டவோ இந்தக் கருத்தை வெளியிடவில்லை என்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், மலாய் மொழியில் புலமை பெறவேண்டும், அவர்களின் எதிர்காலத்தை ‘காப்பி’ என்ற ஒரு போலி அழித்துவிடக்கூடாது என்பதே அவரது நோக்கம் என்கிறார். இதன் மூலம் வேறு பள்ளிகளில் ‘காப்பி’ இல்லை எனச் சொல்ல வருகிறாரா? மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையைத் தமிழ்ப்பள்ளியை நோக்கி வீசக்காரணம் என்ன?

இறுதியாக

உண்மையில் உதயசங்கர் எஸ்.பி போன்றவர்களை நோக்கி இன்னும் எழுதுவது வீண்தான் என்பதை அறிவேன். சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் இவர்களின் உண்மையான முகத்தை சமுகத்தின் முன் காட்டவாவது மீண்டும் மீண்டும் இதைச் செய்ய வேண்டியுள்ளது. சமுதாயத்தலைவர்கள், தமிழ் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை என்ற துணைக்கருத்தை இதனுடன் இணைப்பதன் வழி அவர் பலரது வாயை அடைக்கப் பார்க்கிறார். அது இன்னுமொரு விவாவதம். பேசவேண்டிய விவாதமும் கூட. ஆனால், அந்த விவாதத்தை உதயசங்கர் தன் பாதுகாப்புக்காக பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். அவரை தமிழ்ச்சார்ந்த அனைத்து அமைப்புகளும் மறுப்பதும் அவர் நூல்களை தமிழ்ப்பள்ளிகள் வாங்காமல் புறக்கணிப்பதும், அவர் நடத்தும் பட்டறைகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதுமே குறைந்தபட்ச தன்மானம் உள்ளவர்களின் எதிர்ப்புக்குரலாக இருக்கும்.

(Visited 540 times, 1 visits today)

One thought on “உதயசங்கரின் நேர்காணல்; எதிர்வினை

  1. Saya dari Sekolah Tamil juga.
    Sekolah ladang.
    Tulisan pertama yg kami belajar ialah ‘அ’
    Perkataan pertama yg kami belajar ialah “அம்மா”
    Ayat pertama yg kami belajar ialah “அறம் செய்ய விரும்பு” bermaksud buat kebaikan/kebajikan untuk orang lain.
    Tak pernah cikgu-cikgu sekolah Tamil suruh kami tipu.
    Tak pernah cikgu-cikgu sekolah Tamil suruh kami tiru.
    Apa yg cikgu-cikgu sekolah Tamil suruh kami ialah, baca bersungguh-sungguh, jadi budak baik dan jgn buat jahat. Tu je.
    Walaupun sekolah Tamil miskin, budaya berjaya masih wujud akan tetap wujud.
    Kalau boleh, bantu sekolah Tamil. Kalau tak boleh biar la kami uruskan, jgn kutuk sudah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *